வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (08/01/2018)

கடைசி தொடர்பு:12:55 (08/01/2018)

போலீஸ் கல்லாவை காலி செய்த முண்டேல் பாஜூ! - வேட்டையாடு, விளையாடு பகுதி - 4

                              போலீஸ்

 

ங்களிடம் ஃபிங்கர் பிரின்ட்டை வாங்கிய அந்த ஸ்டேஷன் ஹெட் கான்ஸ்டபிள், அதை அப்படியே கம்ப்யூட்டரில் அப்ளை செய்துவிட்டு, சில நிமிடங்கள் காத்திருந்தார். நாங்கள் ஏறக்குறைய முப்பது கைரேகைகளை அங்கே கொண்டு போயிருந்தோம்.  அத்தனை ரேகைகளும் சேர்த்து மொத்தமாக அரைமணி நேரம் கூட ஆகவில்லை.  கடைசி ரேகையாக  ஒருரேகை 'மேட்ச்' ஆனது. அதே வேளையில், அந்த ஹெட் கான்ஸ்டபிள் உதட்டில் சலிப்பும் சேர்ந்து மேட்ச் ஆனதைக் கவனித்தோம். அந்த ரேகைக்கு உரியவன் தான், போலீஸ் இன்ஃபார்மர் எங்களிடம் முன்னரே யூகத்தில் சொல்லியிருந்த பாஜூ என்கிற முண்டேல் பாஜூ. கம்ப்யூட்டரில் முண்டேல் பாஜூ-வின் புகைப்படம், அவன்மீது இருக்கும் வழக்கு விவரங்கள், குடும்பம் என அனைத்தும் இருந்தன. கைரேகையை எங்களுக்கு எடுத்துக்கொடுத்த அந்த ஹெட் கான்ஸ்டபிள் அப்போது ஒரு விஷயத்தையும் சொன்னார். 'ஒரு கொள்ளை வழக்கில் இந்த முண்டேல் பாஜூவை நாங்கள் பிடித்து வந்து 'செல்' லில் போட்டு வைத்திருந்தோம். மூன்றுநாள் வரையில் ஊறப்போட்டு விசாரித்தும் அவனிடம் கொள்ளைகுறித்த எந்தத் தகவலையும் வாங்க முடியவில்லை. அதற்குப் பின்னால் அவனைக் கட்டி வைத்திருந்த தாம்புக்கயிறை அவிழ்த்துவிட்டு, அவனுக்கு உணவும், குடிநீரும் கொடுத்தோம். ஆளும் சோர்ந்து போய்விட்டான். அக்யூஸ்ட் இவன் கிடையாது என்று ஏகமனதாக நாங்கள் முடிவு செய்தோம். எஸ்.பி.யிடம் இந்தத் தகவலைச்  சொல்லிவிட்டு, அவர் அனுப்பிவிடச் சொன்னால் காலையில் ரிலீஸ் செய்துவிடலாம் என்று இன்ஸ்பெக்டர் எங்களிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார். அதன்படி அன்றிரவு முண்டேல் பாஜூவை ஸ்டேஷன் 'லாக்கப்-செல்' லிலேயே ஒரு ஓரமாகப் படுக்கச் சொன்னோம். 'வலி, வலி' என்று கத்திக்கொண்டிருந்தான். மருத்துவ செலவுக்காக ஆளுக்கு நூறுரூபாய் போட்டு அவன் கையில் கொடுத்து அனுப்பலாம் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

                    நவீன்சந்திரா, விட்டல்ராமன் (ஆபரேஷன் ஆந்திராவில் இடம்பெற்ற   ஓய்வு அதிகாரிகள்)

காலையில் நாங்கள் முண்டேல் பாஜூ படுத்திருந்த இடத்தைப் பார்த்தபோது போர்வை மட்டுமே இருந்தது. ஆளைக் காணவில்லை.
ஸ்டேஷனில் இருக்கும் பெட்டிக்காசு (ஒரு மாத ஸ்டேஷன் செலவுக்கு அரசாங்கம் கொடுக்கும் பணம்) வைக்கும் இரும்புப் பெட்டி உடைந்து கிடந்தது. தாம்புக்கயிறு போட்டு கட்டி வைத்திருந்த வரையில் சும்மா இருந்தவன், அதை அவிழ்த்து ரிலாக்ஸ் ஆக படுக்க விட்டதும், 'லாக்கப்- செல்' லை விட்டே  சாதாரணமாகத் தப்பித்துவிட்டான். அப்படிப் போகும்போது ஸ்டேஷன் கல்லாப் பெட்டியையும் காலி செய்து விட்டுப் போயிருக்கிறான். அதன் பிறகுதான் பெரிய அளவில் டீமை ரெடி செய்து அவனைப் பிடித்தோம். 'மோசமானவன் சார். இத்தனைக்கும் ஸ்டேஷனில் நைட் டியூட்டி ஆட்கள்  ஏழுபேர் இருந்தனர். யாரும் தூங்கக்கூட இல்லை.' என்று ஹெட் கான்ஸ்டபிள் சொல்ல, முண்டேல் பாஜூவை  மடக்க  'தில்' மட்டும் போதாது,  என்ற நிலைக்கு எங்கள் டீம் வந்துவிட்டது. 'ஏற்கெனவே நாம் தங்கியிருந்த இடத்துக்குப் போய் மற்ற விஷயங்களைப் பேசி முடிவு செய்யலாம், டி.சி.மௌர்யா சாரிடமும், ஜே.சி. சைலேந்தர் சாரிடமும் இதுபற்றிப் பேசிய பின்னர், அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கலாம்' என்று இன்ஸ்பெக்டர் நவீன் சார் சொல்ல,  அங்கிருந்து கிளம்பினோம். 

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தபோது,  ஸ்டேஷனுக்குப் பின்பக்கத்திலிருந்து ,  ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்... என்று யாரோ காற்றில் கலந்து கூப்பிட்டது காதில் விழுந்தது. கும்மிருட்டு, புதிய இடம், தேடிவந்த ஆளின் திகிலடிக்கிற இன்னொரு பக்கம்... இந்த வேளையில் ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்... அழைப்பை ஏற்பதா, தவிர்ப்பதா என்ற கேள்வி அச்சத்தை அதிகமாக்கி நெஞ்சைக் கவ்வியது.  இன்ஸ்பெக்டர் நவீன்சார், லேசாக அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார். அவர் பார்த்ததும், இருட்டிலிருந்து ஒரு உருவம் வெளியில் விறைப்பாய்  வந்து நின்று ஒரு காக்கி சல்யூட் அடித்தது. அந்த உருவம், ஆந்திராவின் ஸ்பெஷல் டீம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர். 


                              உயரதிகாரிகளிடம் பாராட்டு பெறும் எஸ்.ஐ. ஜி.லோகநாதன்(வேறொரு நிகழ்வு)

'சார், எங்க டி.ஐ.ஜி. அய்யா, உங்களை டிஸ்டன்ஸில் வைத்து  'சேப்டி' யாகப் பாலோ பண்ணச் சொல்லி என்னை அனுப்பி வைத்திருக்கிறார்.' என்று அறிமுகம் செய்துகொண்டார். அவரும் அவர் பங்குக்கு என்ன சொல்லப் போகிறாரோ என்ற அடுத்த கேள்வி  எனக்குள் எழுந்தது. நான் நினைத்தபடியே அவரும் சொன்னார். "சார், நீங்க கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் அந்த முண்டேல் பாஜூவைப் பிடிச்சிடலாம். அந்த நேரத்துல அவனோட அசோசியேட் (கூட்டாளி) கிருஷ்ணமூர்த்தி அவன்கூட இல்லாமல் இருக்கணும்.  அவன், இருட்டில் கூட மிஸ் ஆகாம பயரிங் பண்ணத் தெரிஞ்சவன் சார். எங்க ரெகார்ட்ல அவன் பேரே தோட்டா கிருஷ்ணமூர்த்திதான்" என்று அடுத்த அபாயத்தை சங்கு இல்லாமலே ஊதினார். அவ்வளவுதான் இன்ஸ்பெக்டர் நவீன் சார்,  முன்பு போட்டு வைத்திருந்த மொத்த பிளானையும் மாற்ற ஆரம்பித்து விட்டார். மீண்டும் முதலிலிருந்து பிளான் உருவானது. அந்தப் பிளானில், 'தோட்டா கிருஷ்ணமூர்த்தி' யின் ஜாதகமும் சேர்க்கப் பட்டிருந்தது. எனக்கோ, நாம் ஆந்திராவுக்குக் கொண்டு வந்த கைரேகைகளில், தோட்டா கிருஷ்ணமூர்த்தியின் கைரேகை மட்டும் எப்படி சிக்கவில்லை என்ற கேள்வி மண்டைக்குள் குத்திக்கொண்டே இருந்தது.
(தொடரும்)

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளைப் படிக்க...
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
 


டிரெண்டிங் @ விகடன்