Published:Updated:

“அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாதான் வாய்ப்புக் கிடைக்கும்னா, அது வேண்டாம்!” ஆண் மாடலின் குமுறல் #SpeakUp #உடைத்துப்பேசுவோம்

நமது நிருபர்
“அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாதான் வாய்ப்புக் கிடைக்கும்னா, அது  வேண்டாம்!” ஆண் மாடலின் குமுறல் #SpeakUp #உடைத்துப்பேசுவோம்
“அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாதான் வாய்ப்புக் கிடைக்கும்னா, அது வேண்டாம்!” ஆண் மாடலின் குமுறல் #SpeakUp #உடைத்துப்பேசுவோம்

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைக்கான விசிட்டிங் கார்டு மாடலிங் ஃபீல்டு' என ஏராளமான கனவுகளோடு அதில் நுழையும் இளைஞர் பட்டாளம் மிக அதிகம். இவர்களின் கனவுகள் சில குரூர புத்திக்காரர்களின் மோகத்துக்கு இரையாவது இன்று சர்வசாதாரணமாகி வருகிறது. 'என்னது... பெண்களுக்குத்தானே இதுமாதிரியான பிரச்னைகள். ஆண்களுக்குமா?' என்று அதிர்ச்சி ஏற்படலாம். ஆனால், அதுதான் உண்மை. அத்தகைய கசப்பான அனுப்பவங்களை, சவால்களைச் சந்தித்துதான் மாடலிங் துறையில் நடைபோடுகிறார்கள்.. சென்னையைச் சேர்ந்த தன் அடையாளத்தைக் காட்டிக்கொள்ள விரும்பாத ஆண் மாடல் ஒருவர். "எப்படி அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினால்தான் சினிமா வாய்ப்பு என்ற சவாலை சந்திக்கும் பெண்களைபோல, மாடலிங் ஃபீல்டுல ஆண்களுக்கு அதிக பிரச்னை இருக்கு. இந்த மோசமான சூழல் மாறணும். உடலுக்காக கிடைக்காமல், எங்கள் திறமைக்கு வாய்ப்பு கிடைக்கணும்" என ஆவேசமாகத் பேசத் தொடங்குகிறார். 

"காலேஜில் படிக்கும்போதே, 'உன் லுக்தான் செமையா இருக்கே. மாடலிங் இல்லன்னா சினிமா ஃபீல்டுக்குப் போகலாம்'னு ஃப்ரெண்ட்ஸ் பலரும் சொல்வாங்க. எனக்கும் ஆர்வம் ஏற்பட்டுச்சு. முதலில் மாடலிங் டிரைப் பண்ணிப் பார்க்கலாம்னு முடிவுப் பண்ணினேன். ஜிம் போய் உடம்பை ஃபிட்டாக்கினேன். மாடலிங்ல இருக்கும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன். 'இந்த ஃபீல்டுல நிறைய அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும். நம் திறமைக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்குறவங்களும் உண்டு. பார்த்து எச்சரிக்கையா இரு'னு சொன்னாங்க. ஒரு சில ஷூட் வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால், என் உடல் அவர்களுக்குத் தேவைப்பட அதையெல்லாம் தவிர்த்தேன். 

என் திறமைக்கு மதிப்பு கொடுக்கும் சின்ன அளவிலான ஷூட் வாய்ப்புகளும் கிடைச்சது. போட்டோ ஷூட், ரேம்ப் வாக் எனப் பண்ணினேன். தொடர்ந்து இந்த ஃபீல்டுல பயணித்தபோதுதான் நினைச்சு பார்க்காத அளவுக்கு ஓரினச்சேர்க்கை இருக்கிறது தெரிஞ்சது. அதையெல்லாம் கடக்க சந்தித்த சவால்கள் ரொம்ப அதிகம். குறிப்பாக, மாடலிங் ஏஜென்ஸி மற்றும் டிசைனரிடமிருந்து போன்கால் வரும். 'பெரிய ஷோ இருக்கு. நீங்க கலந்துக்கங்க'னு சொல்வாங்க. முதல்ல பாசிட்டிவா பேசிட்டு அப்புறம் குழைவாங்க. 'அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினால், உங்களைப் பெரிய ஆளாக்கிவிடுவோம்'னு சொல்வாங்க. சிலர் வீடியோ காலுக்கு வருவாங்க. அதில் அவங்க கொடுக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் படுமோசமா இருக்கும். அவங்க உண்மை முகம் வெளிப்பட்டதும், 'எனக்கு விருப்பமில்லை'னு சொல்லிடுவேன். இப்படிப்பட்ட ஆள்கள், ஃபேஷன் டிசைனர்ஸ், ஏஜென்ஸி நபர்களைப் பற்றி தெரிஞ்சுக்கவே ஒன்றரை வருஷம் ஆச்சு. 'அட்ஜஸ்ட்மென்ட்' விஷயத்தில் உடன்பாடில்லாமல் பல வாய்ப்புகளை இழந்திருக்கேன். பிரச்னை இல்லாதவங்க என்பது உறுதியானால் மட்டும்தான் ஷூட்டுக்கும் நிகழ்ச்சிக்கும் போவேன். எண்ணிக்கை குறைவா இருந்தாலும், மனநிறைவு இருக்கு. இந்தத் தெளிவுக்கு வர்றதுக்கு முந்தைய காலகட்டங்களில் பல இடங்களில் சிக்கி, தப்பிச்சால் போதும்னு ஓடி வந்திருக்கேன். அப்படியான கசப்பான அனுபவங்கள் நிறைய இருக்கு'' என அவர் சொல்லச் சொல்ல நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. 

“சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்களிடமிருந்தும் தப்பிச்ச அனுபவம் உண்டு. இந்த மோசமான அனுபவங்களுக்குப் பிறகு, மாடலிங்கை மட்டும் நம்பாமல், ஃபிட்னஸில் கவனம் செலுத்தினேன். நிறைய ஆணழகன் போட்டிகளில் கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கினேன். அதை சோஷியல் மீடியாவில் பதிவுசெய்தேன். அதைப் பார்த்து நல்ல வாய்ப்புகள் வந்திருக்கு. முன்னைவிட மோசமான, வெளிப்படையான சேட்டிங் அழைப்புகளும் வந்திருக்கு. ஆரம்பத்தில் கோபமாக இருந்தாலும், 'இதையெல்லாம் கடந்துதான் ஜெயிக்கணும். தவறான வழியில் மட்டும் போயிடக்கூடாது'னு உறுதியா இருக்கிறேன். 

தன் திறமையை வெளிப்படுத்தி ஃபேமஸாகணும். ஃபேமிலியைக் காப்பாத்தணும்னு என்றுதான் பல இளைஞர்கள் இந்தத் துறைக்கு வர்றாங்க. அதை சில மோசமான ஆண்கள் பயன்படுத்திக்கிறாங்க. ரொம்ப ஓபனாவே பேசறாங்க. அதை நம்பி ஒத்துழைக்கும் பசங்களைப் பயன்படுத்திட்டு, சொன்னபடி சான்ஸையும் வாங்கித்தராம ஏமாத்தறாங்க. அப்படியே வாய்ப்பு கொடுத்தாலும், பணம் கொடுக்காமல் ஏமாத்துறாங்க. வெளிமாநில பசங்கதான் இதில் அதிகம் பாதிக்கப்படறாங்க. சில அட்ஜஸ்ட்மென்ட் பசங்களைப் பெரிய அளவில் வளர்த்துவிடறதும் உண்டு. அது ரொம்பவே அரிதாக நடக்கிறது. இதில் கொடுமை என்னன்னா, டாக்டர்ஸ், இன்ஜினீயர்ஸ், எம்.பி.ஏ முடிச்ச பல பசங்க ஜெயிக்கும் வெறியில் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு உடன்பட்டு வேண்டா வெறுப்போடு மாடலிங் பண்ணிட்டிருக்காங்க. இப்படி ஒருத்தரின் ஃபேஷன் ஆர்வம், இன்னொருத்தருக்குப் பெரிய மோகமாக இருக்கு. நல்ல லுக், திறமை இருந்தும் ஒத்துழைக்காத பல பசங்கள், வாய்ப்புக்காக போராடிப் போராடி தோற்றுப்போய் வெளியேறினவங்களும் இருக்காங்க. இதெல்லாம் முழுசா மாறணும். நாங்க சாப்பிடும் உணவுப் பொருள்களுக்கே அதிக செலவாகுது. உடலைத் தொடர்ந்து பராமரிக்கவும் நேரச் செலவு இருக்கு. இதில் இந்த மாதிரியான சவால்களையும் சந்திக்கணும். 

லேடீஸ் டிசைனர் பலரும் ரொம்பவே நியாயமா இருக்காங்க. நல்ல முறையில் நடந்துக்கறாங்க. அப்படி சில ஷூட் மட்டும் பண்ணிட்டிருக்கேன். சில பெண்கள் பேசும்போதே ஆசையை வெளிப்படுத்திடுவாங்க. 'உடன்பாடில்லை'னு சொன்னால் டீசன்டா ஒதுங்கிடுவாங்க. இந்த மாதிரி பிரச்னைகளால், மாடலிங் பண்றதையே படிப்படியா குறைச்சுட்டேன். நிறைய வெளிமாநில மாடலிங் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வருது. நம்ம தமிழ்நாட்டிலேயே இப்படி இருக்கு. அங்கே போனால் என்ன ஆகுமோனு தவிர்த்துடறேன். எனக்கு சினிமாதான் இலக்கு. என் உடம்பை அடமானம்வெச்சு அந்த இலக்கை அடைய உடன்பாடில்லை. என் திறமைக்கான வாய்ப்பு ஒருநாள் நல்லமுறையில் கிடைக்கும்னு நம்பிக்கையோடு இருக்கேன்" என்கிறார் உறுதியான குரலில்.