Published:Updated:

கதவை திறக்கலைன்னா கழுத்தை அறுத்துக்குவோம் !

கதவை திறக்கலைன்னா கழுத்தை அறுத்துக்குவோம் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அந்தச் சம்பவத்தைக் கேட்டு நாம் அதிர்ந்துபோனோம். சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களை மட்டும் மறைத்து, நடந்தவற்றை அப்படியே தருகிறோம்.

திருப்பூரில் மிகப் பெரிய தொழிலதிபரின் வீடு அது. புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்கு இன்டீரியர் வேலைகள் செய்துகொண்டிருந்தார் தொழிலதிபர். கான்ட்ராக்டர் ஒருவர் மூலமாக வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் அந்த வீட்டில் வேலை பார்த்தனர். வீட்டில் தொழிலதிபரின் மருமகள் மட்டும் இருந்திருக்கிறார். அடிக்கடி வேலை நடக்கும் ஹாலில் வந்து அதை கவனிப்பதும், பிறகு அறைக்குள் செல்வதுமாக இருந்திருக்கிறார் மருமகள். மதிய உணவுக்குப் பிறகு, ‘வேலையை முடிச்சுட்டுக் கூப்பிடுங்க’ என்று சொல்லிவிட்டு அறைக்குச் சென்றுவிட்டார் மருமகள். அவர் உள்ளே போன சில நிமிடங்களில் அந்த இளைஞர்கள் இருவரும் அவரது படுக்கை அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள். மருமகள் சுதாரிப்பதற்குள் அவர் மீது பாய்ந்து பலாத்காரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

யதேச்சையாக அந்தப் பெண்ணின் கணவன் வீட்டுக்கு வர... மனைவியின் கூச்சல் கேட்டு பதறிப்போயிருக்கிறார்.  இரண்டு இளைஞர்களையும் தள்ளிவிட்டு மனைவியை மீட்டிருக்கிறார் கணவர். அவர்கள் இருந்த அறையில் இருந்து கணவனும் மனைவியும் மட்டும் வெளியில் வந்து கதவை சாத்திவிட்டனர். தனக்குத் தெரிந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்குப் போன் செய்திருக்கிறார் கணவர். அதற்குள், ‘இப்போ எங்களை வெளியில விடலைன்னா இங்கேயே கழுத்தை அறுத்துகிட்டு செத்துடுவோம்’ என்று உள்ளுக்குள் இருந்த இளைஞர்கள் கையில் இருந்த கத்தியைக் கழுத்தில் வைத்துக்கொண்டு மிரட்ட... பதறிப்போன கணவன் கதவைத் திறந்திருக்கிறார். போலீஸ் வருவதற்குள் இளைஞர்கள் இருவரும் எஸ்கேப்.

கதவை திறக்கலைன்னா கழுத்தை அறுத்துக்குவோம் !

போலீஸ் வந்தது. ‘நாங்க நினைச்சோம். அவனுங்க ஸ்டைலே இதுதான். மாட்டிகிட்டா கழுத்துல கத்தியை வெச்சுகிட்டு ‘செத்துடுவோம்’னு மிரட்டுவாங்க. இதுமாதிரி நிறைய நடந்துடுச்சு’ என்று அந்த அதிகாரி சொல்லியிருக்கிறார். தொழிலதிபர் புகார் கொடுக்க முன்வரவில்லை.

‘‘வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்பவர்கள் இப்படி நடந்துகொள்வதற்கு முக்கியக் காரணம், குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவந்து மாதக்கணக்கில் தனியாக இருப்பதுதான். மொபைல் போன்களில் ஆபாச படங்களைப் பார்ப்பது அவர்களை காமவெறியர்களாக மாற்றுகிறது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், எஃப்.ஐ.ஆர் போட வேண்டும். அப்படிச் செய்தால் அந்தச் சம்பவம் செய்தித்தாள்களில் வெளிவரும். குடும்ப மானம் கருதி, பலரும் மறைத்துவிடுகிறார்கள். அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அந்தக் குற்றவாளிகள் தப்பித்துவிடுகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு, வட மாநிலத்தில் இருந்து வேலைக்கு வருபவர்களை அவர்கள் மனைவி, குழந்தைகளோடு வரவழைத்து தங்க வைப்பதுதான். இல்லாவிட்டால் இதுபோல சம்பவங்கள் தொடர்ந்து நடக்கத்தான் செய்யும்’’ என்றார் ஒரு காவல் துறை அதிகாரி.

வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்கு வருபவர்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்பது அல்ல. பெரும்பாலும் வறுமையினால்தான் தமிழகத்துக்குப் பிழைக்க வருகிறார்கள். ஒரு சிலர் கெட்டவர்களாக இருக்கிறார்கள். அப்படிக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் உடனடியாகத் தப்பி ஓடிவிட வழியிருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் நைஜீரியர்கள், வீட்டில் உள்ள பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவங்களைத் தொடர்ந்து அவர்களுக்கு யாரும் வாடகைக்கு வீடு கொடுக்கக் கூடாது என்று கூட்டம் போட்டு முடிவு எடுத்தது நினைவிருக்கலாம்!

- பொன்சன்

எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

வீடு வாடகைக்குக் கொடுப்போர் கவனிக்க வேண்டியவை: குடியிருக்க வீடு கேட்பவரிடம் தகுந்த சான்றுகள் கேட்க வேண்டும். போட்டோ ஆதாரங்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம். தெரிந்த யாரிடமாவது சிபாரிசு செய்யச் சொல்லலாம். அவர் வேலை பார்க்கும் இடங்களில் இருந்து சிபாரிசு கடிதம் வாங்கிவரச் சொல்லலாம். குடியிருக்க வந்தவரைப் பற்றி தெரிந்துகொள்ளாத நிலையில் எச்சரிக்கை உணர்வுடன் பழக வேண்டும். பெண்கள் சகஜமாக சிரித்துப் பேசிப் பழகுவது அவர்கள் எல்லை மீறுவதற்கு இடம் தந்துவிடும்.

அதேபோல வேலைக்கு ஆட்களை   வீட்டுக்குள் அனுமதிக்கும் முன்பு அவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி சரிபார்க்க வேண்டும். வீட்டில் வெளி ஆட்கள் வேலை செய்யும்போது தனியாகப் பெண்களை விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு