Published:Updated:

2 லட்சம் பேரிடம் ரூ.500 கோடி சுருட்டிய தம்பதியர் கைது!

மும்பை: 7 மாநிலங்களில் 2 லட்சம் பேரிடம் ரூ.500 கோடி சுருட்டிய  கணவன்-மனைவி கைது செய்யட்டனர்.

மகராஷ்ட்ரா மாநிலம் நாகப்பூரைச் சேர்ந்தவர் உல்கஸ் பிரபாகர் கயர் (33). இவரது  மனைவி ரக்ஷா (30). இருவரும் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள்.  இருவரும் சேர்ந்து டெல்லியில் 'ஸ்டாக் குரு இந்தியா' என்ற நிதி நிறுவனத்தை  தொடங்கினார்கள்.

அப்போது அவர்கள் தங்கள் உண்மையான பெயரை மறைத்து விட்டு லோகேஷ்வர் தேவ்,  பிரியங்கா என்ற போலி பெயரில் அந்த நிதி நிறுவனத்தை தொடங்கி இருந்தனர். அதிக  சம்பளம் கொடுத்து ஏஜெண்டுகளை நியமித்த அவர்கள் தங்கள் நிறுவன திட்டங்கள் பற்றி  நட்சத்திர ஓட்டல்களில் கூட்டம் நடத்தி அறிவிப்புகளை வெளியிட்டனர். கூட்டத்துக்கு  வந்தவர்களுக்கு பரிசுகள் வாரி, வாரி வழங்கப்பட்டன.

ஒருவர் முதலீடு செய்யும் பணத்தில் இருந்து 6 மாதத்துக்கு தலா 20 சதவீத தொகை  திரும்ப தரப்படும். 7-வது மாதம் முழுத் தொகையையும் பெறலாம் என்று கவர்ச்சிகரமாக  அறிவித்தனர். வாடிக்கையாளர்கள் பணம் பங்கு சந்தைகளில் முதலீடு  செய்யப்படுவதால், அதிக லாப பணத்தை திரும்ப கொடுப்பதாக அறிவித்தனர். இந்த  கவர்ச்சி அறிவிப்புகளை நம்பி டெல்லிவாசிகள் திரண்டு வந்து பணம் கொடுத்து நிதி  நிறுவன திட்டங்களில் சேர்ந்தனர்.

மிக குறுகிய காலத்தில் ஸ்டாக் குரு இந்தியா நிறுவனம் பற்றி மக்களிடம் தகவல்கள்  பரவியது. இதனால் பல்லாயிரக்கணக்கானவர்கள் போட்டி போட்டு பணம் கட்டினார்கள்.  டெல்லியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம்.  சிக்கிம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் 'ஸ்டாக்  குரு இந்தியா' நிறுவன கிளைகள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் பல நூறு கோடி  ரூபாய் குவிந்தது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்டாக் குரு இந்தியா நிறுவனத்தை  மூடிவிட்டு கணவன்-மனைவி இருவரும் திடீரென தலைமறைவாகி விட்டனர். இதை  அறிந்ததும் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். டெல்லி போலீசில் புகார்  செய்தனர். டெல்லி போலீசின் பொருளாதார விவகாரத்துறை பிரிவு நடத்திய  விசாரணையில் ஸ்டாக் குரு இந்தியா நிதி நிறுவனத்தில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 62  பேர் பணம் கட்டி இருப்பது தெரிந்தது. இவர்களில் 14 ஆயிரத்து 303 பேர் புகார்  கொடுத்தனர். தீவிர விசாரணையில் ரூ.500 கோடி பணத்துடன் கணவனும்,  மனைவியும் தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

##~~##
அவர்கள் இருவரையும் டெல்லி போலீசார் கடந்த சில மாதங்களாக தேடி வந்தனர்.  மொராதபாத், டேராடூன், ஆழ்வார், நாக்பூர், கோவா உள்பட சில நகரங்களில் அவர்கள்  பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல்களை தொடர்ந்து போலீசார் அங்கு தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் தப்பி ஓடியபடி இருந்தனர். இந்த நிலையில்  கணவன்-மனைவி இருவரும் மகராஷ்ட்ரா மாநிலம் ரத்னகிரியில் பிடிபட்டனர்.
ஒரு வீட்டில் சித்தார்த், மாயா என்ற பெயரில் அவர்கள் தங்கி இருந்ததை அறிந்த  டெல்லி போலீசார் அவர்களை பொறி வைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணையில் இந்தியா முழுக்க பிரபாகர் கயர் பல்வேறு பெயர்களில் பல நூறு கோடி  ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி போட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் மட்டும் அவர் 8 பங்களா வைத்துள்ளார். 20 வங்கிகளில் அவர் 94  கணக்குகள் வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் முடக்கினார்கள்.  கணவன்-மனைவி இருவரிடம் இருந்தும் ரூ.500 கோடி பணத்தை மீட்க டெல்லி  போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.