Published:Updated:

‘சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுங்க...’

சென்னையை மிரட்டும் குறிசொல்லும் கும்பல்

‘சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுங்க...’

சென்னையை மிரட்டும் குறிசொல்லும் கும்பல்

Published:Updated:

காவி வேட்டி, வெள்ளை சர்ட் அணிந்துவந்து குறிசொல்லும் போலி கும்பலிடம் ஏமாந்த ஒரு குடும்பத்தின் கதை இது.

‘சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுங்க...’

"காவி வேட்டி நெற்றி நிறைய குங்குமம், திருநீர் பட்டை போட்டு வெள்ளை சர்ட் காவி சர்ட் அணிந்து சென்னை வருகிறார்கள்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிந்தாதரிப்பேட்டை, தேவராஜ சரங்க சந்துவில் சீட்டுக்கட்டுகளைப்போல 50க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதில் ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் வாடகைக்கு 15 நாட்களுக்கு முன்பு குடிவந்துள்ளனர் சகோதரிகளான அங்கம்மா, சுந்தரி. தனியாக இருந்த இந்த மூதாட்டிகளிடம் தோஷம் கழிப்பதாகச் சொல்லி 6 சவரன் செயினையும், 1,500 ரூபாயையும் ஏமாற்றிவிட்டு தப்ப முயன்ற மூணு பேரை போலீஸார் கைதுசெய்து இருக்கிறார்கள்.

நடந்த சம்பவத்தை நம்மிடம் விவரித்தார் அங்கம்மாள், ''நானும், என்னுடைய தங்கச்சி சுந்தரியும் வீட்ல தனியா இருந்தோம்.

31ம் தேதி காலையில 11 மணிக்கு, காவி வேட்டி அணிந்திருந்த ஒரு சின்னப்பையன் கதவைத் தட்டினான். கதவைத் திறந்த சுந்தரிகிட்ட, 'உங்களுக்குத் தோஷம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறான்’ அந்தப் பையன். படுத்திருந்த என்னிடமும் விவரத்தைச் சொன்னாள் சுந்தரி. அதற்குள், '10 ரூபாய் கொடுங்க மேடம்... உங்க இருவருடைய தோஷத்தையும் ஒரு நிமிஷத்துல கழிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, 'சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுங்க’ என்று கேட்டான். சொம்ப கையில வாங்கினவன் ஏதோ மந்திரம் மாதிரி வாய்க்குள்ளேயே முனகினான். பிறகு, அந்தச் சொம்ப நீட்டி, 'இந்தத் தண்ணில தகடு இருந்தா, உங்களுக்கு யாரோ சூன்யம் வெச்சிருக்காங்கன்னு அர்த்தம். இல்லாட்டி ஒன்ணுமில்லை’ என்றான். சொம்புக்குள்ள கையவிட்டுப் பார்த்தபோது ஒரு தகடு இருந்துச்சு. அதப்பார்த்து எங்க இரண்டு பேருக்கும் பயம் வந்துடுச்சு. 'ஒண்ணும் பயப்பட வேண்டாம், மேடம்’ இந்தத் தோஷத்தைக் கழிக்க, '11 பூஜை பண்ணணும். ஒரு பூஜைக்கு 300 ரூபாய் செலவாகும்’ என்று சொல்லிக்கிட்டே வீட்டு பூஜை ரூமுக்கு வந்தான்.

அங்கே கொஞ்சம் புளி கொண்டு வரச் சொன்னவன், 'உங்க கழுத்துல கிடக்கிற செயின கழட்டுங்க. அதவெச்சுத்தான் பூஜை செய்யணும்னு... சொன்னான். அதனால, என்னுடைய 5 சவரன் செயினையும் சுந்தரியோட ஒரு சவரன் செயினையும் கழற்றிக் கொடுத்தோம். அந்த செயினை வாங்கி புளிக்குள்ள மறைச்சி சொம்புல வெச்சவன், 'மாலை 6 மணிக்கு எடுத்துப் பாருங்க... அதுக்கு முன்னாடி எடுத்தா தோஷம் போகாது’ என்றான். பூஜைக்கு தட்சணையாக 1,500 ரூபாய் கேட்டான். பணத்தைக் கொடுத்ததும் வாங்கிட்டுப் போய்விட்டான். எனக்குக் கொஞ்சம் டவுட் வந்ததால, பூஜை ரூம்ல இருந்த சொம்ப எடுத்துப் பார்த்தேன். உள்ளே செயின் இல்லை. அப்போதான் ஏமாந்தது தெரிஞ்சது. அந்தச் சமயத்துல காஸ் பையன் வரவும் அவன்கிட்ட, விவரத்தைச் சொல்லி அந்தப் பையனை பிடிக்கச் சொன்னேன். காஸ் பையனும் ஓடிப்போயி அவனைப் பிடிச்சுட்டு வந்தான். அதற்குள்ளே விவரம் தெரிஞ்சி தெருவுல எல்லாரும் கூடிட்டாங்க. அப்போதான் எங்க வீட்டுக்கு வந்த மாதிரி, இன்னும் இரண்டு பசங்க அங்க நின்னுட்டு இருந்​தாங்க. அவங்களையும் பிடிச்சி வெச்சுக்கிட்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தோம்.

போலீஸ் வந்து விசாரிச்சதுல, 'எங்ககிட்ட வாங்கின பணமும் செயினும் அவன்கிட்ட இருந்துச்சு. பிறகு, அவங்க மூணு பேரையும் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டுப் போய் விசாரிச்சதுல, அவனுங்க நிறைய பேருகிட்ட சீட்டிங் பண்ணி இருப்பது தெரிஞ்சது. எங்க வீட்டுக்கு எதிரில உள்ள ஓர் அம்மாகிட்டகூட 6,000 ரூபாயை சீட்டிங் பண்ணிட்டு போயிருக்காங்க. கொஞ்சம் சுதாரிச்சதால நாங்க தப்பிச்சோம்' என்று அங்கம்மாள் சொல்லி முடிக்க சுந்தரி பேசத் தொடங்கினார்.

‘சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுங்க...’

''அக்கா, சென்னை கார்ப்பரேஷன்ல மேனேஜரா இருந்து ரிட்டயர்டு ஆகிட்டாங்க. நாங்க ரெண்டு பேரும் வீட்டுல தனியாதான் இருக்கோம். அந்தப் பையன் கொஞ்ச நேரத்துல, எங்க ரெண்டு பேரையும் பிரெய்ன்வாஷ் செஞ்சிட்டான். அவன் சொன்னதுக்கு கட்டுப்பட்டு நாங்க செயினை கழற்றிக் கொடுத்துட்டோம். கண்மூடி வித்தை மாதிரி எங்க கண் முன்னாலதான் புளிக்குள்ள செயினை வெச்சான். ஆனா அத எப்படி எடுத்துட்டுப் போனான்னு தெரியல. முதல்ல ஜோசியம் பார்க்க எங்களுக்கு விருப்பமில்லை. இந்த வயசுல ஜோசியம் பார்த்து என்ன ஆகப்போகுதுன்னுதான் சொன்னேன்? ஆனா அந்தப் பையன்தான், விடாப்பிடியா அது... இதுன்னு சொல்லி வீட்டுக்குள்ள வந்து ஒன்றரை மணி நேரம் பூஜை செஞ்சான். முருகனுடைய சிலையையும், சிறிய வேலையும் எங்ககிட்ட கொடுத்தான். நாங்க அத வாங்கல. பிறகு சொம்புக்குள்ள இருந்து தகடு எடுத்தான். இப்படியெல்லாம் செஞ்சி எங்கள நம்ப வெச்சிட்டான். இவனைப்போல நிறைய பேரு தென்மாவட்டங்களிலிருந்து இங்குவந்து ஏமாத்திட்டு இருக்காங்க. அவன்மேல அக்காவுக்கு டவுட் வந்ததால எங்க நகை, பணம் தப்பிச்சிட்டு. இல்லன்னா அவ்வளவுதான்' என்றார் கண்ணீருடன்.

சிந்தாதரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், ''தகவல் கிடைச்சதும் ஸ்பாட்டுக்குச் சென்று மூணு பேரையும் பிடிச்சிட்டோம். மூணு பேரும் நெல்லை, அழகுநேரி போஸ்ட் கீழக்கரையைச் சேர்ந்தவங்க. அவனுங்க பேரு மிக்கேல், அந்தோணி, செந்திலுன்னு தெரிஞ்சது. திருவள்ளூர் அருகே உள்ள புட்லூருல தங்கி இருந்து சென்னையில வந்து இப்படி ஏமாத்திருக்கானுங்க. கிடைச்ச பணம், நகைகளை பங்குபோட்டுக் கொள்வானுங்களாம். வேறு எங்காவது இந்த மாதிரி ஏமாத்திருக்கானுங்களானு விசாரிச்சிட்டு இருக்கோம்' என்றார்.

போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ''நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்த 20 வயதில் இருந்து 35 வயதுக்கு உள்ளான ஒரு கும்பல் திருவள்ளூர் புட்லூரில் ரூம் எடுத்து தங்கி இருந்து இந்த மாதிரி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். காவி வேட்டி, நெற்றி நிறைய குங்குமம், திருநீர் பட்டை போட்டு வெள்ளை சர்ட், காவி சர்ட் அணிந்து சென்னை வருகிறார்கள். இரண்டு அல்லது மூன்று பேர் ஒரு குரூப்பாக ஒவ்வோர் இடமாகச் சென்று தோஷம், குறி சொல்வதாகக் கூறி நிறைய பேரை ஏமாத்துவது இவர்களது வேலை. ஆனால் யாரும் புகார் கொடுக்கவில்லை. சிந்தாதரிப்பேட்டையிலதான் முதலில் இவர்கள் மேல் கம்ப்ளைன்ட் வந்துள்ளது. கைதானவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால், இந்தக் கும்பலைக் குறித்த முழுவிவரம் தெரியவரும். இதில், சிலருடைய தந்தை, தாத்தா இந்தத் தொழிலைச் செய்து இருக்கிறார்கள். அந்த அனுபவத்தை வைத்து இவர்கள் செய்வினை, சூன்யம் போன்ற மாந்திரிகத்தில் நம்பிக்கை உள்ளவர்களிடம் ஏமாற்றி வந்துள்ளனர். இந்த மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டவுடன் இவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினர், புகார் கொடுக்க வந்தனர். இவர்களிடம் ஏமாந்தவர்கள் சென்னையில் நிறைய பேர் இருப்பதுபோல தெரியவந்துள்ளது'' என்றனர்.

உங்கள் வீட்டுக்கும் வரலாம் உஷார்!

எஸ்.மகேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism