Published:Updated:

விபத்தில் மயக்கமடைந்த இன்ஜினீயரிங் மாணவிகள்! - தங்கச் செயினைத் திருடிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்

எஸ்.மகேஷ்

திருவள்ளூர் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்க வந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் ஒருவர், மயக்க நிலையில் இருந்த மாணவியின் கழுத்திலிருந்த 2 சவரன் செயினையும் கொலுசையும் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Arun kumar
Arun kumar

திருவள்ளூரை அடுத்த வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாகறல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரின் உறவினர்கள் லாவண்யா, சரண்யா ஆகியோர். இவர்கள் இருவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவருகின்றனர். நேற்று முன்தினம், ராஜன், லாவண்யா, சரண்யா ஆகியோர் ஒரே பைக்கில் சென்றனர். தாமரைப்பாக்கம் பகுதி அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த வாகனத்தில் ராஜனின் பைக் மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.

Primary health centre
Primary health centre

இதையடுத்து அப்பகுதி மக்கள், 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வெள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்குச் சென்றது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜன் உயிரிழந்தார். லாவண்யாவும் சரண்யாவும் மயக்கநிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மயக்கம் தெளிந்த லாண்வயா, கழுத்தில் தங்கச் செயின் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சரண்யாவிடம் கேட்டுள்ளார். அப்போது சரண்யா, `ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர்தான் செயினையும் கொலுசையும் கழற்றினார்' என்று கூறினார்.

இதையடுத்து லாவண்யா, சரண்யா ஆகியோரின் உறவினர்கள் வெள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், `செயின், கொலுசு குறித்து தங்களுக்குத் தெரியாது' என்று கூறினர். இதனையடுத்து, சரண்யா தெரிவித்த தகவலின்படி ஆம்புலன்ஸ் உதவியாளர் அருண்குமாரைப் பிடித்து ராஜனின் உறவினர்கள் விசாரித்தனர். அவரை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கினர். இந்தச் சம்பவத்தை செல்போனில் வீடியோவாகவும் எடுத்தனர். அப்போது, அருண்குமார், ஒரு மணி நேரத்தில் செயினைக் கொடுத்துவிடுவதாகக் கூறியுள்ளார்.

Arun kumar
Arun kumar

இதையடுத்து வெங்கல் காவல் நிலையத்தில் அருண்குமார் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அருண்குமார், கூறியதுபோல செயினை லாவண்யாவின் உறவினர்களிடம் ஒப்படைத்தார். கொலுசு குறித்துக் கேட்டபோது, `அதை நான் எடுக்கவில்லை' என்று அருண்குமார் கூறியுள்ளார். அதன்பிறகும் அவர் தாக்கப்பட்டார். இதனால் கொலுசுக்குரிய பணத்தைக் கொடுப்பதாக அருண்குமார் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து பணத்தைக் கொடுத்ததும் அருண்குமார் விடுவிக்கப்பட்டார்.

`அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என்று வெங்கல் காவல்நிலைய போலீஸாரிடம் கேட்டோம்.

``108 ஆம்புலன்ஸ் உதவியாளர் அருண்குமார், விபத்தில் சிக்கிய பெண்ணின் கழுத்திலிருந்து 2 சவரன் தங்கச் செயின், கொலுசுகளைத் திருடியதாக பெண்ணின் உறவினர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். செயின், கொலுசுக்குரிய பணத்தை வாங்கிய அந்தப் பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. இதனால்தான் அருண்குமாரிடம் எழுதிவாங்கிவிட்டு அனுப்பிவிட்டோம்" என்றனர்.

அருண்குமாரை சரமாரியாக தாக்கும் வீடியோவும் அவர் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலமும் போலீஸாரிடம் இருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அருண்குமாரிடம் விசாரித்தால் அவரின் சுயரூபம் தெரியவரும் என்கின்றனர் வெள்ளியூர் பகுதி மக்கள். லாவண்யாவைப் போல இன்னும் எத்தனை பேரிடம் அருண்குமார் நகை, பணத்தைத் திருடினார் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.

Arun kumar
Arun kumar

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகமும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பியும் இந்தச் சம்பவத்தில் தலையிட்டு விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, 108 ஆம்புலன்ஸ் சேவை சென்னை மண்டல மேலாளர் சந்தீப்பைத் தொடர்பு கொண்டோம். ` மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்' என்றதோடு முடித்துக் கொண்டார்.