Published:Updated:

''எங்கள் பகுதியில் குண்டு வெடித்து 27 பேர் இறந்தார்கள்!'

இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் ரஹத்

''எங்கள் பகுதியில் குண்டு வெடித்து 27 பேர் இறந்தார்கள்!'

இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் ரஹத்

Published:Updated:

ராக், உக்ரைன், சிரியா, லிபியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, தற்போது அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மறைமுகமாக இருந்து வந்த பிரச்னை தற்போது பூதாகரமாகி உள்ளது. அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களை, அந்தந்த நாடுகளின் அரசுகள் தங்களின் ராணுவங்களை அனுப்பி திரும்ப அழைத்துக்கொண்டுள்ளன. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக அழைத்துவரப்பட்டு உள்ளனர். இன்னமும் அங்கு பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உள்ளனர். அவர்களைப் பத்திரமாக மீட்டுவர ‘ஆபரேஷன் ரஹத்’தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

''எங்கள் பகுதியில் குண்டு வெடித்து 27 பேர் இறந்தார்கள்!'

ஏமனில் நடக்கும் இந்த உள்நாட்டுப் போருக்கு என்ன காரணம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏமன் நாடு உருவானதில் இருந்து அதற்கு அதிபராக இருந்து வந்தவர் அலி அப்துல்லாஹ் சாலிஹ். இவரது ஆட்சியின்போது, அல்-கொய்தா அங்கு அசுர வளர்ச்சி அடைந்தது. அப்போது ஆட்சியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். அதன்பின்னர் ஏற்பட்ட கலவரங்களுக்குப் பிறகு, அவரது ஆட்சி கலைக்கப்பட்டு துணைக் குடியரசுத் தலைவராக இருந்த அப்துர்ரப் மன்சூர் ஹதி அதிபரானார். அவர், சவூதி மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். அங்கிருக்கும் அல்-கொய்தா படைகளை அழிக்க அமெரிக்காவுக்கு உதவி செய்தார்.

இந்த நிலையில், தற்காலிக இடைக்கால அரசும் சரியான முறையில் செயல்படவில்லை. ‘எங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவது கிடையாது’ என்று ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து, அரசுப் படைகளைத் தாக்கத் தொடங்கினர். கடந்த இரண்டு மாதங்களாக இந்தப் போர் தீவிரமடைந்து உள்ளது. முன்னாள் அதிபர்  சாலிஹ்கின் ஆதரவாளர்களும் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து போராடுகின்றனர். உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதிபர் ஹதி தனக்கு ஆதரவு அளிக்கும் அண்டை நாடான சவூதி அரேபியாவுக்குத் தப்பி ஓடிவிட்டார். கடந்த சில நாட்களில் வேகமாக முன்னேறிய கிளர்ச்சியாளர்கள், அதிபரின் மாளிகையை முற்றுகையிட்டனர். ஹவுத்தி படையினரை முறியடிக்க உதவுமாறு சவூதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தனர். இதைத்தொடர்ந்து வளைகுடா கூட்டுறவு கவுன்சில் களத்தில் இறங்கியது.

''எங்கள் பகுதியில் குண்டு வெடித்து 27 பேர் இறந்தார்கள்!'

சவூதி அரேபியப் படைகளுடன் கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ, பாகிஸ்தான் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன. ஏமன் தலைநகர் சனா மற்றும் கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட சவூதி அரேபியப் போர் விமானங்கள் அதிரடியாகக் குண்டு மழை பொழிந்தன. இதில், கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. இதுவரை 500-க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக ஏமன் அரசு தெரிவித்துள்ளது. அங்கு நடந்து வரும் போருக்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஏமனில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிய சோமசுந்தரம் என்பவரிடம் பேசினோம். ‘‘கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நான் ஹொடேடா என்ற இடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். பிரச்னைகளுக்கான சூழல் இருந்தாலும் மக்கள் அமைதியாகவே வாழ்ந்து வந்தனர். தலைநகர் சனா மற்றும் ஏடன் ஆகிய பகுதிகளில்தான் அதிக அளவில் தாக்குதல்கள் நடந்துவந்தன. எங்கெல்லாம் கிளர்ச்சியாளர்களின் படைகள் உள்ளனவோ, அங்கு ராணுவம் வான்வெளித் தாக்குதல் நடத்திவந்தது. எங்கள் நிறுவனம் அமைந்திருக்கும் பகுதியில் குண்டுகள் வெடித்ததில் 27-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். அதன்பின்புதான், அங்கிருக்கும் நமது தூதரகத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தோம். உடனடியாக ஐ.என்.எஸ் சுமித்ரா கப்பல்  மற்றும் போர் விமானங்கள் அனுப்பிவைக்கப்பட்டு எங்களை மீட்டு வந்தனர். ஏமனில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிய ஒவ்வோர் நொடியும் மறக்க முடியாதது’’ என்று திகிலுடன் சொன்னார்.

''எங்கள் பகுதியில் குண்டு வெடித்து 27 பேர் இறந்தார்கள்!'

தலைநகர் சனா உட்பட ஏமனின் பல பகுதிகளில் இன்னமும் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். அவர்களையும் பத்திரமாக அழைத்துவர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மா.அ.மோகன் பிரபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism