வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (05/01/2018)

கடைசி தொடர்பு:15:07 (05/01/2018)

ஆந்திரக் கொள்ளையன் முண்டேல் பாஜூவைப் பொறிவைத்து பிடித்த கதை..!. வேட்டையாடு.. விளையாடு! பகுதி 3


               போலீஸ்


ந்திர மாநில கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற டீமில் இருந்தவர்களில் ஒருவர், முதல்நிலைக் காவலர் ஜி.லோகநாதன். இப்போது பணி ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். லோகநாதனை நேரில் சந்தித்துப் பேசியபோது, 'ஆபரேஷன் ஆந்திரா'-வின் ஆரம்பம் முதல் முடிவுவரை,  ஒன்றுவிடாமல் நினைவில் வைத்திருந்தது, பிரமிப்பாக இருந்தது. இனி லோகநாதன் பேசியதிலிருந்து...
"தண்டையார்பேட்டை காவல் நிலையம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. இந்தக் காவல் நிலையத்தில்தான் கடைசியாகப் பணியாற்றி, பணி ஓய்வும் பெற்றேன். அன்று நான் டியூட்டியில் இருந்தபோதுதான், தண்டையார்பேட்டை போலீஸ் குவாட்டர்சில் கொள்ளை என்ற தகவல் கிடைத்தது. கொள்ளை நடந்த ஸ்பாட்டைப் பார்க்க இன்ஸ்பெக்டர் நவீன் சாருடன் நானும் போயிருந்தேன். போலீஸ் குவாட்டர்ஸ்களாகப் பார்த்து கொள்ளையடிப்பவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது, இந்தக் கொள்ளைக்குப் பிறகுதான் தெரியவந்தது. கொள்ளையடிக்கும் வீட்டிலேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு, அடுப்பு இருக்கும் பகுதியில் மலமும் கழித்து விட்டுப் போவதை, ஆந்திராவின் விஜயவாடா  கொள்ளையர்களில் ஒரு பிரிவினர் செய்வார்கள். அதை இந்த ஸ்பாட்டில் பார்க்க முடிந்தது. முதல் முடிச்சு இப்படியாக அவிழ்ந்தது. அடுத்த முடிச்சு அந்த வீடுகளில் கண்ட இடத்தில் கிடந்த சிகரெட் துண்டுகள் அவிழ்த்தது. அந்த காலகட்டத்தில் ஆந்திராவில் அதிகமாக விற்பனையான 'ஃபாஷன் ஷோ' சிகரெட் துண்டுகள்தாம் அவை. அப்படிச் சிதறிக் கிடந்த சிகரெட் துண்டுகளை ஒன்றுவிடாமல் நான் சேகரித்ததைப் பார்த்த இன்ஸ்பெக்டர் நவீன் சார், என்னை தட்டிக் கொடுத்தார். வேலையில் திருப்தி இல்லை என்றால், நவீன் சாரிடம் வேலையே பார்க்க முடியாது. அப்படி ஒரு கேரக்டர் அவர். அந்த சிகரெட் துண்டுகள்தாம், எங்களை ஆந்திராவரை கொண்டுபோய் நிறுத்தியது. இணை கமிஷனர் சைலேந்திர பாபு சாரின் வொர்க், இதில் அபாரமாக இருந்தது. அவருடைய ஐ.பி.எஸ். பேட்ச் மேட் அதிகாரியான சுரேந்திரநாத், ஆந்திராவில் டி.ஐ.ஜி. ரேங்கில் இருந்தார். அவரிடம் சைலேந்தர் சார்  தனிப்பட்ட முறையில் பேசி, நாங்கள் ஆந்திராவில் ரகசியமாகத் தங்குவதற்கு ஏற்பாடு செய்ததோடு தேவைப்பட்ட அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்தார்.
                                                              

எஸ்.ஐ. ஜி.லோகநாதனைப் பாராட்டும்,  தினகரன் ஐ.பி.எஸ். (வேறொரு நிகழ்வு)

அதோடு விடவில்லை, எங்கள் டீமில் அனைவருக்கும் வழிச் செலவுக்கும் பணத்தை ரெடி செய்துகொடுத்தார். வழக்கு விசாரணைக்காக 'அவுட்ஸ்டேஷன்'  போகும்போது ஆகும் செலவை டிபார்ட்மென்ட்டில் எழுதிக் கேட்டு, அந்தத் தொகை, கைக்கு வருவதற்குள் கொள்ளையர்கள், இன்னொரு குவாட்டர்ஸில் கைவரிசை காட்டிவிடுவார்கள் என்பது சைலேந்தர் சாருக்குத் தெரியும். அதனால்தான் அவரே பண உதவிக்கு முன்வந்தார். இன்னொரு பக்கம் கமிஷனர் விஜயகுமார் சார், ஆந்திர போலீஸ் டிபார்ட்மென்ட்டில் அவர் லெவலுக்குப் பேசி உதவிகளைக் கேட்டு வாங்கினார். அந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் வசதியான அதிகாரிகள் கையில் மட்டும்தான் செல்போன் இருக்கும். இன்ஸ்பெக்டர் நவீன் உள்பட எங்கள் அனைவரிடமும் அப்போது இருந்தது `பேஜர்'  கருவி மட்டும்தான். வெறும் பேஜரை மட்டும் கையில் வைத்துக்கொண்டு நம்பிக்கையுடன் நாங்கள் ஆந்திராவுக்கு ரயிலேறினோம். இன்ஸ்பெக்டர் நவீன் சார், "பாய்ஸ், அக்யூஸ்ட்டுகளைப் பிடிக்காம ஒரு பயலும் மெட்றாஸுக்குத் திரும்ப முடியாது. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்" என்ற வார்த்தையை சென்னையில் ஆரம்பித்து, ஆந்திராவுக்கு ரயில் ஏறிய நிமிடம் வரை எங்களிடம் சொல்லிக்கொண்டேதான் இருந்தார். அது ஒரு மாதிரி, வெறி ஏற்றக்கூடிய ஊக்கம்தான். விஜயவாடாவில் மாரேபூடி என்ற கிராமத்தில்தான் கொள்ளைக் கும்பல் இருக்கிறது என்பதை நாங்கள் ஆந்திராவில் 'கேம்ப்' போட்ட  அன்றே கண்டுபிடித்துவிட்டோம். முன்னரே திட்டமிட்டபடி ஏற்பாடு செய்திருந்த இடத்தில், தங்கிக்கொண்டோம்.  நாங்கள் யாரும் பேன்ட் அணியவில்லை. ஷூ போடவில்லை. ரப்பர் செருப்புகளை வாங்கி அதை மணலில் தேய்த்து அழுக்காக்கிக் கொண்டோம். புதிய லுங்கிகளை வாங்கி அதை நன்றாகத் துவைத்து, பின்னர் அழுக்காக்கிக் கட்டிக்கொண்டோம். இங்கிருந்து போகும்போது அணிந்திருந்த சட்டையை அங்கே அணியவில்லை. ஆந்திராவை அடையாளப்படுத்தும் விதமான கலர் சட்டையை வாங்கி, அதையும் அழுக்காக்கி போட்டுக்கொண்டோம். உள்ளூர் ஆள்போல தெரிய வேண்டும் என்பதற்காக அப்படி ஒரு ஏற்பாட்டை செய்தோம். தலையில் சும்மாடு வைப்பதுபோல் தலைப் பாகையைக் கட்டிக் கொண்டோம். தலைப்பாகைக்கு வெளியில் தெரிவதுபோல கொஞ்சம் வெற்றிலை, சில பீடிகளை வைத்தோம்.

                 ஓய்வு ஏ.சி.பி., என்.நவீன், ஓய்வு ஏ.டி.சி. கே.ஆர்.விட்டல்ராமன்

வெளியில் கும்பலாகப் போகாமல் தனித்தனியாகப் போனோம். அதேசமயம் அனைவருமே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாததுபோல் இருப்போம். ஆந்திர போலீஸ் மற்றும் இன்ஃபார்மர்கள் மூலமாகக் கிடைத்த தகவலை வைத்து, பாஜூ என்கிற முண்டேல் பாஜூதான் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் என்பது தெரிந்தது. அதை உறுதி செய்தது, அன்றைக்கு இருந்த ஆந்திர போலீஸாரின் டெக்னாலஜி. சைலேந்திர பாபு சாரின் ஆந்திர பேட்ஜ்மேட் அதிகாரி, அந்த மாநிலத்தில் எங்களுக்கு முழுமையாக உதவினார். அவருடைய ஸ்பெஷல் டீம் போலீஸ் ஒருவர், குறிப்பிட்ட ஒரு போலீஸ் ஸ்டேஷனை சொல்லி,  'அந்த  ஸ்டேஷனுக்கு நீங்கள் போய் விடுங்கள், ஃபிங்கர் பிரின்ட் (விரல் ரேகை) பார்த்து ரிசல்ட்டைச் சொல்லி விடுவார்கள், நீங்கள்  அங்கு வருகிற தகவலை நாங்கள் சொல்லிவிட்டோம்' என்று சொல்லி வழியும் காட்டினார். சென்னையைப் பொறுத்தவரை, ஃபிங்கர் பிரின்ட்டை வைத்து ஆளை 'ட்ரேஸ்' செய்வது என்பது அப்போது மிகப்பெரிய வேலை. அதற்கென்று தனி டிபார்ட்மென்ட்டே இயங்குகிறது. குறிப்பிட்ட அந்த ஸ்டேஷனுக்குப் போன பிறகுதான், ஆந்திர மாநிலக் காவல்துறையின் டெக்னாலஜி எங்களை மிரள வைத்தது.  
 (தொடரும்)
 


டிரெண்டிங் @ விகடன்