Published:Updated:

‘‘முதல்வரை சந்திக்க வந்தவரை திருச்சியில் மடக்கினார்கள்!”

நத்தம் விஸ்வநாதன் நண்பர் கைது பின்னணி என்ன?

முன்னாள் அமைச்சர் ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியின் கைது சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து ஆளும் கட்சி வட்டாரம் மீள்வதற்குள், மணல் திருட்டு வழக்கில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் தீவிர ஆதரவாளரான யூனியன் சேர்மன் ஒருவர், அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில்  ஆத்தூர் யூனியன் சேர்மனாக இருப்பவர் கோபி. கடந்த 13-ம் தேதி செம்பட்டி அருகே உள்ள பச்சைமலையான்கோட்டையில் நடந்த விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா மேடையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுடன் சிரித்துப் பேசியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். அடுத்த ஆறு மணி நேரத்தில், மணல் திருட்டு வழக்கில் போலீஸ் அவரை கைது செய்திருக்கிறது.

கோபியின் பின்னணி அதிர்ச்சியூட்டும் ரகம். சித்தையன்கோட்டை ஒன்றியக் கவுன்சிலராக அரசியலில் காலடி வைத்த கோபியின் இன்றைய வளர்ச்சி பலரையும் மலைக்க வைக்கிறது. அமைச்சர் விஸ்வநாதனின் மருமகன் கண்ணனின் ஆசியால் ஆத்தூர் சேர்மன் பதவி கோபிக்குக்  கிடைத்தது. அதன் பிறகு, இவரது நடவடிக்கைகளைப் பார்த்து அ.தி.மு.க-வினரே அரண்டனர்.

மு.க.அழகிரியின் மனைவியான காந்தியின் உறவினரை திருமணம் செய்துள்ளதால், அழகிரியின் உறவினர் என்று சொல்லிக்கொள்ளும் கோபி,  வரும் தேர்தலில் நிலக்கோட்டை தொகுதி எனக்குத்தான் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘‘முதல்வரை சந்திக்க வந்தவரை திருச்சியில் மடக்கினார்கள்!”

அதற்குள்தான் இந்தக் கைது நடவடிக்கை.கோபியின் கைது பற்றி பேசும் அ.தி.மு.க-வினர், ‘‘சேர்மன் ஆனதும், கட்சிக்காரங்களையே கோபி மதிக்கிறதில்லை. தனக்குப் பிடிக்காத ஊராட்சித் தலைவர்களோட செக் பவரை கேன்சல் செய்தார். பாளையங்கோட்டை பிரசிடென்ட் சுமதி பாலமுருகன், ஆலமரத்துப்பட்டி பிரசிடென்ட் என்று பல பேருக்குத் தொல்லை கொடுத்தார். ஆத்தூர் தாலுக்காவைப் பொறுத்தவரைக்கும் இவர் வெச்சதுதான் சட்டம். ஒரு சிமென்ட் கம்பெனிக்கு இந்தப் பகுதிக்கான ஏஜென்சியை எடுத்தார். யூனியன்ல நடக்குற அத்தனை வேலைக்கும் இவருகிட்டதான் சிமென்ட் எடுக்கணும். இல்லைன்னா பில் வராது. அதுமட்டுமில்லாம, தான் சொன்னபடி கேட்காத பி.டி.ஓ-க்களை உடனடியா இடம் மாத்திடுவார். கடந்த 2 வருஷத்துல 8 பி.டி.ஓ-க்களை மாத்திட்டார். கண்மாய் மண் மற்றும் மணல் விற்பனையில் கொடி கட்டிப் பறந்தார். இவரோட மண் விற்பனையால் இந்தப் பகுதியோட முக்கிய நீர் ஆதாரமான புல்வெட்டி கண்மாய் அழிஞ்சே போச்சு. ஆத்தூர் ஒன்றியத்தைப் பொறுத்தவரை ஒரு குட்டி ராஜா மாதிரி வலம் வந்தார்.

கொஞ்ச நாளுக்கு முன்னாடி, உள்கட்சி தேர்தல் கூட்டத்துல, முன்னாள் எம்.பி, மாயத்தேவர் மகன் கண்ணனுக்கும் கோபிக்கும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னாலேயே வாக்குவாதம். அப்போது, கோபிக்கு ஆதரவாக அமைச்சர் பேசினார். அந்தளவுக்கு செல்வாக்கா இருந்த கோபியை, ரயில்ல பயணம் செஞ்சிக்கிட்டு இருந்தப்போ நடுராத்திரியில  கைது பண்ணியிருக்காங்க. தன்னோட ஆதரவாளரா இருந்தாலும், இவரு கைது விஷயத்துல அமைச்சர் தலையிடலை. இது தொண்டர்களுக்கு மகிழ்ச்சிதான்’’ என்கின்றனர்.

அமைச்சரின் ஆசியோடு வலம் வந்த ஆளும் கட்சியின் பேரூராட்சித் தலைவரின் கைதுக்கான காரணம் குறித்து பேசிய ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ‘‘ஆத்தூர் பகுதி குளம், கண்மாய்கள்ல மண் எடுத்து சிதைச்சிட்டதால மழைநீர் தேங்குறதில்லை. இதனால,  22 ஊராட்சிகள்ல குடிநீர் தட்டுப்பாடு வந்திருச்சுனு செய்தி வந்துச்சு. அந்தச் செய்தி அடிப்படையில, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்திடுச்சு. இது தொடர்பாக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குனு கேட்டு கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பிட்டாங்க. அந்த வழக்கு ஏப்ரல் 15-ம் தேதி விசாரணைக்கு வர இருந்தது. 13-ம் தேதி திடீர்னு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு வரச்சொல்லி உத்தரவு வந்திருக்கு. அதுக்காக ரயில்ல கிளம்பி போனவரை திருச்சியில இறங்கச் சொல்லி கைது செஞ்சுட்டாங்க. அதே வேகத்துல, யூனியன் சேர்மன் பதவியை ராஜினாமா செய்றதுக்கான கடிதத்திலேயும் கையெழுத்து வாங்கிட்டாங்களாம்” என்கிறார்கள்.

ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி செல்வத்திடம் பேசியபோது, ‘‘லாரியில மணல் கடத்துவதாக கோபி மீது ஆத்தூர் வி.ஏ.ஓ புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில சட்டப்படி நடவடிக்கை எடுத்தோம்’’ என்று முடித்துக்கொண்டார்.

பலருக்கும் கோபியின் கைது சம்பவம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது!

- ஆர்.குமரேசன்
படங்கள்: வீ.சிவக்குமார்