Published:Updated:

’இவன் கதையை முடிச்சுடுங்க!’

கொலையும் செய்வார் கவுன்சிலர்?

மிஷன், கட்டபஞ்சாயத்து இவற்றோடு ஆள்கடத்தல், அடிதடி போன்றவை கவுன்சிலர்​களின் அடையாளமாக மாறிப் போய்விட்டன. இந்த வரிசையில் ரவுடி ஒருவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் சிக்கியுள்ளார் கோவை மாநகராட்சி பி.ஜே.பி பெண் கவுன்சிலரான வத்சலா.

’இவன் கதையை முடிச்சுடுங்க!’

திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த மர வியாபாரி ஆறுமுகம். அடிதடி, மோசடி என இவர் மீது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருக்க... கடந்த சில ஆண்டுகளாக காவல் துறையின் ரவுடி பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறார். ஆறுமுகம், கடந்த 26-ம் தேதி பசுபதி என்பவருடன் கவுன்சிலர் வத்சலாவின் வீட்டுக்குச் சென்றார். பசுபதி காரிலேயே அமர்ந்திருந்தார். சற்று நேரத்தில், ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்க பசுபதி மேலே சென்று பார்த்தார். அங்கேதான் அந்தக் கோர சம்பவம் நடந்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பசுபதி அளித்த புகாரின் பேரில் கவுன்சிலர் வத்சலா, அவரது கணவர் வரதராஜ், உதவியாளர் இளங்கோவன் உட்பட பி.ஜே.பி நிர்வாகிகள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் கவுன்சிலர் வத்சலா, இளங்கோவன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

என்னதான் நடந்தது?

ஆறுமுகத்துடன் சென்ற பசுபதியிடம் கேட்டோம். ''26-ம் தேதி நானும் மாமாவும் வத்சலா வீட்டுக்குப் போனோம். நான் கார்லயே இருந்தேன். மாமா மட்டும் அவங்க வீட்டுக்குள்ள போனார். கொஞ்சநேரத்துல மாமா அலர்ற சத்தம் கேட்க, கார்ல இருந்து இறங்கிப்போய் பார்த்தேன். அப்போ மாமா அலறிகிட்டே ஓடிவந்தார். அவரை கவுன்சிலர் வத்சலா, அவரோட கணவர் வரதராஜன் உள்ளிட்ட சிலர் இரும்புக் கம்பியோட துரத்திட்டு வந்தாங்க. அப்போ என் மாமாவைப் பார்த்து, 'இவன் கதையை முடிச்சுடுங்க’னு கவுன்சிலர் சத்தம் போட்டார். அதுக்குள்ள சிலர் என் மாமாவை இரும்புக் கம்பியாலும் கையாலும் அடிச்சாங்க. நான் வர்றதைப் பார்த்துட்டு எல்லோரும் ஓடிட்டாங்க. உடனே ஆட்டோவுல மாமாவை பக்கத்துல இருக்குற ஆஸ்பிட்டலுக்குக் கொண்டு போனேன். ஆனா, ஏற்கெனவே மாமா இறந்துட்டதா டாக்டர் சொன்னாங்க. மேலே என்ன நடந்துச்சு? எவ்வளவு பணம் கொடுக்கணும்னு எல்லாம் எனக்குத் தெரியலை. ஆனா அவங்க அடிச்சது எனக்குத் தெரியும்' என்றார்.

கைது செய்யப்பட்ட வத்சலா, ''தொழில் ரீதியா கொடுக்கல், வாங்கல் சம்பந்தமா சிலர் என்னைப் பார்க்க வர்றாங்க. அப்படி வந்தவர்தான் ஆறுமுகம். அவருக்கும் எனக்கும் கொடுக்கல், வாங்கல் இருந்தது. நான் அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. பணம் கொடுக்க முடியாம போக என்னை மிரட்டினார். ரொம்ப மோசமா என்னை மிரட்டினதால அவரை வரவழைச்சு, அடிச்சு உதைச்சு மிரட்டி அனுப்பலாம்னு முடிவு பண்ணினேன். அதற்குத்தான் 26-ம் தேதி வீட்டுக்கு வரச்சொன்னேன். அப்பவும் பணம் கேட்டு என்னை மிரட்டினார். அதுல ஏற்பட்ட தகராறுலதான், நான், என் கணவர், இளங்கோவன் எல்லோரும் சேர்ந்து இரும்புக் கம்பியால அடிச்சோம். அவரு சாவாருன்னு நாங்க எதிர்பார்க்கலை!'' என்று சர்வ சாதாரணமாகச் சொன்னதாக போலீஸார் சொல்கிறார்கள்.

’இவன் கதையை முடிச்சுடுங்க!’

''ஆறுமுகம் மீதான இந்தத் தாக்குதல் எதிர்பாராம நடந்ததில்லை. முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் நடந்திருக்கு. கவுன்சிலர் வத்சலாவுக்கு ரொம்பவும்தான் தைரியம். மத்திய அமைச்சர், பி.ஜே.பி தலைவர் எல்லாம் வத்சலா வீட்டுக்கு வர்றதுனால அதை அவர் சாதகமாக்கிக்கிட்டாரு. தன்னை யாரும் எதுவும் கேக்க முடியாதுனு தைரியத்தோட இருக்காரு. ஆனா அதுதான் இப்போ அவரை சிக்கல்ல கொண்டு போய்விட்டிருக்கு. இந்தக் கொலைக்குப் பின்னால் வெறும் கொடுக்கல், வாங்கல் பிரச்னை மட்டுமே இல்லை. வேறு ஏதோ காரணம் இருக்கிறது!'' என்று சொல்கிறார்கள் சிலர்.

வத்சலாவுக்கும் ஆறுமுகத்துக்கும் என்ன பிரச்னை? எதற்காகப் பணம் கொடுக்க வேண்டும்? பணம்தான் பிரச்னைக்குக் காரணமா? சம்பவத்தின்போது பி.ஜே.பி நிர்வாகிகள் அங்கு இருந்தது ஏன்? என்கிற அடிப்படையில் பார்த்தால், போலீஸார் வழக்கு விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

’இவன் கதையை முடிச்சுடுங்க!’

''பி.ஜே.பியின் மாவட்ட பிரமுகர் உள்ளிட்ட பி.ஜே.பி நிர்வாகிகள் சிலர் அங்கிருந்தனர்னு சொல்றாங்க. ஆனா அதை உறுதிப்படுத்த முடியலை. ஆதாரத்துடன் அவங்க இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுச்சுனா அவங்க மேலயும் நடவடிக்கை எடுப்போம்'' என்றார் துடியலூர் இன்ஸ்பெக்டர் சரவணன்.

'வித்தியாசமான கட்சி’ என்று சொல்லிக் கொள்ளும் பி.ஜே.பியைச் சேர்ந்த ஒரு பெண் கவுன்சிலர் நடத்தைக்கு அந்தக் கட்சி என்ன விளக்கம் சொல்லுமோ?!

ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்