Published:Updated:

ஆண்டிமடக் காவல் நிலையத் தாக்குதல் யாரால், எதற்காக நடத்தப்பட்டது?

ஆண்டிமடம் காவல் நிலையம்
ஆண்டிமடம் காவல் நிலையம்

கடந்த 1997-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி நள்ளிரவு, ஆண்டிமடம் காவல் நிலையத்தில், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த 15 நபர்கள் பைப் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், வீச்சரிவாள் முதலிய ஆயுதங்களுடன் காவலர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலையத் தாக்குதல் வழக்கில், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த மாறன், ரேடியோ வெங்கடேசன், பொன்னிவளவன் உள்ளிட்ட 11 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

22 வருடங்களாக நடைபெற்றுவந்த வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தமிழ்நாடு விடுதலைப் படையினர் என்பவர்கள் யார் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

தமிழ்நாடு விடுதலைப் படை கொடி
தமிழ்நாடு விடுதலைப் படை கொடி

தமிழ்நாடு விடுதலைப் படை என்பது, தமிழ்நாடு பொதுவுடைமை கட்சி என்னும் கம்யூனிஸ இயக்கத்தின் ஆயுதப் பிரிவு. இந்த அமைப்பின் நோக்கம், இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக, ஆயுதமேந்திப் போராடி வந்தார்கள் இவர்கள். இந்த இயக்கத்தின் பொறுப்பாளராக முதலில் தமிழரசன் என்பவர் இருந்தார். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி எனும் ஊரில் உள்ள வங்கியில் கொள்ளையிட முடிவு செய்தார்.

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டபோது, மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. இல்லை, மக்களோடு மக்களாக இருந்த காவல்துறையினர்தான் அவரை அடித்துக் கொன்றனர் என்றும் சொல்லப்படுகிறது. அவரின் மரணத்துக்குப் பிறகு, லெனின் என்பவர் இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பேற்றார். இவரின் தலைமையில் அரியலூர், வல்லம், திருச்சி ஆகிய பகுதியில் காவல் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடித்தனர். ஒரு வெடி விபத்தில் அவரும் மரணமடைந்துவிட, தற்போது ஆண்டிமடம் காவல் நிலையத் தாக்குதல் வழக்கில் முதல் குற்றவாளியாகத் தண்டனைபெற்ற மாறன் என்பவர் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். அப்போதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றுவது இந்த இயக்கத்தினரின் வழக்கமாக இருந்தாலும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் வேறு சில காரணங்களும் சொல்லப்பட்டன.

சுப. இளவரசன்
சுப. இளவரசன்

''மாறன் தலைவராக வந்தது இயக்கத்தில் சிலருக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக சுப. இளவரசனுக்கு. அதனால் அவர் தனியாக ஒரு குழுவாகச் செயல்பட்டார். இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையில் அவ்வப்போது சிறுசிறு மோதல்கள் வெடித்தன. அதை காவல்துறை பயன்படுத்திக்கொண்டது. இரு குழுக்களுக்கும் இடையே பல பிரச்னைகளைத் தூண்டிவிட்டது. அதனால் காவல்துறையினர்மீது மாறன் மிகக் கடுப்பில் இருந்தார்.

அந்த நேரத்தில் இதுபோன்று ஆயுதக் குழுக்களை ஒழிப்பதற்காக 'Delta force' என்னும் காவல் பிரிவு செயல்பட்டது. அவர்கள், எங்கள் இயக்கத்தினரை, அவர்களின் உறவினர்களை, ஆதரவாளர்களை அடிக்கடி தொந்தரவு செய்தனர். காவல் நிலையத்துக்குக் கூட்டிச் சென்று சித்ரவதை செய்தனர். எங்கள் இயக்க உறுப்பினர் ஒருவரின் தந்தையை உடையார்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொல்லவும் செய்தார்கள். அதற்குப் பழிதீர்க்கத்தான் இந்த காவல் நிலையத் தாக்குதல் நடத்தப்பட்டது'' என்கிறார்கள் விவரம் தெரிந்த சிலர்.

மாறன்
மாறன்
``நித்யானந்தாவை முழுமையாக நம்பினோம்!'' - மகள் இறப்புக்கு சி.பி.ஐ விசாரணை கோரும் தாய் ஜான்சிராணி

அதன்படி, கடந்த 1997-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி நள்ளிரவு, ஆண்டிமடம் காவல் நிலையத்தில் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த 15 நபர்கள் பைப் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், வீச்சரிவாள் முதலிய ஆயுதங்களுடன் காவலர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். காவல் நிலையத்தில் இருந்த 410 Musket rifle வகை துப்பாக்கிகள் 10, 2 பிஸ்டல்கள், தோட்டாக்கள் நிறைந்த பெட்டி மற்றும் தொலைத் தொடர்பு கருவிகள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர் என்று செய்திகள் வெளியாகின.

அந்தத் தாக்குதலில், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த சுந்தரம், ரேடியோ வெங்கடேசன், ரவிச்சந்திரன், முருகையன், சுந்தரமூர்த்தி, ஜெயச்சந்திரன், சேகர், சரவணன், நாகராஜன், செங்குட்டுவன் என்கிற மாறன், ஜான் பீட்டர், உத்திரபதி, பொன்னிவளவன், நடராஜன், வீரையா ஆகிய பதினைந்து பேரின் மீது பெரம்பலூர் போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்து கைதுசெய்தனர்.

வீரப்பன்
வீரப்பன்

அந்த வழக்கு, பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த வழக்குக்காக அரசு தரப்பில், 72 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 101 ஆவணங்களும், 67 சான்றுப் பொருள்களும் குறியீடு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட பதினைந்து பேரில், வீரையா என்பவர் அப்ரூவராக மாறிவிட்டார். சுந்தரம், சரவணன், உத்திரபதி ஆகிய 3 பேரும் உயிரிழந்துவிட, மீதமுள்ள 11 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க நீதிபதி பி.செந்தூரபாண்டி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ள மாறன், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு