Published:Updated:

`விடிய விடிய ஊரல் போட்ட கள்ளச்சாராயம்!' -கிருஷ்ணகிரியில் 11 ஆடுகளுக்கு நேர்ந்த சோகம்

உயிரிழந்த ஆடுகள்
உயிரிழந்த ஆடுகள்

ஊரடங்கால் புற்றீசல்போல கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. மருந்தகம் மற்றும் மளிகை என அத்தியாவசியக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கின்றன.

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் மதுப் பிரியர்கள் பலரும் மது அருந்த முடியாமல் தவித்து வருகிறார்கள். அதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் காவல்துறை கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் கள்ளச்சாராயத்தைக் காய்ச்சி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கனகமுட்லு அடுத்த மேலேரிக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருக்குச் சொந்தமான 11 ஆடுகள் அதேபகுதியில் உள்ள எருமேல் மலையில் மேய்ச்சலுக்குச் சென்றன. ஆனால், திரும்பிவரவில்லை. இதையடுத்து பெருமாள் அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது கள்ளச்சாராயம் ஊரல் போட்ட பாத்திரங்கள், மரப்பட்டை, உரம் ஆகியவை கிடந்த இடத்தில் 11 ஆடுகளும் இறந்துகிடந்துள்ளன.

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

இதையடுத்து, தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். இதன்பிறகு வேலம்பட்டி கால்நடை மருத்துவர் கணேசன் தலைமையிலான குழுவினர், உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த மக்கள், ஊரல் போட்டக் கள்ளச்சாராயத்தைக் குடித்ததால் ஆடுகள் இறந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடம் கேட்டபோது, ''கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மலைப் பகுதியை ஒட்டியுள்ள கிட்டப்பட்டி, மேலேரிக்கொட்டாய், தண்ணீர் பள்ளம் உள்ளிட்ட கிராமங்கள் கள்ளச்சாராயத்திற்குப் பெயர் போனவை. காலப்போக்கில் அரசின் அனுமதியோடு டாஸ்மாக் கடைகளின் ஆதிக்கம் அதிகரிக்கவே, கள்ளச்சாராயம் காணாமல் போனது.

தற்போது ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் இந்த மூன்று கிராமங்களிலும் மீண்டும் கள்ளச்சாராயம் புற்றீசல் போல காய்ச்சத் தொடங்கி இருக்கிறார்கள். திம்மராயன் மகன் ராதா, ராஜா மகன் பெருமாள், சின்னசாமி மகன் வெள்ளையன், துரையின் மகன் இராமன், வீராசாமி எனப் பலரும் களத்தில் இறங்கிக் காய்ச்சி வருகிறார்கள்.

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

ஊரடங்கால் பொருள்கள் வாங்க பொதுமக்களுக்குத் தடை இருக்கிறது. ஆனால் இவர்கள் சாராயம் காய்ச்சத் தேவையான மூலப்பொருள்களான யூரியா, வேலாம்பட்டை, வெல்லம், கடுக்காய் போன்றவை தங்கு தடையின்றிக் கிடைக்கின்றன. இதனால் இரவு பகல் பாராமல் சாராயம் காய்ச்சி வருகிறார்கள். ஒரு லிட்டர் கள்ளச்சாராயம் 1,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கள்ளச்சாராயம் இரவு பகல் பாராமல் காய்ச்சப்படுவதால் வேலைச் சுமையின் காரணமாகக் கள்ளச்சாராயத்தை பாத்திரத்தில் திறந்தே வைத்து விட்டுச் செல்கின்றனர். இதனை அருந்தி வன உயிரினங்களும் கால்நடைகளும் மடிந்து போகின்றன'' என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு