Published:Updated:

சிறையில் கணவன்... மனைவியுடன் குடும்பம் நடத்திய போலீஸ்!

ஒரு கொலையின் பின்னணியில் வெளிப்பட்ட அசிங்கம்!

பிரீமியம் ஸ்டோரி

காக்கிச்சட்டைக்கு காதல் வருவதில் தப்பில்லை. கள்ளக்காதல் வந்ததால்தான் அது கொலையில் முடிந்திருக்கிறது.  

புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் ரகுபதி. ஐ.ஆர்.பி.என் காவலரான இவர் காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் ஒன்றரை மாதக் கைக்குழந்தையும் இருக்கிறார்கள். இவர்களுக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது என்பதால், தமிழ்ச்செல்வி வாணரப்பேட்டையில் உள்ள தன் அம்மா வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி இரவு பணி முடிந்ததும் மனைவியையும் குழந்தையையும் பார்த்துவிட்டு தன் வீட்டுக்குக் கிளம்பியவர், அதன்பின் மாயமானார். தொடர்ந்து அவரது மொபைலும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எனவே, மறுநாள் 20-ம் தேதி மாலை வரை தேடிப்பார்த்துவிட்டு இரவு, ரகுபதியின் மனைவி முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் தன் கணவரைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார். அதன் பிறகு 19-ம் தேதி இரவு அவரது மொபைல் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆராய்ந்ததில், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்த  பிரபல ரவுடி நித்தியானந்தத்தின் மொபைல் எண் இருந்ததால் உஷாரானது காவல் துறை.

சிறையில் கணவன்... மனைவியுடன் குடும்பம் நடத்திய போலீஸ்!

நித்தியானந்தத்தின் மனைவியிடம் நடத்திய விசாரணையில், மர்மங்கள் அவிழ ஆரம்பித்தன. சிறையிலிருக்கும் தனது கணவர் நித்தியானந்தத்தைப் பார்க்க காலாப்பட்டு சிறைக்கு அவரது மனைவி சுகுணா செல்லும்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரகுபதியுடன் பழக்கமாகி உள்ளது. அது காதலாக மாறியதால் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளார்கள். இந்த நட்பு தொடர்ந்துள்ளது. ஜாமீனில் வெளியில் வந்த நித்தியானந்தத்துக்கு இது தெரிந்ததால், சுகுணாவின் மொபைல் போனின் கால் டீட்டெய்ல்ஸ் எடுத்துப் பார்த்திருக்கிறார். அதில் ரகுபதியுடனான தொடர்பு உறுதியானது. தன் மனைவியை மிரட்டி அவரை வைத்தே ரகுபதியை தன் வீட்டுக்கும் வரவழைத்திருக்கிறார். வீட்டில் காத்திருந்த நித்தியானந்தம் மற்றும் அவரது நண்பர்கள் ரகுபதியைத் தாக்கி காரில் கொண்டு சென்றுள்ளனர். அதன் பிறகு பிணமாகத்தான் ரகுபதியின் உடல் மீட்கப்பட்டது.

''சொன்னால் கேவலம். ஜெயில்ல ரொம்ப காலமா இப்படித்தான் நடந்துக்கிட்டிருக்கு. ஜெயில்ல டூட்டி பாக்கற பெரும்பாலான போலீஸ் இப்படித்தான் இருக்கிறார்கள். ரகுபதி இறந்ததால் இந்த விஷயம் வெளியில் வந்திருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் கைதிகளைப் பார்க்கவரும் உறவினர்களுக்கு உதவி செய்வதுபோல அவர்களிடம் போன் நம்பரை வாங்கி விடுவார்கள். அதன் பின்னர் அவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களிடம் நைசாகப் பேசிப் பணிய வைக்கப் பார்ப்பார்கள். பணியவில்லை என்றால் ஜெயிலில் இருக்கும் கைதியை ஏதாவது செய்துவிடுவோம் என்று மிரட்டி காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்கள். இதை வெளியில் சொன்னால் உள்ளிருக்கும் கைதிக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடும் என்பதால் உறவினர்களும் இதை யாரிடமும் சொல்வதில்லை. கைதிகளின் மனைவி மற்றும் உறவினர்களின் மொபைல் எண்களை வைத்துக்கொண்டு சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் மொபைல் கால் டீட்டெய்ல்ஸை உயர் அதிகாரிகள் எடுத்துப் பார்த்தால் இன்னும் பலரின் லட்சணங்கள் தெரியும்'' என்று ஆதங்கப்பட்டார் விசாரணைக் கைதியாக இருந்து விடுதலையான ஒருவர்.

சிறையில் கணவன்... மனைவியுடன் குடும்பம் நடத்திய போலீஸ்!

ரகுபதி கொலை வழக்கில் சரணடைந்தவர்கள், ''இந்த ஒரு போலீஸ்காரன் மட்டுமல்ல... உள்ளே கைதிகளாக இருக்கும் பலருடைய வீட்டிலும் போலீஸ்காரங்க சிலர் கை வெச்சிருக்காங்க. அந்தப் பட்டியலையும் எடுத்துட்டோம். கூடிய சீக்கிரம் அவங்க கதையையும் முடிக்க ஏற்பாடு நடந்துட்டு இருக்கு!'' என்று சொன்னதாகச் சொல்கிறார்கள்.

வழக்கை விசாரித்து வரும் திருநாவலூர் சிறப்பு உதவி ஆய்வாளர் ஞானகுமாரிடம் பேசியபோது, ''சென்னையில் சரணடைந்த குற்றவாளிகளை அழைத்து வந்து விசாரித்த பிறகே கொலை எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்பது குறித்து முழு விவரமும் தெரியவரும்'' என்றார்.

குற்றத்தின் பிறப்பிடம் போலீஸாக மாறிக்கொண்டு இருக்கிறது. மொத்தமாகச் சீரழிவதற்கு முன்னால் அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஜெ.முருகன், படங்கள்: அ.குருஸ்தனம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு