Published:Updated:

‘‘எங்கோ சுட்டு இங்கு கொண்டுவந்து போட்டுள்ளார்கள்!”

ஆதாரங்களை அள்ளிவைக்கிறார் தடய அறிவியல் சந்திரசேகரன்

‘‘எங்கோ சுட்டு இங்கு கொண்டுவந்து போட்டுள்ளார்கள்!”

தோல் உரிக்கப்பட்ட கைகள், கருக்கப்பட்ட உடல், அடித்துத் துன்புறுத்திய காயங்கள் என்று திருப்பதியில் கொல்லப்பட்ட தமிழர்களின் உடலில் அத்தனை ரணங்களும் ஆதாரங்களாக இருக்கின்றன. ஆனாலும், ‘செம்மரம் வெட்ட வந்தவர்களை சுட்டோம்’ என்று தொடர்ந்து சாதித்து வருகிறது ஆந்திர அரசு.

இந்தச் சூழலில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடங்கி பல முக்கிய க்ரைம் சம்பவங்களில் தடய அறிவியல் மூலமாக குற்றவாளிகளைப் பிடிக்கக் காரணமாக இருப்பவர் டாக்டர் பேராசிரியர் சந்திரசேகரன். தடய அறிவியல் துறையின் முன்னாள் இயக்குநர் இவர். திருப்பதி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆய்வு விசாரணை செய்து வருகிறார் சந்திரசேகரன். நமது புகைப்படக்காரர் சம்பவ இடத்தில் பல்வேறு கோணங்களில் எடுத்த புகைப்படங்களை சந்திரசேகரனுக்கு அனுப்பி வைத்தோம். அவற்றை நன்கு ஆய்வு செய்துவிட்டு நம்மிடம் பேசினார் சந்திரசேகரன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘‘எங்கோ சுட்டு இங்கு கொண்டுவந்து போட்டுள்ளார்கள்!”

‘‘இது அப்பட்டமான படுகொலை என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஜூ.வி-யில் இருந்து எனக்குக் கொடுத்த புகைப்படங்களை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்துவிட்டேன். அதில் பல உண்மைகள் தெரியவந்துள்ளன. மனித உரிமை மீறல்கள் நிறைய நடந்துள்ளன. இது ஒரு போலி என்கவுன்டர் என்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. ஓர் உடல் அருகே செல்போன் இருக்கிறது. இதைப்போல, எத்தனை உடலருகே செல்போன் இருந்ததோ? இது எப்படியோ அந்த போலீஸார் கண்ணில்படவில்லை. இறந்தவர்களின் உறவினர்களிடம் யாரெல்லாம் கடைசியாகப் பேசினார்கள் என்பதை ஆராய்ந்தாலே பல உண்மைகள் வெளி வரும். அவர்கள் எங்கே இருந்தார்கள்? எந்தெந்த டவரில் அவர்களின் போன் எண்கள் கடைசியாகச் செயல்பட்டன என்பதை விசாரிக்க வேண்டும். பல உடல்களைப் பார்க்கும்போது, தரையில் தரதரவென இழுத்து வந்து அங்கே போட்டதற்கான மண் தடயங்கள் தெரிகின்றன.

‘‘எங்கோ சுட்டு இங்கு கொண்டுவந்து போட்டுள்ளார்கள்!”

பொதுவாகவே, கொலை செய்யப்பட்டாலோ, சித்ரவதை செய்யப்பட்டாலோ அந்த உடல் துடிக்கும். உயிர் பிரியும்போது நடக்கும் மரணப் போராட்டம் கொடூரமானது. அந்தக் கடைசி நேரத் துள்ளல் இங்கே இல்லை. மரணப் போராட்டமும் நடக்கவில்லை. அப்படி நிகழ்ந்திருந்தால் உயிர் பிரியும்போது, உடல் ஒருநிலையில் இருக்காது. வேறுவேறு நிலையில் உடல் தலைகுப்புற சுருண்டு கிடக்கும். ஆனால், திருப்பதி ஸ்பாட்டில் பெரும்பாலான உடல்கள் மல்லாக்க கிடக்கின்றன. இதற்கு வாய்ப்பே இல்லை. வேறு எங்கோ கொன்றுவிட்டு, இந்த ஸ்பாட்டில் கொண்டுவந்து உடல்கள் கிடத்தப்பட்டுள்ளன.

‘‘எங்கோ சுட்டு இங்கு கொண்டுவந்து போட்டுள்ளார்கள்!”

சிவப்பு பனியன் அணிந்த ஓர் உடலில் முதலில் துப்பாக்கி பானட்டால் நெஞ்சில் குத்தி பனியனை கிழித்திருக்கிறார்கள். அதற்கான காயங்கள் தெரிகின்றன. பிறகுதான், மிகவும் நெருக்கத்தில் வந்து சுட்டிருக்கிறார்கள். இன்னோர் உடலின் தலை சிதறி கிடக்கிறது. இதுவும் மிக அருகிலிருந்து சுடப்பட்டதுதான்.

உடல்கள் அருகில் கிடக்கும் மரத்தின் வயது, தன்மையை உன்னிப்பாகக் கவனித்தேன். சுற்றுவட்டாரத்தில் ஐந்து கி.மீ. தொலைவுக்கு செம்மரங்களே இல்லை. உடல் கிடந்த இடத்திலும் பாதியில் வெட்டப்பட்ட வேர் பகுதிகள் எங்கும் இல்லை. இதை வைத்துப் பார்க்கும்போது, தமிழர்களை கொன்ற பிறகு, வேறு எங்கிருந்தோ கட்டைகளை தூக்கி வந்து உடல் அருகே போட்டு செட்டப் செய்திருக்கிறார்கள். ஒருவேளை, தமிழர்கள் தலைச்சுமையாக மரங்களைத் தூக்கி வந்ததாகவே வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், தலையில் வைக்கும் ‘சும்மாடு’கள் சிதறிக்கிடக்கும் அல்லவா? அவை எங்கேயும் இல்லையே? வெறும் தலையிலா மரத்தைத் தூக்கி வந்தார்கள்? சில மரங்களின் புகைப்படங்களைப் பெரிதுபடுத்தி பார்க்கும்போது, அவற்றில் தெலுங்கு எழுத்துகள் காணப்படுகின்றன.

‘‘எங்கோ சுட்டு இங்கு கொண்டுவந்து போட்டுள்ளார்கள்!”

சில மரங்களில் இருந்த எழுத்துகளை அழித்திருப்பதற்கான தடயங்கள் தெரிகின்றன. அப்படியென்றால், முன்பு எப்போதோ கைப்பற்றப்பட்டு வனத் துறையின் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த செம்மரக் கட்டைகளை அவசர அவசரமாகத் தூக்கிவந்து, எழுத்துகளை அழித்து கொல்லப்பட்ட உடலுக்கு அருகே போட்டிருக்கிறார்கள். ‘கற்களைக் கொண்டு தாக்கியதால்தான் சுட்டோம்’ என்று போலீஸ்தரப்பில் சொல்கிறார்கள். அந்த இடத்தில் கற்களே தென்படவில்லை.

ஒருவரின் உடலில் தலைக்காயம் பெரியதாக உள்ளது. ஏதோ பலமான ஆயுதத்தால் தாக்கியிருக்கிறார்கள். அதனாலே, அவர் இறந்திருக்க வேண்டும். உயிர் போனபின்பு, அந்த உடலின் வயிற்றில் வேட்டைத் துப்பாக்கியின் முனையை அழுத்திச் சுட்டிக்கிறார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், துப்பாக்கிக் குண்டுடன் சேர்த்து புகை, துகள்கள் அனைத்தும் குண்டு பாய்ந்த காயத்தில் புகுந்திருக்கின்றன. அதனால்தான், அந்தக் குறிப்பிட்ட இடம்  கறுத்து காணப்படுகிறது. தூரத்தில் இருந்து சுட்டிருந்தால், இப்படி நிகழ வாய்ப்பில்லை. இப்படித்தான், பெரும்பாலானவர்களை மிக அருகில் நின்று சுட்டிருக்கிறார்கள் என்பதற்கான தடயங்கள் தெரிகினறன.

‘‘எங்கோ சுட்டு இங்கு கொண்டுவந்து போட்டுள்ளார்கள்!”

ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் அரைக்கால் டிராயர், ஜட்டி ஆகியவற்றைத்தான் அணிந்திருக்கிறார்கள். அநேகமாக, இவர்கள் அனைவரும் எங்கோ ஒரே இடத்தில் தூங்கிக்கொண்டிருக்க வேண்டும். அப்போது சுற்றிவளைத்த போலீஸ் கும்பல் தப்ப முடியாதபடி சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள். ஒருவரை சுடும்போது, சத்தம் கேட்டு மற்றவர்கள் அங்கிருந்து தப்பி  ஓடியிருக்கலாம். அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

எனக்குக் கிடைத்த தகவல்படி, இது ஒரு மாஸ் படுகொலை. 20 பேர்களைத் தவிர, மேலும் பலர் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களின் உடல்களை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஸ்பாட்டில் நீல நிற பிளாஸ்டிக் பை, காட்போர்டு அட்டை பாக்ஸ் இரண்டிலும் ஸ்பாட்டில் கிடந்த பொருட்களை அள்ளி வைத்திருக்கிறார்கள். ஆங்காங்கே குவியல் குவியலாகச் செருப்புகளும் கிடப்பதை போட்டோவில் பார்த்தேன். இவை இரண்டும் முக்கியத் தடயங்கள். செருப்புகளை போட்டிருந்தவர்கள் யார்? யார்? என்று விசாரிக்கவேண்டும். வெளியில் இருந்து வந்தவர்களின் செருப்புகளாகக்கூட இருக்கலாம். நீல நிற பிளாஸ்டிக் பையில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் இறந்துவர்களுடையதுதானா என்று தெரியாது. வெளியில் இருந்து வந்தவர்களின் பொருட்களும் இருக்கலாம் அல்லவா?

உதாரணத்துக்கு, மரக்கட்டை ஒன்றின் கீழே என்று பச்சை நிற பாக்கு கவர்கள் கிடக்கின்றன. இது பாக்குப் பொட்டலமாக இருக்கலாம். இதைப் பயன்படுத்தியது யார் என்பதுதான் கேள்வி? இறப்பதற்கு முன்பு தமிழர்கள் பயன்படுத்தினார்களா அல்லது ஆந்திர போலீஸ்காரர்கள் பயன்படுத்தினார்களா என்று விசாரிக்க வேண்டும். அதை எங்கே வாங்கினார்கள்? எப்போது வாங்கினார்கள்? அதில் உள்ள தேதி விவரங்களை ஆராய வேண்டும். நானும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். தினம்தினம் புதுப்புது ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. அவற்றையும் விரைவில் வெளியிடுவேன்’’ என்று சொல்லி முடித்தார்.

சந்திரசேகரன் செய்ததை தமிழக அரசு செய்திருக்க வேண்டும்!

- ஆர்.பி. படங்கள்: ச.வெங்கடேசன்