Published:Updated:

யாருக்காக... இது யாருக்காக..?

பேருந்து பகீர் !

‘‘கடந்த மூன்று ஆண்டு காலத்தில், 1,476 புதிய வழித்தடங்கள் தொடங்கி வைக்கப்பட்டதோடு, 4,649 புதிய பேருந்துகள், 712 புனரமைக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் 107 மினி பேருந்துகள் வாங்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தமிழக போக்குவரத்துத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலம் முழுவதும் 20,684 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக 1,200 புதிய பேருந்துகள் வாங்கப்படும்’’ - இது 2014-ம் வருடம் ஜூலை மாதம் சட்டமன்ற கூட்டத்தில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சொன்னது.

யாருக்காக... இது யாருக்காக..?

இதைத்தொடர்ந்து, 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பகோணம் டெப்போவுக்கு 44 புதிய பேருந்துகள் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் வழித்தடங்களில் இயக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. பேருந்துகளை இயக்குவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கும்பகோணம், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை பஸ் டெப்போக்களில் தலா 11 பேருந்துகள் இயக்குவதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் தொடக்கவிழா நடத்துவதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் தேதி வாங்குவதாக சொல்லியிருந்தார்கள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதானதால் புதிய பேருந்துகள் தொடக்கவிழாவும் அப்படியே டெப்போவில் சிறை வைக்கப்பட்டிருக்கிறது. மதுரையில் 105, சென்னை குரோம்பேட்டையில் 70 என தமிழகத்தின் பல்வேறு டெப்போக்களில் காத்திருக்கும் பேருந்துகள் ஏராளம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
யாருக்காக... இது யாருக்காக..?

ஆங்காங்கே உள்ள டெப்போக்களின் குப்பைக் கூளங்கள், காலாவதியான போக்குவரத்துத் துறை கருவிகள் மற்றும் பொருட்கள் கொட்டிவைக்கப்பட்டிருக்கும் பகுதியில் புதிய பேருந்துகள் அநாதையாக நிற்கின்றன. கோடிக்கணக்கில் செலவுசெய்து வாங்கிய பேருந்துகள் இயக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

புதுக்கோட்டை போக்குவரத்துக் கழகத்தின் தொ.மு.ச பொதுச்செயலாளர் வேலுசாமி, ‘‘நான்கு மாதங்களுக்கு முன்பு எங்கள் பணிமனைக்கு ஐந்து புதிய பேருந்துகள் வந்தன. அனைத்துமே சூப்பர் டீலக்ஸ் பேருந்துகள். புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட வேண்டியவை. இங்கு வந்திருக்கும் ஐந்து பேருந்துகளுக்கும் பாடி கட்ட ஏகப்பட்ட ரூபாய் செலவாகி இருக்கும். ஒரு பேருந்து இயக்குவதற்கு தயாரான பிறகு இத்தனை மாதங்கள் நிறுத்தி வைத்திருப்பது மேலும் நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தும். பேருந்துகளில் இருக்கும் உதிரிபாகங்களையும் மீண்டும் ஆய்வுசெய்ய வேண்டும். இத்தனை மாதங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், பழுதடைவதற்கு வாய்ப்பிருக்கிறது. இருக்கைகளைப் புதிதாக மாற்றினால்தான் அமர்ந்து பயணம் செய்ய முடியும். மழையிலும், வெயிலிலும் நிறுத்தப்பட்டிருப்பதால் பேருந்துகள் துருப்பிடிக்கத் தொடங்கி​விட்டன. அனைத்துமே போக்குவரத்துக் கழகத்தின் சொத்து. இப்படி வீணடித்து வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் எந்த பதிலையும் சொல்ல மறுக்கிறார்கள்’’ என்றார்.

யாருக்காக... இது யாருக்காக..?

சி.பி.எம் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினரான சின்னை.பாண்டியன், ‘‘கும்பகோணத்தில் இருக்கும் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில்  மட்டும் ஏழு பேருந்துகள் பதிவு செய்தும், ஏழு பேருந்துகள் பதிவு செய்யாமலும் நிற்கின்றன. இங்கு மட்டுமல்ல; நாகப்பட்டினத்தில் மூன்று பேருந்துகள் நின்றுகொண்டிருக்கின்றன. அதோடு, தமிழகம் முழுவதும் ஏராளமான பேருந்துகளை இப்படி நிறுத்தி வைத்துள்ளார்கள். கேட்டால், ‘ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வந்தால்தான் இயக்க முடியும் என்கிறார்கள். கும்பகோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள், பழனி போன்ற வெகு தூரத்துக்கு செல்ல வேண்டிய பேருந்துகள். இதனால் பொதுமக்கள்தான் கஷ்டப்படுகிறார்கள்’’ என்றார்.

கோவையைச் சேர்ந்த தொ.மு.ச பொதுச் செயலாளர் மு.சண்முகத்திடம் பேசினோம். “கோவையில் மட்டும் 28 புதிய பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளனர். பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட பேருந்துகளை இப்படி முடக்கி வைப்பதால் யாருக்குப் பயன்? பாதிப்பு பொதுமக்களுக்குத்தான். இதை அரசாங்கம் உணர வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

யாருக்காக... இது யாருக்காக..?

காஞ்சிபுரத்தில் பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளிடம் பேசினோம். ‘‘எங்கள் பணிமனைக்கு 10 புதிய பேருந்துகளும் ரீபாடிபில்டிங்குக்்காக 2 பேருந்துகளும் வந்துள்ளன. 6 மாதங்களுக்கு முன்பே அனைத்து வேலைகளும் முடிந்து பேருந்துகள் தயாராகிவிட்டன. இந்தப் பேருந்துகள் அனைத்தும் புஷ்பேக் சீட்டுகள் உள்ள சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசுப் பேருந்துகள். கிழக்குக் கடற்கரை சாலை மற்றும் தாம்பரம் போன்ற பகுதிகளுக்கும் அவை இயங்கப்பட இருந்தன.

யாருக்காக... இது யாருக்காக..?

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திடீரென கைதானதால், அத்தனை பேருந்துகளும் அப்படியே வெயிலிலும் மழையிலும் நின்று கொண்டிருக்கின்றன. இதனால் பேருந்துகள் துருபிடிக்கத் தொடங்கிவிட்டன. விரைவில் இந்தப் பேருந்துகள் இயங்காவிட்டால், குப்பைக்குத்தான் செல்ல வேண்டும். போக்குவரத்து நிதி நிறுவனத்தின் மூலமாக தமிழக அரசு கொடுக்கும் பணத்தில்தான் இந்தப் பேருந்துகள் வாங்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பணத்துக்கான வட்டியை போக்குவரத்து நிர்வாகம்தான் தமிழக அரசுக்கு கட்டி வருகிறது. இந்தப் பணிமனைக்குப் பின்பக்க சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. பின்பக்கமாக இருக்கும் புதர்ப் பகுதிகளில் இருந்து பாம்பு, எலி, தேள் போன்றவை டிப்போ உள்ளே வந்து  இந்தப் பேருந்துகளில் தஞ்சம் புகுந்துவிட்டன. இன்னும் தாமதித்தால் சாலைகளில் ஓடும் தகுதியை இந்தப் பேருந்துகள் இழந்துவிடும்” என்கின்றனர்.

மக்களின் வரிப் பணம் இப்படி விரயம் ஆவது தவிர்க்கப்பட வேண்டும். மக்களின் முதல்வர் மனது வைப்பாரா?

- சண்.சரவணகுமார், பா.ஜெயவேல், வீ.மாணிக்கவாசகம்,
எஸ்.சரவணப்பெருமாள், ச.ஜெ.ரவி, ஏ.ராம், எம்.புண்ணியமூர்த்தி படங்கள்: க.சதீஷ்குமார்