நாடு முழுவதிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 125 சுங்கச்சாவடிகளின் கட்டணங்களை ரத்து செய்துவிடுவோம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள 16 சுங்கச்சாவடிகளின் கட்டணங்களை உயர்த்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

தமிழகத்தில் மொத்தம் 41 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில், தனியார் வசம் 29 சுங்கச்​சாவடிகளும் நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 12 சுங்கச்சாவடிகளும் இயங்கி வருகின்றன. கடந்த வருடம் செப்டம்பர் மாதம், 25 சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இப்போது, மீதமுள்ள 16 சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கட்டண உயர்வை எதிர்த்து தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் முடிவெடுத்துள்ளது. அதன் தலைவர் கே.நல்லதம்பியிடம் பேசினோம்.

‘‘மத்திய அரசின் சாலைப்​போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்​சகத்தின் கீழ் இயங்கிவந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாகப் பிரிந்து, 1995-ல் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. எல்லா மாநிலங்​களையும் சாலைகள் மூலம் இணைத்து அதனை மேம்படுத்திப் பராமரிப்பது ஆணையத்தின் முக்கியப் பணி. சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்தையும் ஊக்குவிக்கத் தரமான சாலைகளை அமைத்துத் தரவேண்டியப் பொறுப்பு அவர்களுடையது. இதுபோன்ற சூழல்களில் மத்திய அரசானது நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து விதி​முறைகளுக்கு உட்பட்டு ‘டோல்​கேட்’களை நிறுவி தனியார் நிறுவனங்​களிடம் குத்தகைக்கு விட்டுவிடும். இந்த டோல்கேட்களைக் கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிக​மாகும்போது டோல் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. குத்தகை எடுத்த எந்தத் தனியார் நிறுவனங்​களும் அதைக் கடைப்பிடிப்பது இல்லை. மத்திய அரசை ஏமாற்றி தங்களுடைய லாபக்கணக்கை முற்றிலுமாக மறைத்துவிட்டு நஷ்டம் அடைந்து வருவதாகச் சொல்லி நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து இந்தக் கட்டண உயர்வு அனுமதியைப் பெற்​றுள்ளனர்.

டோல்கேட் கொள்ளை!

தமிழகத்தில் உள்ள 41 டோல்கேட்கள் மூலம் ஆண்டு ஒன்றுக்குத் தோராயமாக 14,200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், அதை அப்படியே மறைத்து ஆண்டுக்கு 9,600 கோடி ரூபாய்தான் வருவாய் ஈட்டியிருப்பதாகப் பொய்க் கணக்கு காட்டியிருக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தத் துறையின் அமைச்சராக இருந்தபோது தனியார் நிறுவனங்களுக்கு அவர் காட்டிய தாராளமே இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம்” என்று குற்றம்சாட்டினார் நல்லதம்பி.

டோல் கட்டணங்களின் உயர்வு ஒருபுறமிருக்க, நெடுஞ்சாலைகளின் தரம் எப்படி இருக்கிறது? ‘‘மற்ற எந்த மாவட்டங்களுக்கும் இல்லாத சிறப்பு, சேலத்துக்கு உண்டு. எந்தப் பக்கம் திரும்பினாலும் டோல்கேட்தான். டோல்கேட்டை கடக்காமல் சேலத்தில் இருந்து யாரும் வெளியேற முடியாது. சுருக்கமாகச் சொல்லப்போனால், டோல் கேட்களால் சேலம் மாவட்டமே சிறை வைக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் பா.ம.க-வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அருள்.

டோல்கேட் கொள்ளை!

“இந்த மாவட்டத்தைச் சுற்றி ஆறு டோல்கேட்கள் இருக்கின்றன. இரு வழிப் பயணத்துக்கு கார் ஒன்றுக்கு 115 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது, மற்ற இடங்களைக் காட்டிலும் மிக அதிகம். தலைவாசலில் இருந்து தர்மபுரி செல்ல பேருந்துக் கட்டணம் 100 ரூபாய்தான். ஆனால், டோல் கட்டணம் 450 ரூபாயைத் தொடுகிறது.

எல் அண்டு டி., எம்.வி.ஆர் மற்றும் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள்தான் இந்த டோல்கேட்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளன. மக்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை வைத்து சாலையை முறையாகப் பராமரிக்கிறார்களா என்றால், அதுவும் கிடையாது. தொப்பூர், ஓமலூர் ஆகிய இரண்டு டோல்கேட்களுக்கு உள்ளடங்கிய நெடுஞ்சாலைகள் படுமோசமாகி வருகின்றன. பொதுவாக, சாலைகள் பழுதாகிவிட்டால் அதனைத் தோண்டிவிட்டு புதுச்சாலையை போட வேண்டும். ஆனால், இவர்களோ வெறுமனே பேட்ச் வொர்க் மட்டும் செய்து எல்லோரையும் முட்டாளாக்கி வருகின்றனர். முறையான பராமரிப்பு, கழிப்பிட வசதி, தரமான சாலை இந்த மூன்றுமே கேட்பாரற்றுதான் கிடக்கின்றன” என்று ஆவேசப்பட்டார் அருள்.

ஒரு டோல்கேட்டில் இருந்து மற்றொரு டோல்கேட்டுக்கு 60 கி.மீ தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மாநகராட்சியில் இருந்து 10 கி.மீ தூரம் தள்ளித்தான் டோல் பூத் அமைந்திருக்க வேண்டும்.  இரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன் சாலைகள் தோண்டப்பட்டுப் புதிய சாலைகள் போட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன. ஆனால் அந்த விதிமுறைகள் எதையும், நெடுஞ்சாலை ஆணையமோ, குத்தகை எடுத்த நிறுவனங்களோ பின்பற்றுவது இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

டோல்கேட் கொள்ளை!

“போடாத நெடுஞ்சாலைக்காக கடந்த இரண்டு வருடங்களாக  நாங்கள் கட்டணம் செலுத்திக்கொண்டிருக்கிறோம்” என்று அதிர்ச்​சியைக் கிளப்புகிறார், வேலூர் மாவட்ட வணிகர் சங்கத்தலைவர் ஞா​னவேல். தொடர்ந்து அவர், ‘‘சென்னை வானகரம் - வாலாஜா தேசிய நெடுஞ்சாலையை எஸ்.எல் என்ற தனியார் நிறுவனம்தான் நிர்வகித்து வருகிறது. நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்படி அந்த நான்கு வழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அந்த நிறுவனமோ அதைச் செய்யாமல் 6 வழிச்​சாலையின் கட்டணத்தைப் பொது​மக்களிடம் இருந்தும் வணிகர்களிடம் இருந்தும் திருட்டுத்தனமாக வசூல் செய்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்​பாக பல புகார்களைக் கொடுத்திருந்தும் அந்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க யாரும் தயாராக இல்லை.

தற்போது, அதே டோல்கேட்டில் கட்டணம் இன்னும் கூடுதலாக அதிகரித்து இருக்கிறது. இது மறைமுகமாக விலைவாசி உயர்வில்தான் எதிரொலிக்கும். இதனால் பொதுமக்கள்தான் கடுமையாகப்
பாதிக்கப்பட போகிறார்கள். லாப நோக்கத்​தோடு கட்டணம் வசூல் செய்வது கிரி​மினல் குற்றம் செய்வதற்கு ஈடாகும். முன்பெல்லாம், சாலைகள் அமைத்து சில காலங்கள் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு பின்பு பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு செய்யப்படும். ஆனால், தற்போது அந்தக் காலமெல்லாம் மறைந்து பெரு நிறுவனங்களின் லாபவெறிக்கு பொதுமக்களே இலக்காக மாறி வருகின்றனர்.

டோல்கேட் கொள்ளை!

சாலைகளை ஒழுங்காகப் பராமரிப்பது கிடையாது. ஆனால், ஆண்டுக்கு ஆண்டு கட்டணங்களை மட்டும் உயர்த்திக்கொண்டே செல்வது எந்தவிதத்தில் நியாயம்? தற்போது மிளகாய் மூட்டை ஒன்றுக்கு, 40 ரூபாய் கொடுத்து வருகிறோம். டோல் கட்டணம் உயர்த்தப்பட்டால், மூட்டைக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. பள்ளிகொண்டா என்ற இடத்தில் ஒரு டோல்கேட் அமைந்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிமுறையின்படி பார்த்தால் அகரஞ்சேரி என்ற இடத்தில்தான் டோல்கேட் அமைந்திருக்க வேண்டும். ஆனால், வேண்டுமென்றே வாகன எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு கொள்ளை லாபம் பார்க்க பள்ளிகொண்டா அருகே டோல்கேட்டை அமைத்துவிட்டனர்” என்றார் அவர்.

தமிழக சட்டசபையில் இந்தத் திடீர் கட்டண உயர்வு குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ரங்கராஜன். அவரிடம் பேசினோம். ‘‘ஒட்டுமொத்தமாக அனைத்துத் தரப்பினரையும் அதிரவைக்கும் விஷயம் இது. இதனால் கடுமையாகப் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள் மட்டுமே. இதைத்தான் சட்டசபையில் கேள்வி எழுப்பினேன். அதற்குப் பதிலளித்த தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘தேசிய ஆணையத்தின் கீழ் வருவதால் இதற்கும் மாநில அரசுக்கும் சம்பந்தமில்லை’ என்றார். ஆனால், அது ஏற்புடைய பதில் அல்ல. இந்த விவகாரத்தில் மத்திய அரசை நிர்ப்பந்திக்க மாநில அரசு தவறிவிட்டது. உடனடியாக மாநில அரசு தலையிட்டு டோல் கட்டணங்களை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்” என்றார் உறுதியாக. 

அனைவருக்கும் தெரிந்தே நடக்கும் இந்தப் பகல்கொள்ளை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

- நா.இள.அறவாழி
படங்கள்: ச.வெங்கடேசன், ச.ஹர்ஷினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு