Published:Updated:

750 கோடி மோசடி புகாரில் மதுரை ஆதீனம்!

“இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி!”

‘பிரிக்க முடியாதது என்னவோ?’ என்று தருமி இப்போது கேட்டால், மதுரை ஆதீனமும் குற்றச்சாட்டுகளும் என்று சிவபெருமானே அடித்துச் சொல்லிவிடுவார். அந்த அளவுக்கு சர்ச்சை நாயகராக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

‘‘மதுரை ஆதீனம் 750 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். மடத்தின் வருமானத்தைத் தன் சொந்த உபயோகங்களுக்குச் செலவழித்துள்ளார். இதுபற்றி சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும்’’ என்று, ஒரு புகாரை தமிழக முதல்வர், இந்து அறநிலையத் துறை, சி.பி.சி.ஐ.டி., மதுரை போலீஸ் கமிஷனர் போன்றோருக்கு அனுப்பிவைத்தது, இந்து மக்கள் கட்சி. தற்போது இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க முடிவெடுத்துள்ளதால் மீண்டும் ஆதீனத்தைப்பற்றி பரபரப்பு கிளம்பியுள்ளது.

கடந்த  சில ஆண்டுகளாக அ.தி.மு.க-வின் தலைமைக் கழக பேச்சாளர் ரேஞ்சுக்கு பேசி வருகிறார் மதுரை ஆதீனம். இது போதாதென்று கூடுதல் பொறுப்பாக நடிகர் சங்க பிரச்னையைத் தீர்த்து வைக்கப்போகிறேன் என்று கிளம்பினார். இப்போது, அவரை நிம்மதி இல்லாமல் செய்துவிட்டது இந்தப் புகார்.

750 கோடி மோசடி புகாரில் மதுரை ஆதீனம்!

750 கோடி ரூபாய் மோசடி பற்றி, புகார் கொடுத்த இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணனிடம் பேசினோம். ‘‘மதுரை ஆதீனம் செய்துவரும் செயல்களை நாங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். எங்கள் போராட்டத்துக்குப் பிறகுதான் நித்யானந்தாவை மடத்தைவிட்டு விரட்டினார். இருந்தாலும், ஆதீனம் இன்னும் மாறவில்லை, ஒரு மடாதிபதி செய்யக்கூடாத வேலைகளை எல்லாம் செய்கிறார். 1,500 ஆண்டு கால பழைமையானதும், புனிதமானதுமான மதுரை ஆதீன மடம், இதுவரை 291 ஆதீனங்களைக் கண்டுள்ளது. அவர்கள் மீது  யாரும் சிறு குற்றம், குறை சொன்னது கிடையாது. சமயப் பணியையும், மக்கள் பணியையும் செய்து வந்தார்கள். 292-வது ஆதீனமாக நாளிதழில் பகுதி நேர நிருபராகப் பணிபுரிந்த இவர் வந்ததில் இருந்து ஒரே பிரச்னைதான்.

உத்திராட்சையை புனிதமாக அணிபவர் ஆதீனம். அதன் புனிதம் அவருக்குத் தெரியும். ஆனால், நடிகை குஷ்பூ உத்திராட்சையில் தாலி போட்டிருந்தது பிரச்னையானபோது, அது சரிதான், தப்பில்லை என்று பேசியவர் மதுரை ஆதீனம். ஆதீன மடத்தை சமயப் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருக்கும்போது அதன் ஒரு பகுதியையும் தங்கும் விடுதி கட்டி லீஸுக்கு விட்டுள்ளார். அதற்குப் போட்ட டாக்குமென்ட்டில் மிகக் குறைவான தொகையைக் குறிப்பிட்டு, தனியாகப் பெருந்தொகையை ஆதீனம் பெற்றுள்ளார். அந்த விடுதியில் என்னென்னவோ நடக்கிறது. இதனால், மடத்தின் புனிதம் எப்போதோ போய்விட்டது. தூரத்தில் இருந்து பார்த்தால் ஆதீனமடம் தெரிவதற்குப் பதில் அந்தத் தங்கும் விடுதிதான் தெரிகிறது. இப்படி எல்லாம் நடக்கும் என்று திருஞானசம்பந்தரே நினைத்திருக்க மாட்டார். இப்போது அந்த லாட்ஜ் நிர்வாகிக்கும் ஆதீனத்துக்கும் பிரச்னையாகி வழக்கு நடக்கிறது.

தன்னை நீக்கியது செல்லாது என்று நித்யானந்தா போட்ட வழக்கில், நான் நித்யானந்தவை ஆதீனமாக நியமிக்கவில்லை என்று ஆதீனம் சொல்லியுள்ளார். இது எவ்வளவு பெரிய பொய்? அப்போது நடந்தது எல்லாம் உலகத்துக்கே தெரியும். கூகுளில் ஆதீனம் என்று டைப் செய்தால் அவரும் நித்யானந்தாவும் ஒன்றாக இருந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. எங்களைப் போன்ற பலரும் போராட்டம் நடத்தியதால்தான் நித்யானந்தாவை அங்கிருந்து வெளியேறச் சொன்னார்.

அதைவிட முக்கியம், மடத்தில் தினமும் செய்ய வேண்டிய பூஜைகள் எதையும் செய்வது இல்லை. அடிக்கடி சுற்றுப்பயணத்திலேயே  இருக்கிறார். பொதுமக்களை மடத்துக்கு வரவிடாமல் பூட்டியே வைத்திருக்கிறார்கள்.

இளம்பெண்களை மடத்துக்குள் தங்க வைக்கக் கூடாது என்ற மரபை மீறி, திருத்துறைப்பூண்டி பக்கமுள்ள கச்சனத்தைச் சேர்ந்த வைஷ்ணவியையும் அவர் தங்கை கஸ்தூரியையும் இங்கு தங்க வைத்திருந்தார். இதை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால், அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை.

750 கோடி மோசடி புகாரில் மதுரை ஆதீனம்!

மதுரையில் ஆதீனத்துக்குச் சொந்தமான கடைகள், கட்டடங்கள், நிலங்கள் அனைத்தையும் வாடகை, ஒத்திக்கு விடும் வேலைகளை இவர்களே செய்தனர். ஒரே கடையை இரண்டு பேருக்கு வாடகைக்கு விட்டு பிரச்னையாகி, அது வழக்கானது.

முதலில் வைஷ்ணவியின் திருமணத்தைத் தன் செலவில் நடத்திவைத்த ஆதீனம், திருமணத்துக்்குப்பின்பும் அந்தப் பெண்ணை மடத்திலேயே  தங்க வைத்துக்கொண்டார்.

சமீபத்தில் தபால்தந்தி நகரில் ஒரு வீட்டை வாங்கி அதில் தன் குடும்பத்தினரை தங்க வைத்துள்ளார் ஆதீனம். மரணமடைந்த தன் தந்தையின் உடலை வீட்டின் நடுவே அடக்கம் செய்திருக்கிறார்.

தகவல் அறியும் உரிமை சட்டப்படி ஆதீன மடம் பற்றிய விவரங்களைக் கேட்டால், இந்தச் சட்டம்  தனக்குப்  பொருந்தாது என்று பதில் அனுப்புகிறார். இவர் மேல் இன்று பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. ஆனால், எதற்கும் நேரில் ஆஜர் ஆவதில்லை. கேட்டால் ஆதீனம் கோர்ட்டுக்கு வர மாட்டார் என்று எல்லோரையும் குழப்புகிறார்.

இவர் ஆதீனமாக பதவிக்கு வந்த காலத்தில் இருந்து மடத்துக்கு வரும் கோடிக்கணக்கான வருமானத்தைப் பற்றியோ, செய்யும் செலவுகளைப் பற்றியோ தணிக்கைத் துறைக்கு காட்டி ஒப்புதல் பெறவில்லை. எங்கள் கணக்குப்படி இதுவரை 750 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கிறார். பெரிய பிசினஸ்மேன்களுக்கு வட்டிக்கு விடுகிறார். பல ஊர்களில் சொத்துகளை வாங்கிக் குவிக்கிறார். மதுரையில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மற்ற மாவட்டங்களிலும் கட்டடங்கள், விவசாய நிலங்கள் அதிகமுள்ளன. இதில் பலருக்குக் குத்தகைக்கு விடப்பட்டதில் டாக்குமென்டில் இருக்கும் தொகை குறைவாக இருக்கும். இப்படி தனியாக வரும் வருமானத்தை  வெளியில் சிலரிடம் கொடுத்து வைத்திருக்கிறார். தற்போது தனது பாதுகாப்புக்கு என்று ஒரு குரூப்பை வைத்திருக்கிறார். அவர்களுக்கு பல லட்சம் செலவு செய்கிறார். நித்யானந்தா வெளியேறியவுடன் இளைய தம்பிரானாக ஒருவரைக் கொண்டு வந்தார். அவரையும் சமீப காலமாக  மடத்தில் காணவில்லை. இப்படி மடத்தில் நடப்பது அனைத்தும் மர்மமாக உள்ளது.

750 கோடி மோசடி புகாரில் மதுரை ஆதீனம்!

மடத்தின் வருமானத்தின் மூலம் சைவ சமயத்தைப் பரப்பாமலும், ஏழை எளிய மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமலும் தன்னுடைய சொந்த செலவுகளுக்குப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. ஒரு மடாதிபதி என்பதை மறந்து அ.தி.மு.க தொண்டர்போல அம்மா... அம்மா... என்று பேசுவதும் பிரசாரம் செய்வதும் தவறானது. முதலில் அவரை ஆதீன மடத்தைவிட்டு அரசு வெளியேற்ற வேண்டும்.

ஏற்கெனவே இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் கொடுத்திருந்தாலும், பல்லாண்டுகளாக நடந்துவரும் மடத்து நிதி மோசடி பற்றி  விசாரிக்க வேண்டுமென்று புதிதாக சி.பி.சி.ஐ.டி-க்கு புகார் அனுப்பினேன். அதை சி.பி.சி.ஐ.டி தென் மண்டல எஸ்.பி-யான அன்பு, மதுரை விளக்குத்தூண் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பினார். அவர்களும் விசாரணை நடத்தியுள்ளனர். குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் என்னிடம் பெற்றுள்ளனர். இதுபோக, நீதிமன்றத்தில் வழக்கும் தொடரவுள்ளேன்’’ என்றார், கட்டுக்கட்டான ஆவணங்களைக் காண்பித்தபடி.

இது சம்பந்தமாக பதில்பெற ஆதீனமடத்துக்குச் சென்றோம். விவரத்தைக் கூறியும் ஆதீனம் ஊரில் இல்லை என்ற பதிலையே அங்கு உள்ளவர்கள் கூறினார்கள். ஆதீனத்தின் செல்நம்பரை தொடர்புகொண்டால், ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானதங்கமே’ என்ற பாடல் மட்டும் கேட்கிறது. அவர் போனை எடுக்க மறுக்கிறார்!

- செ.சல்மான், படங்கள்: எம்.விஜயகுமார்

அடுத்த கட்டுரைக்கு