ஆயுதத்துடன் கொள்ளையன்... நாலு போலீஸுக்கு ஒரு மரம்! வேட்டையாடு, விளையாடு! பகுதி - 6 | Police and criminal chasing story part 6

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (10/01/2018)

கடைசி தொடர்பு:16:55 (11/01/2018)

ஆயுதத்துடன் கொள்ளையன்... நாலு போலீஸுக்கு ஒரு மரம்! வேட்டையாடு, விளையாடு! பகுதி - 6                               காவல்துறை

...ன்ஸ்பெக்டர் நவீன் சாரின் கணிப்பு எங்களை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோனது. அவர் அருகில் போனோம். பேஜருக்கு வந்திருந்த ஒரு மெசேஜை வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டே  நவீன்சார் சொன்னார். 'மெயின் அக்யூஸ்ட் முண்டேல் பாஜூவுக்கு இங்கிருக்கும், பெண் பூ வியாபாரி ஒருத்தியுடன் இல்லீகல் தொடர்பு இருக்கிறது. முண்டேல் பாஜூவின் மூவ்மென்ட்டுகள் அத்தனையும் அவளுக்குத் தெரியும். ஆந்திரப் போலீஸின் விபசாரத் தடுப்புப் பிரிவிலும் அவள்மீது நிறைய வழக்குகள் இருக்கின்றன. முதலில் அவளைப் பிடிக்க வேண்டும், அவளைப் பிடித்துவிட்டால், முண்டேல்பாஜூ வை பிடிப்பதும் ஈசிதான்.' என்றார். அப்போது ஆந்திரா ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ., 'சார், நீங்கள் சொல்லும் ஆளை, மார்க்கெட்டில் வைத்து அரைமணி நேரத்தில் மடக்கி விடலாம், அவள் அங்கு கடையைப் போடவில்லை என்றாலும் வீடு தெரியும். அவள்மீது 'பலான'  கேஸ்கள் இருப்பது எங்களுக்கும் தெரியும். அவள்தான் முண்டேல் பாஜூவின் அசோசியேட் என்று, நீங்கள் சொல்லித்தான் சார்,  எங்களுக்கே தெரியும். உண்மையிலேயே தமிழ்நாட்டுப் போலீஸ் நெட்வொர்க் அபாரம் சார்' என்று பாராட்ட ஆரம்பித்துவிட்டார். நாங்கள் எந்தப் பாராட்டையும் காதில் வாங்கும் நிலையில் அப்போது இல்லை என்பதால், அவருக்கு எந்த ரியாக்ஸனும் காட்ட முடியவில்லை. பொழுது லேசாக விடிந்ததுமே, டாய்லெட் ஏரியாவைக் காலிசெய்து விட்டுக் கிளம்பிவிட்டோம்.  

ஜி.லோகநாதன் (ஓய்வு எஸ்.ஐ)ஆந்திரப் போலீஸ் உதவியுடன் முண்டேல் பாஜூவின் கள்ளக்காதலியை, கொஞ்ச நேரத்திலேயே எங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து, விசாரிக்க ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் அந்தப் பெண்ணிடம் 'ஸ்டேட்மென்ட்' வாங்கிய விதத்தை ஆந்திரப் போலீஸார் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். கொள்ளையர்களின் கையில் நாட்டுத் துப்பாக்கிகளும், கத்திகளும் மட்டும்தான் இருக்கின்றன என்பதையும், கொள்ளையர்களின் இருப்பிடத்தையும் அந்தப் பெண், ஸ்டேட்மென்ட்டில் சொல்லியிருந்தார். முண்டேல்பாஜூவைப் பிடிக்கும் வரை, அந்தப் பெண்ணை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி ஆந்திரப் போலீஸில் சொல்லிவிட்டு இன்ஃபார்மர்கள் மற்றும் ஸ்பெஷல் டீமுடன் முண்டேல் பாஜூ ஏரியாவுக்குள் நுழைந்தோம்.

ஒரு கிலோ மீட்டர் தூர இடைவெளியில் எங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு, ஸ்பாட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். கொள்ளையர்கள் தங்கியிருந்த இடத்துக்கு எதிரே இருந்த அடர்த்தியான நான்கு மரங்களின் உச்சிதான் உங்களுக்கான பெட்ரூம் என்று இன்ஸ்பெக்டர் நவீன் சார், சொல்லி விட்டதால், யாருக்கு எந்த மரம் என்பதை யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். இருட்ட ஆரம்பிக்கும் வரையில் தனித்தனியாக தூரத்தில் நின்று கண்காணித்தோம். இருட்டியதும், ஒரு மரத்துக்கு நான்குபேர் என்ற கணக்கில் 16 பேர் மரங்களில் ஏறிவிட்டோம். மரத்துக்குக் கீழே இருட்டான மணல்திட்டு மறைவில் எஞ்சிய ஐந்துபேர் உட்கார்ந்து கொண்டனர். நள்ளிரவு இரண்டு மணி. செயல்படாமல் இருக்கும் பெரிய 'மில்' போன்ற அந்தப் பகுதியிலிருந்து, ஆட்கள் வெளியே வருவது மங்கலாகத் தெரிந்தது. மொத்தம் மூன்றுபேர்தான் அப்படி வந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் ஆயுதபலம் பெரிய அளவில் இல்லை என்பது முன்னரே தெரிந்த விஷயம் என்றாலும், கையில் நாட்டு வெடிகுண்டு போல் ஏதாவது இருந்து விட்டால் என்னாவது என்ற சந்தேகமும் எங்களுக்கு இருந்தது. ஆயுதமோ, நாட்டு வெடிகுண்டுகளோ இல்லை என்றாலும், போலீஸார் நெருங்கி விட்டால் அங்கிருந்து உடனே  தப்பித்து 'பாரஸ்ட்' பகுதிக்குள் போய்விடும் அளவிற்கு அந்த இடம் இருந்தது. உள்ளூராக இருந்தால் ‘தலைவாசல்’ எது என்று லோக்கல் ஏட்டய்யாவே அத்துப்படியாகச் சொல்லி விடுவார். பக்கத்து மாநிலத்தில் அந்தளவுக்கு நம்மால் ‘மேப்’ போடமுடியாதே. அந்த இடத்தை விட்டு, பின்பக்கமாக அவர்கள் கொஞ்சதூரம் வெளியே சென்று விட்டாலே காட்டுப் பகுதிதான் என்பதால், கவலையுடன் அவர்களின் அசைவைக் கவனிக்கத் தொடங்கினோம். அவர்கள் எடுத்து வைக்கும் அடி, பின்பக்கமாக இருந்தால், மொத்தமும் வீண்தான் என்ற பதைபதைப்பு நொடிக்கு, நொடி அதிகமாகிக் கொண்டே இருந்தது. அப்படியே மரத்தின் மீது  விடிய விடிய  கிடந்தோம்.

Police

கண்கள் அதிகமாக வலித்தது, வீக்கமும் அதிகமாகி விட்டது. இரவு இரண்டு மணிக்கு மேல் மரத்துக்கு இரண்டுபேர் என்ற கணக்கில் அப்படியே தூங்கச் சொல்லி இன்ஸ்பெக்டர் சொல்லியிருந்தார். காலையில் தூங்க வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ என்ற நிலையில் கிடைத்த மூன்று மணி நேரத் தூக்கத்தை சிலர், பயன் படுத்திக் கொண்டனர். பொழுது லேசாக விடிய ஆரம்பித்தது. ஒருவர் பின் ஒருவராக மரத்திலிருந்து இறங்க முடிவெடுத்தோம். முண்டேல் பாஜூவின் ஸ்பாட்டைப் பார்த்துக் கொண்டே இறங்கத் தொடங்கினோம். அப்போதுதான், வழக்கின் ஏ-ஒன் முண்டேல் பாஜூ, துப்பாக்கியில்லாமல், இடுப்பில் கத்தியை மட்டும் சொருகிக் கொண்டு அந்தப் பகுதியின் பின்பக்கம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். அது அடர்ந்த காட்டுப்பகுதி...
 (தொடரும்) 

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளைப் படிக்க
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4 

பகுதி 5


டிரெண்டிங் @ விகடன்