Published:Updated:

`எனக்கு கிடைச்ச பையில 8 கோடி ரூபாய் இருந்தது!'-போதையில் உளறிய நபருக்கு எஸ்.ஐ மகனால் நேர்ந்த கொடூரம்

`என்னோட புருஷனத்தான் சாகடிச்சீட்டீங்க. புள்ளையவாவது விட்டுடுங்க. நாங்க வெளியில சொல்ல மாட்டோம். பணம் எங்கிருந்தாலும் தேடி எடுத்துக்குங்க’ எனக் கதறி இருக்கிறார் முருகன் மனைவி.

கொலை
கொலை

தாம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சில நாள்களுக்கு முன்பு முருகன் என்பவர் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார். போதை மயக்கத்தில், `எனக்கு ஒரு பை கிடைத்தது. அதில் கட்டுக்கட்டாக எட்டு கோடி ரூபாய் பணம் இருந்தது. மொத்தமும் 2,000 ரூபாய் நோட்டுகள்' எனக் கூறியிருக்கிறார். இதனால் அவரின் நண்பர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

கொலை
கொலை
கோப்புப் படம்

கூடவே, பில் கொடுத்த டாஸ்மாக் ஊழியரிடம், இந்தா 2,000 ரூபாய்... டிப்ஸா வச்சிக்கோ' எனக் கூறியிருக்கிறார். முருகனின் நடவடிக்கைகளை பாரில் மது அருந்திக்கொண்டிருந்த வேறு ஒரு கும்பலும் நோட்டமிட்டுக்கொண்டிருந்தது. அந்தக் கும்பலில் அருண் பாண்டியன் என்ற வழக்கறிஞரும் இருந்திருக்கிறார். இவர் பல்லாவரம் காவல்நிலையத்தில் பணிபுரியும் கன்னியப்பன் என்ற உதவி ஆய்வளரின் மகன்.

மது அருந்திய கையோடு, முருகனின் வீட்டு முகவரியைக் கண்டுபிடித்த அந்தக் கும்பல், அவரின் வீட்டுக்குள் நுழைந்து, `நாங்க போலீஸ்.. முருகனை விசாரிக்க வந்திருக்கிறோம்' எனக் கூறியுள்ளனர். அதற்குப் பதில் கொடுத்த முருகனின் மனைவி, `சாயங்காலம் வாங்க.. அவர் வீட்டில் இல்லை' எனக் கூறியிருக்கிறார். தன்னைச் சிலர் தேடுவதை அறிந்த முருகன், சொந்த ஊரான வேலூர் மாவட்டத்தில் உள்ள வாழைப்பந்தல் கிராமத்துக்கு தப்பித்துச் சென்றுவிட்டார்.

` சிகரெட் சூடு... தோட்டத்தில் தூக்கு!' - காஞ்சிபுரம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

மீண்டும் மாலை நேரத்தில் வந்த அதே கும்பல் முருகன் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். `முருகன் எங்கே?' எனக் கேட்டு அவரின் மனைவியையும் மகனையும் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அடிதாங்க முடியாமல் செய்யாறு பகுதியில் உள்ள வாழைப்பந்தல் கிராமத்துக்கு முருகன் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதையடுத்து, தாங்கள் வந்த காரிலேயே முருகனின் மனைவி மற்றும் மகன் கிருஷ்ணனை ஏற்றிக்கொண்ட கும்பல், செய்யாறு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். வாழைப்பந்தல் கிராமத்தில் இருந்த முருகனை காரில் ஏற்றிக்கொண்டு சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள அருண்பாண்டியனின் நண்பருக்கு சொந்தமான பங்களா ஒன்றில் அவர்களை வைத்து கொடூரமாக அடித்துள்ளனர்.

இதில், சம்பவ இடத்திலேயே முருகன் இறந்துவிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த முருகனின் மனைவி, `என்னோட புருஷனைத்தான் சாகடிச்சீட்டீங்க. புள்ளையவாவது விட்டுடுங்க. நாங்க வெளியில சொல்ல மாட்டோம். பணம் எங்கிருந்தாலும் தேடி எடுத்துக்குங்க’ எனக் கதறி இருக்கிறார். தாம்பரத்தில் உள்ள முருகன் வீட்டிலும் பணம் இல்லாததால் இறந்த முருகனை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

புருஷனைத்தான் சாகடிச்சீட்டீங்க. புள்ளையவாவது விட்டுடுங்க. நாங்க வெளியில சொல்ல மாட்டோம். பணம் எங்கிருந்தாலும் தேடி எடுத்துக்குங்க..
முருகனின் மனைவி

இதையடுத்து, வாழைப்பந்தலில் உள்ள சொந்த ஊருக்கு முருகனின் உடல் கொண்டு செல்லப்பட்டது. முருகனின் உடலைப் பார்த்து உறவினர்கள் சந்தேகம் அடைந்து அவரின் மனைவி மற்றும் மகனிடம் விசாரித்தனர். ஒரு கட்டத்தில் அவர்களால் உண்மையை மறைக்க முடியவில்லை. பின்பு அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அருண்பாண்டியன் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்துவருகிறார்கள்.