Published:Updated:

காதல் திருமணத்தைக் கலைக்க முயன்றாரா முன்னாள் அமைச்சர்?

காதல் திருமணத்தைக் கலைக்க முயன்றாரா முன்னாள் அமைச்சர்?
காதல் திருமணத்தைக் கலைக்க முயன்றாரா முன்னாள் அமைச்சர்?

மீபத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட புதுக்கோட்டை மனிதநேயம்-திருச்சி சுவிதா ஜோடிக்கு எதிரான நடவடிக்கைகளில் கே.என்.நேரு ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

திருமணம் செய்துகொண்ட சுவிதா தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கே.என்.நேரு இவ்விஷயத்தில் தலையிட்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டது. தவிர, பெட்டைவாய்த்தலை நகர அ.தி.மு.க செயலாளராக உள்ள சுவிதாவின் தந்தை செல்வம், கட்சி வேறுபாட்டை மறந்து, தன் மகளை மீட்டுத் தருமாறு கே.என்.நேருவிடம் கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சுவிதா மற்றும் மனிதநேயத்தின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், தற்போது ரகசியமான இடத்தில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்துக்குள் போவதற்கு முன்பாக,கொஞ்சம் முன்கதை சுருக்கத்தைப் பார்த்துவிடுவோம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டைவாய்த்தலையைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அந்தப் பகுதியின் அ.தி.மு.க பிரமுகராகவும் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வகிப்பவராகவும் இருக்கிறார். இவரது மகள் சுவிதா. கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார். அதே கல்லூரியில் சுவிதாவுடன் இணைந்துப் படித்தவர் மனிதநேயம். இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள மேலத்திம்மாக்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அப்பா சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அந்த இயக்கம் சார்ந்த கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அதனாலேயே தன் மகளுக்கு சுயமரியாதை என்றும் மகனுக்கு மனிதநேயம் என்றும் பெயரிட்டார். அவர் தற்போது உயிருடன் இல்லை.

சுவிதாவும் மனிதநேயமும் கடந்த மூன்று வருடங்களாகக் காதலித்து வந்திருக்கிறார்கள். விஷயம் அறிந்த சுவிதாவின் பெற்றோர்  இந்தக் காதலை கடுமையாக எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்துப் பேசும் உள்ளூர்வாசிகள், ''ஊரில் செல்வத்துக்கு நல்ல மரியாதை உண்டு. தனக்கு இருக்கும் மரியாதையும் அரசியல் வாழ்க்கையும் இந்தக் காதல் விவகாரத்தால் அஸ்தமித்துவிடும் என்று செல்வம் கருதினார். எனவே,  சுவிதாவின் மனதைக் கரைக்க முயற்சிகள் எடுத்தார். ஆனாலும் சுவிதா மனம் மாறவில்லை. இதையடுத்து, தனது சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மகளைக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டார் செல்வம். இதனை அறிந்துகொண்ட சுவிதா வீட்டை விட்டு வெளியேறினார். மனிதநேயமிடம் நடந்ததைக்கூற, இருவரும் உடனடியாகத் திருமணம் செய்துகொள்வதென முடிவெடுத்தார்கள்.

அதன்படி, கடந்த நவம்பர் 16-ம் தேதியன்று  புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் மாரியம்மன் கோயிலில் இருவரும் ரகசியத் திருமணம் செய்துகொண்டார்கள். இதைக் கேள்விப்பட்ட சுவிதாவின் தந்தை செல்வம், மனிதநேயத்தின் அக்காவான 'சுயமரியாதை'யும் அவரது கணவரும் தனது மகளைக் கடத்தி வைத்திருப்பதாகக் கூறி, மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து, கடந்த பன்னிரண்டாம் தேதியன்று சுவிதாவைக் கோர்ட்டில் ஆஜர்படுத்த மனிதநேயமும் அவரது சகோதரியும் உறவினர்களும் சென்றிருக்கிறார்கள். அன்றுதான் உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. நீதிபதியிடம் சுவிதா மிகத் தெளிவாக, 'என்னை யாரும் கட்டாயப்படுத்தியோ, கடத்தியோ கொண்டு வரவில்லை. நான் எனது கணவரோடு தான் இருக்கிறேன்' என்று கூறிவிட்டார்.

நீதிபதி, சுவிதாவை மனிதநேயமுடன் அனுப்பிவைத்தார். இருவரும் தங்களது உறவுகளின் பாதுகாப்புடன் அரசுப் பேருந்தில், தங்களது ஊருக்குப் பயணப்பட்டிருக்கிறார்கள். பேருந்து கீழவளவு வந்தபோது, சுவிதாவின் உறவினர்கள் கார்களில் விரைந்து வந்து, பேருந்தை மறித்து, தாங்கள் வந்த வாகனத்திலேயே சுவிதாவையும் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு விரைந்துள்ளனர். இந்தக் கடத்தல் விவகாரத்தில், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவரான உ.வாசுகி தலையிட்டு, சுவிதா உடனடியாக மீட்கப்படுவதற்கு உழைத்திருக்கிறார். இந்தச் சம்பவங்கள் எல்லாம் கடந்த 12-ம் தேதி நடந்திருக்கிறது. தனது மகளை எப்படியாவது மனிதநேயமிடமிருந்து பிரித்துவிட  வேண்டும்

என்று செல்வம் செய்த முயற்சிகளெல்லாம் தோல்வி அடைந்துவிட்டன. 

இதையடுத்து, கரூரைச் சேர்ந்த அவரது நெருங்கிய தி.மு.க நண்பர் ஒருவரிடம் செல்வம் தனது நிலையைச் சொல்லிப் புலம்பியிருக்கிறார். அந்த நபரும், இவ்விஷயத்தை முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் கவனத்துக்குக் கொண்டுபோயிருக்கிறார். அதன்பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை... நேற்று (16-12-2017) கோர்ட்டுக்குப் போன சுவிதாவும் மனிதநேயமும் இப்போதுவரை ஊர் திரும்பவில்லை. விசாரித்ததில், சுவிதாவின் தந்தைக்குப் பயந்துக்கு எங்கேயோ பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் மட்டும் கிடைத்தது'' என்றனர்.

தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசினோம்... ''இந்தக் காதல் விவகாரம் குறித்து என்னிடமும் சிலர் நேரில் வந்து சொன்னார்கள். பொதுவாக, இதுபோன்றக் காதல் விவகாரங்களில் நான் தலையிடுவதில்லை என்று கூறி அவர்களைத் திருப்பியனுப்பிவிட்டேன். அதற்குமேல் இவ்விஷயத்தைப் பற்றி எனக்கு ஒன்றும்தெரியாது'' என்றார்.