வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (09/01/2018)

கடைசி தொடர்பு:16:16 (09/01/2018)

பொதுக்கழிப்பறை... கையில் நாளிதழ்... போலீஸின் பக்கா பிளான்! - வேட்டையாடு, விளையாடு! பகுதி - 5

 


                          போலீஸ்

 மிழ்நாடு போலீஸ் ஆந்திரக் கொள்ளையர்களை மிச்சமில்லாமல் அள்ளிவர முதலில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து ஆலோசிக்க வேண்டும்... ஆந்திர உயரதிகாரிகள் ரெடிசெய்து கொடுத்த இடத்தில் போய் உட்கார்ந்தால்தான், இடையூறு இல்லாமல் இதுபற்றி யோசிக்க முடியும் என்று தோன்றியது. ஆகவே, அந்த இடம் நோக்கி இருட்டில் திரும்பிக் கொண்டிருந்தோம். ஜே.சி.சைலேந்தர் சார் வழியாக ஆந்திரா டி.ஐ.ஜி. சுரேந்திரநாத் சார் அனுப்பி வைத்த ஸ்பெஷல் டீம் போலீஸார் எங்களைப் பின் தொடர்ந்தபடிதான் இருந்தனர். ஏற்கெனவே, காற்றில் 'ஸ்ஸ்ஸ்' என்று கூப்பிட்ட அதே எஸ்.ஐ. (சப்-இன்ஸ்பெக்டர்) மறுபடியும் இன்ஸ்பெக்டர் நவீன் சார் அருகில் வந்தார். 'சார், நீங்கள் தங்கியிருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் ஒரு பப்ளிக் டாய்லெட் இருக்கிறது. ஊருக்கு அவுட் -சைடில் இருக்கும் டாய்லெட் என்பதால், சுவரேறிக் குதித்து அக்யூஸ்ட்டுகள் அங்குதான் இரவில் தங்குவார்கள். அதிலும் கொள்ளையர்கள் அதிகமாகத் தங்குவார்கள். ஆந்திராவில் ஏதாவது மேஜரான பிரச்னை என்றால், நாங்கள் அந்த டாய்லெட்டைத்தான் ரகசியமாக ரவுண்ட் பண்ணுவோம், அக்யூஸ்ட்டுகளை வெளியே போகவிட்டு பின்னால் போய் 'பாலோ' செய்து தூக்குவோம். இல்லையென்றால் பாதுகாப்பு கருதி மறுபடியும் அந்த டாய்லெட் பகுதிக்குள் வந்து பதுங்க மாட்டார்கள்' என்றார். இதைக்கேட்ட இன்ஸ்பெக்டர், மீண்டும் யோசனையில் மூழ்கிவிட்டார். 'சரி,  இன்னைக்கும் கதை முடியப் போறதில்லே. அடுத்து வேற ஏதாவது புதுசா சார் யோசிச்சாதான் உண்டு' என்று எனக்குள் பேசிக் கொண்டேன். அப்போது, நவீன் சார், 'சரிப்பா, எல்லோரும்  வாங்க, ஏதாவது சூடா சாப்பிடலாம்'  என்று சாலையின் எதிர்பக்கம் ஜொலித்த நள்ளிரவு டீக்கடைக்குக் கூட்டிப்போனார்.  டீ, பஜ்ஜி, போன்டா என்று அந்த நேரத்திலும் கடையில் மசாலா வாசனை களை கட்டியது. கடையோடு இணைந்த 'பங்க்' கில் நியூஸ் பேப்பர்ஸ், புக்ஸ் தொங்கிக் கொண்டிருந்தது. 'இப்போதுதானே டீயும், பிஸ்கெட்டும் சாப்பிட்டோம்?' என்று மீண்டும் என்னுள் கேள்வி ஓடியது.  

ஓய்வு ஏ.சி.பி.  நவீன்சந்திராநாகேஷ்அப்போது நவீன் சார், ஆந்திரா ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ.யைக் கூப்பிட்டு, அதிக பக்கங்களைக் கொண்ட நியூஸ் பேப்பர் எது என்று கேட்டு, அந்தப் பேப்பரில் ஐந்தை வாங்கிக் கையில் வைத்து கொண்டார். பின்னர்  டீக்கடையை விட்டு, நாங்கள் தங்கப்போகும் இடத்தை நோக்கி  நடக்க ஆரம்பித்தோம். அந்த இடமும் வந்தது. ஆனால், உள்ளே போகாமல் வாசலிலேயே  இன்ஸ்பெக்டர் நவீன் சார் நின்றுவிட்டார். கடையில் வாங்கிய ஆந்திரா பேப்பரைப் பிரித்து ஒவ்வொருவர் கையிலும் இரண்டு முழுபக்கத்தைக் கொடுத்தார். 'நீங்க, எல்லோரும் அந்த டாய்லெட்டை ரவுண்ட் பண்ணுவது போல் இடைவெளி விட்டு படுத்துடுங்க. யாரும் தூங்கக் கூடாது,  டாய்லெட்டுக்கு உள்ளேயும் போகக் கூடாது சரியா? இதைமட்டும் இன்று செய்வோம். நாளைக்கு என்ன செய்யலாம் என்பதை விடியற்காலையில் பேசுவோம்' என்று சொல்ல பேப்பர்களோடு டாய்லெட்டை நோக்கிப் போனோம். அந்த நேரத்திலும், டி.சி.மௌர்யா சார் அனுப்பிய மெசேஜ்,  இன்ஸ்பெக்டர்  நவீன்சாருக்கு பேஜரில் வந்தபடியே இருந்தது. சத்தம் வெளியில் கேட்காதபடி பேஜரை வைப்பரில் போட்டிருந்தார் இன்ஸ்பெக்டர். அந்த மெசேஜில் என்ன இருந்ததோ, தெரியாது... ஆனால், அதை எடுத்துப் பார்க்கும்போதெல்லாம் இன்ஸ்பெக்டர் யோசனையில் மூழ்கி விடுவார். வீசும் பனிக்காற்றில் உதடுகள் வெடித்து, மேலும்-கீழுமாக அவை ஒட்டிக் கொண்டு அவதிப்பட்ட வேளையில், வெளியில் இருக்கும் 'கொசுக்கடி' க்கும் தயாரானோம். உதட்டில் தடவிக் கொள்ள அதற்காகத் தேங்காய் எண்ணெய் பாக்கெட்டையும் தயாராகவே கையில் வைத்திருந்தோம். கொசுக்கடியிலிருந்து தப்பிக்க அந்த எண்ணெய்யை கால், கைககளில் தடவிக் கொண்டோம்.

                    ஐ.பி.எஸ்.அதிகாரிகள்  விஜயகுமார், சைலேந்தர்பாபு

படுப்பதும், எழுந்து உட்கார்வதுமாக அந்த இரவு முழுவதும் டாய்லெட் வாசலில் கிடந்தோம். அதிகாலையில் கொஞ்சம் கொஞ்சமாக பனி விலக ஆரம்பித்து வெளிச்சம் தெரியத் தொடங்கியது. எங்கள் எல்லோரிடமும் அக்யூஸ்ட்டுகளின் போட்டோ இருந்ததால் அதைக் கையில் தயாராக வைத்துக்கொண்டோம். அதிகாலை ஐந்தரை மணிக்கு அந்த டாய்லெட் வாசல் பூட்டை ஒருவர் வந்து திறந்தார். அதற்குள் நான்கைந்து பேர் வரிசையாக வந்துவிட்டார்கள். டாய்லெட்டை திறந்ததும், உள்ளே இருந்தும்  நான்குபேர் சாதாரணமாக வெளியே போனார்கள். முகத்தை லுங்கியால் மூடியபடி போன அவர்களை ஃபாலோ செய்வதா, வேண்டாமா என்றும் குழப்பம். மூடிக்கிடந்த டாய்லெட்டிலிருந்து வருகிற அந்த நான்குபேருமே ஏதோ ஒரு விதத்தில் அக்யூஸ்ட்டாகத்தான் இருக்க முடியும். நம்முடைய கொள்ளை வழக்கில் அவர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வியுடன் அருகருகே படுத்திருந்த ஸ்பெஷல் டீம் ஆட்களுக்குள் கேட்டுக்கொண்டோம். 'அவங்க அக்யூஸ்ட் இல்லை, பாலோ பண்ணாதீங்க' என்று கார்னர் பாய்ன்டிலிருந்து இன்ஸ்பெக்டர் நவீன் சார் குரல் மெல்லியதாய்க்  கேட்டது. திரும்பிப் பார்த்தால், தலைமுதல் கால் வரை நியூஸ் பேப்பரைப் போர்வையாக மாற்றி குத்துக்காலிட்டு அங்கே  உட்கார்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் நவீன்சார். கூடவே  கொசுவையும் அடித்துக்கொண்டிருந்தார். ஒதுக்கிக் கொடுத்த வசதியான அறையில் படுக்காமல் எங்களுடன் டாய்லெட் வாசலில் படுத்துக் கிடந்ததைப் பார்த்ததும், அவர்மீது மரியாதை கூடியது. அதைவிட டாய்லெட்டிலிருந்து வெளியே போன நான்கு பேருமே நம்முடைய கேஸ் அக்யூஸ்ட் லிஸ்ட்டில் இல்லை என்பதையும் சொல்லி எங்களை ஆச்சர்யப்படுத்தினார். 

(தொடரும்)

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளைப் படிக்க
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4


டிரெண்டிங் @ விகடன்