Published:Updated:

‘இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’

மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி?

‘இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’

மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி?

Published:Updated:

மிழகத்தில் பருப்பு ஊழல், ஆவின் பால் ஊழல், தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஊழல் என ஒவ்வோர் ஊழலாக வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பது மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தில் நடக்கும் ஊழல்.

விழுப்புரம் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 2,559 பெண்கள் தைக்கும் சீருடைகள்தான், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு விநியோகமாகிறது. அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் பள்ளிச் சீருடையைத் தயாரிக்கும் கூட்டுறவுச் சங்கத்தில் நடக்கும் அடிமைத்தனங்களும் ஏற்றத்தாழ்வுகளும் ஊழல்களும் உறுப்பினர்களைப் பெரும் வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதுடன், தவற்றைத் தட்டிக்கேட்பவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படும் அடாவடிகளும் அரங்கேறி வருகின்றன.

நீக்கப்பட்ட உறுப்பினர் கல்யாணி, ‘‘ இந்தச் சங்கம், சிறப்பு அதிகாரி ஜெய்சிங்கோயில் பிள்ளை பொறுப்பேற்ற பிறகு, சில நூறு பேர் மட்டும் கொழிக்கும் சங்கமாக மாறிவிட்டது. சிறப்பு அதிகாரிக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் சாதகமான உறுப்பினர்களுக்கும் கூலியாக, 43 ரூபாய் கிடைக்கக்கூடிய பேன்ட்டையும் 20 ரூபாய் கிடைக்கக்கூடிய சட்டையையும் தைக்க ஒதுக்குகிறார்கள். மற்றவர்களுக்கு, 4 ரூபாய் கிடைக்கக்கூடிய ஷாலையும் 13 ரூபாய் கிடைக்கக்கூடிய கால் சட்டையையும் மட்டுமே ஒதுக்குகிறார்கள். எங்களைப் போன்ற சாதாரண உறுப்பினர்கள் மூன்று மாதங்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.6,000 வரைதான் கூலியாகப் பெறுகிறோம். ஆனால் சிலர், அதிகாரியின் உதவியால் மூன்று மாதங்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை கூலியாகப் பெறுகிறார்கள். ஒரே நபர் 20, 30 உறுப்பினர் அட்டைகளை வைத்துக்கொண்டு மொத்தமாகக் கொள்ளையடிப்பதும் நடக்கிறது’’ என்றார் விரக்தியுடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’

மற்றோர் உறுப்பினர் மீனாட்சி, ‘‘இதில் உறுப்பினராகச் சேர எந்தத் தகுதியும் இல்லாமல் இருந்தாலும் நிர்வாகிகளிடம் ரூ.10,000 கொடுத்துவிட்டு உறுப்பினராகும் அவலம் நடக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்குத் துணி காஜா எடுக்கக்கூட தெரியாது. மூன்று மாதம் தைப்பதற்குத் துணி கொடுத்தால், அடுத்த மூன்று மாதங்களுக்குத் துணியை தர மறுக்கிறார்கள். கேட்டால் துணி வரவில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். கடந்த மூன்று வருடங்களாக ஆதிதிராவிட, மலைவாழ் மாணவ - மாணவிகளுக்குத் துணிகள் தரப்படுவதே இல்லை.

அரசு விதிப்படி, ஒரு சட்டை தைக்க இரண்டு மீட்டர் துணி தரவேண்டும். ஆனால், ஒண்ணே முக்கால் மீட்டர் மட்டுமே கொடுத்துவிட்டு மீதமுள்ள துணிகளை கள்ளச்சந்தையில் விற்றுவிடுகிறார்கள். இதனால் மாணவர்களுக்குச் சரியான அளவில் சீருடை இருப்பதில்லை. இந்த எல்லா முறைகேடுகளுக்கும் சிறப்பு அதிகாரி ஜெய்சிங்கோயில் பிள்ளையும் சங்க நிர்வாகிகளும்தான் காரணம். ஊழல் குறித்து சிறப்பு அதிகாரியிடம் கேட்டால், ‘அமைச்சர் வளர்மதியே என் பக்கம்தான். உங்களால் என்ன செய்யமுடியும் என்று மிரட்டுகிறார்? அதனால் முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார் அனுப்பினோம். அதை மனதில் வைத்துக்கொண்டு மனு அனுப்பிய எங்களை சங்கத்தில் இருந்தே நீக்கியது மட்டுமல்லாமல், நாங்கள் நீக்கப்பட்டதை அறிவிப்புப் பலகையில் எழுதி, ‘இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை’ என்று மற்றவர்களையும் மிரட்டுகிறார்கள்’’ என்றார். 

குற்றச்சாட்டுகள் பற்றி சிறப்பு அதிகாரி ஜெய்சிங்கோயில் பிள்ளையிடம் கேட்டபோது, ‘‘நான் இந்தச் சங்கத்தை கூடுதல் பொறுப்பாகத்தான் கவனித்து வந்தேன். தற்போது நான் திருச்சிக்கு மாறுதலாகிவிட்டதால், விழுப்புரம் மாவட்ட சமூகநலத் துறை அதிகாரி லலிதாதான் கவனித்துக்கொள்கிறார். அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்’’ என்றார்.

சமூகநலத் துறை அதிகாரி லலிதாவிடம் பேசினோம். ‘‘விழுப்புரம் மாவட்ட தையல் கூட்டுறவு சங்கம் சிறப்பாகச் செயல்பட்டதால், கடந்த ஆண்டு தமிழக அரசு விருது வழங்கியது. ஊழல் நடந்திருந்தால், விருது கிடைத்திருக்குமா? சிறப்பு அதிகாரி ஜெய்சிங்கோயில் பிள்ளை பொறுப்பேற்ற பிறகு, நிறைய மாற்றங்களைச் செய்து சங்கத்தை மேம்படுத்தினார்.

2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினராக இருக்கும் இந்தச் சங்கத்தில் சிலர் மட்டும் தேவையில்லாத குழப்பத்தை உருவாக்குகின்றனர். 2013-ல் நடந்த சங்க நிர்வாகி தேர்தலில் போட்டியிட்டு கல்யாணி தோல்வியடைந்தார். அந்த விரக்தியில் பொய் புகார்களைக் கொடுத்து வருகிறார்கள். அவர்களின் புகாரை நான் முழுமையாக விசாரித்துவிட்டேன். அதில் துளியும் உண்மை இல்லை. பொய் புகார் கொடுத்ததற்கு மன்னிப்புக் கடிதம் தந்தால், மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்வதாக நிர்வாகக் குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். ஆனால், இவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுக்க மறுக்கின்றனர்’’ என்றார்.

நெருப்பு இல்லாமல் புகையுமா?
 

- ஆ.நந்தகுமார், படம்: தே.சிலம்பரசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism