Published:Updated:

அழுதார்கள்... தியானித்தார்கள்... தகர்த்தார்கள்...! ஜெயலலிதா இறந்த ஓராண்டில் நிகழ்ந்தவை #RememberingJayalalithaa

அழுதார்கள்... தியானித்தார்கள்... தகர்த்தார்கள்...! ஜெயலலிதா இறந்த ஓராண்டில் நிகழ்ந்தவை #RememberingJayalalithaa
அழுதார்கள்... தியானித்தார்கள்... தகர்த்தார்கள்...! ஜெயலலிதா இறந்த ஓராண்டில் நிகழ்ந்தவை #RememberingJayalalithaa

லகின் தலைசிறந்த தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட யாவருக்கும் உள்ள ஒரு பொதுவான அடையாளமாக இருப்பது, அவர்களைப்போலவே திறம்படச் செயலாற்றும் கொள்கைரீதியிலான வாரிசுகளை அவர்கள் தேர்ந்தெடுக்கத் தவறியதுதான். ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த தலைமைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் புடின், அமெரிக்காவின் ட்ரம்ப், சீனாவின் ஜின்பிங், இந்தியாவின் மோடி என நீளுகிறது அந்தப் பட்டியல். இந்தப் பட்டியலில் இவர்களுக்கு அடுத்து இவர்களால் உருவாக்கப்பட்ட யார் வருவார்கள் என்று கேள்வி எழுப்பினால், வெற்றிடமே எஞ்சுகிறது. சர்வதேச அளவில் பெரும் தலைவர்களாகக் கருதப்பட்ட வெனிசூலாவின் சாவேஸ், கியூபாவின் ஃபிடல் போன்றவர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

இதோ, இன்று ஒகி புயல் தாக்கத்தால் காணாமல்போன ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களை எப்படியேனும் துரிதமாகத் தேடித் தரச் சொல்லி அவர்களின் குடும்பங்கள் கெஞ்சிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்ய உதவ வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பிடமிருந்து பதில் வருகிறது. உண்மையில், அ.தி.மு.க. தரப்பு மீனவர்களின் வாக்குவங்கி அதிகம். கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., தனது படங்களில் மீனவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்ததும் அதற்கு ஒரு காரணம். ஆனால், எம்.ஜி.ஆரைவிட ஜெயலலிதாவுக்கு அவர்களிடையே ஆதரவு ஒருபடி மேலே இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். மிகைப்படுத்தல் என்று இல்லாமல் கடந்த 2015-ம் வருடம் மார்ச் மாதம் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்ப்போம். 24 மார்ச் 2015 அன்று இந்திய - இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகத் திட்டமிடப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கான அனைத்தும் தயாராகி வந்த சூழலில் தமிழக மீனவர்கள் 54 பேரை இலங்கைக் கடற்படை பிடிக்கிறது. ''கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், பேச்சுவார்த்தையிலிருந்து உடனடியாகப் பின்வாங்கப்படும்'' என்று எச்சரிக்கை விடுத்தார் ஜெயலலிதா. ஆனால், இன்று எண்ணிக்கையில் அடங்காத மீனவர்களின் நிலைகுறித்து கவலை சூழந்துள்ள நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் சிறிதளவும் அதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலோ அல்லது பிற்பாடான துரித நடவடிக்கைகளிலோ ஈடுபடாதது மக்களிடையே கட்சியின் மீதான நிலைப்பாட்டையே நிச்சயம் மாற்றியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். 

‘மக்களால் நான்... மக்களுக்காக நான்...’ என்ற ஜெயலலிதா கடந்த ஆண்டு இதே நாளில்தான், அதுவும் ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டாவது முறையாக நின்று வெற்றிபெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாதங்களிலேயே மரணமடைந்தார். தலைமை எதுவும் உருவாக்கிவிட்டுச் செல்லாத அவரது திடீர் இறப்பு தமிழகத்தின் பல முனைகளை, உடைந்த பாலங்கள்போல நிராதரவாக விட்டுச் சென்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். ஒருவேளை, அவர் தனது அரசியல் வாரிசை அறிவித்துவிட்டுச் சென்றிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் கட்சி இரண்டாகி... பின்னர் மூன்றாகி... பின்னர் மீண்டும் இரண்டாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. 'இரும்பு மனுஷி' எனப்பட்டவர் கட்டிய இரட்டை இலைக் கோட்டையை, அந்த இரட்டை இலைக்காக அடித்துக்கொண்டே ’அம்மா வழி ஆட்சி’ என்றவர்கள் தகர்த்திருக்க மாட்டார்கள். மேலே இருக்கும் புகைப்படத்தில் இறுதியாக ஒன்றாகக் காணப்பட்ட யாருமே இன்று ஒரே கூட்டணியில் இல்லை.

முதலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் மூவரும் ஒரே கூட்டணியில் இருந்தனர். பிறகு, பன்னீர்செல்வம் அவர்களிடமிருந்து பிரிந்துகொண்டார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்தார். பிறகு, இரண்டு பேரும் ஒன்றுசேர தான் எதுவும் செய்யத் தயார் என்று டி.டி.வி.தினகரன் விலகிக் கொண்டார். பிரிந்தவர்கள் இணைந்தால் தானும் கட்சிப் பணிகளைவிட்டே போய்விடுவதாகச் சபதம் எடுத்தார். அவரும் நினைவிடத்துக்குப் போய் வணங்கிவிட்டு வந்தார். இதற்கிடையே பன்னீர்செல்வமும், எடப்பாடி தரப்பும் தனித்தனியே ஒருமுறை நினைவிடத்துக்குச் சென்று வணங்கிவிட்டு வந்தார்கள். பேச்சுவார்த்தை இழுபறியென நீடித்து... பின்னர் இருதரப்பும் இணைந்துகொண்டார்கள். ஆனால், இணைந்துவிட்டால் தனக்கு கட்சி வேலைகளே தேவை இல்லை என்று சொன்ன தினகரன், தற்போது ஆர்.கே.நகர் தேர்தலில் தானும் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பு தானும் ஒருமுறை நினைவிடத்துக்குச் சென்று வணங்கிவிட்டு வந்தார். கூடுதல் தகவலாக, ஆர்.கே.நகரில் வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 145.

எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு இணைந்திருந்தாலும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. இணைப்புக்குப் பிறகு மாநிலத்துக்கு இரு முதல்வர்கள் என அறிவித்தார்கள். இந்த இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடந்த காலகட்டத்திலும் அதற்குப் பிறகுமாக இந்த மாநிலம் நிறையவே வருமானவரித் துறைச் சோதனைகளைச் சந்தித்துவிட்டது. அமைச்சர், அரசுத் தலைமைச் செயலாளர், சேகர் ரெட்டி எனப் பட்டியல் தொடங்கி அண்மையில் தினகரன், சசிகலா மற்றும் உறவினர்கள் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனைவரை சோதனை மேல் சோதனையாக நடத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சோதனைகள் ஒருபக்கம் இருக்கும் நிலையில், மறுபக்கம் ஆளுநராக அண்மையில் பொறுப்பேற்று இருக்கும் பன்வாரிலால் புரோஹித் அரசு அதிகாரிகளுடனான மாவட்டவாரியான கலந்தாய்வுக் கூட்டத்தை அறிவித்திருக்கிறார். ஆனால், இது அத்தனைக்குமே அரசுத் தரப்பு மௌனம் காத்துவருகிறது. ஒருவேளை, ஜெயலலிதா இருந்திருந்தால் என்னமாதிரியான சூழல் நிலவியிருக்கும் என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஒருவேளை, ஜெயலலிதா தனக்கு அடுத்து கட்சியை வழிநடத்துபவரை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தாலும் இதுபோன்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். 

முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க-வைப் பொறுத்தவரை, கருணாநிதிதான் நோய்வாய்பட்டிருக்கும் சூழலில், ஸ்டாலின் தனது அரசியல் வாரிசு என்று மறைமுகமாகவேனும் அறிவிப்பு செய்தார். ஆனால், அண்ணா, தான் நோய்வாய்ப்பட்டிருந்தபோதுகூடத் தனக்கு அடுத்த தலைமையை அறிவிக்கவில்லை. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டபோதும் அதே சூழல்தான். பின்னாளில், ஜெயலலிதாவாகவேதான் தலைமையை ஏற்றுக்கொண்டார். தமிழக அரசியலில் எந்தத் தலைமையுமே தனக்கென்று அடுத்த அரசியல் வாரிசை உருவாக்கிவிட்டுச் சென்றதில்லை என்று அ.தி.மு.க. தரப்பினர் மறுக்கிறார்கள்.

ஆனால், மற்ற அரசியல் தலைவர்களிடமிருந்து ஜெயலலிதாவின் நிலை சற்று மாறி இருக்கிறது. அவர் இறந்த இந்த ஒருவருடத்துக்குள் அரசியல் வாரிசு யார் என்கிற போட்டியின் அளவுக்கு பல்வேறு குழப்பங்களையும் திருப்புமுனைகளையும் சந்தித்திருக்கிறது அவரது குடும்ப வாரிசு யார் என்கிற கேள்வி... தொடக்கத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் மகன் தீபக்கும் தாங்கள்தான் தங்களது அத்தையின் சொத்துக்களுக்கு வாரிசு என்று களமிறங்கினார்கள். அந்த அலை சற்று தணிந்திருந்த சூழலில் ஜெயலலிதாவின் தங்கை என்று கூறிய ஷைலஜா என்பவரின் மகள் அம்ருதா, உண்மையில் ''தானே ஜெயலலிதாவின் மகள், வேண்டுமானால் மரபணு சோதனை செய்து பார்க்கட்டும்'' என்று சவால் விடுகிறார். ஜெயலலிதாவின் பெரியம்மா மகள் என்று கூறிய லலிதாவோ, ''ஜெயலலிதாவுக்குக் குழந்தை இருந்தது உண்மைதான். அவர்தான் ஷைலஜாவின் மகளா என்கிற விஷயம் தெரியாது'' என்கிறார். மற்றோர் உறவினர் என்று கூறிக்கொள்ளும் வாசுதேவன், ''ஜெயலலிதாவுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தன'' என்கிறார்.

புகழப்பட்டு, போற்றப்பட்டு, கண்ணீர்வடித்து, கடற்கரையோரம் நினைவிடம் அமைத்து, வழியனுப்பிவிட்டு வந்த ஒருவரை ஒருவருட காலத்துக்குள் அவர்மீது பொதுமக்கள் கொண்டிருந்த அத்தனை மதிப்பீடுகளையும் மாற்றிக்கொள்ளும் வகையில் செய்திருக்கிறார்கள் அவரைச் சுற்றி இருந்தவர்களும் உறவினர்கள் என்று கூறிக்கொள்பவர்களும். 

'இரும்புமனுஷியா' அல்லது 'இரும்புத்திரைக்குப் பின்னால் இருந்த மனுஷியா?' எப்படிப் பார்க்கப்பட்டாலும் இறந்த ஒருவரை அவரது அரசியல் தரப்புகளும் குடும்பத் தரப்புகளும் இந்த ஒருவருடத்துக்குள் இப்படியொரு நிலைக்கு உட்படுத்தியிருக்க வேண்டாம்.