வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (11/01/2018)

கடைசி தொடர்பு:15:46 (11/01/2018)

கொள்ளையன் தப்பிக்க விசில் ! பதுங்க காடு... தனியாகச் சிக்கிய முண்டேல்பாஜூ...வேட்டையாடு, விளையாடு (தொடர் -(7)

 

கொள்ளையன் 

முண்டேல் பாஜூவை அப்போதுதான் நாங்கள், முதன் முதலாகப் பார்க்கிறோம். சுமாரான உயரம், சதைப் பிடிப்பில்லாத உடல்வாகு. தலையில் முண்டாசுப் போல் துணியைச் சுற்றிக் கட்டியிருந்தான். பாலைவனங்களில் திரியும் இந்திப் படத்து ஆசாமிபோல தொள தொள பைஜாமா அணிந்திருந்தான். ஆள்தான் கறுப்பா, சிவப்பா என்று கண்டு பிடிக்க முடியவில்லை. தூரம் அதற்குத் தடையாக இருந்தது. கையில் துணிமூட்டை போல் ஏதோ வைத்திருந்தான். 'காட்டுக்குள் நுழைந்த அவனைப் பின் தொடர்ந்து போவதா, வேண்டாமா? அவனைப் பின் தொடர்வதை மில்லில் இருக்கும் கூட்டாளிகள் பார்த்து விடுவார்களா?' என்று உள்ளுக்குள் கேள்விகள் ஓடியன. 'எந்தப் பக்கமும் சேதம் ஏற்படக் கூடாது. முண்டேல்பாஜூவை உயிரோடு பிடிக்க வேண்டும். அவனைப் பிடித்த உடனே  தகவலைக் கொடுக்க வேண்டும்.' என்று ஜே.சி. சைலேந்தர் சார் சொல்லியனுப்பியதை, இன்ஸ்பெக்டர் மீண்டும் நினைவூட்டினார்.மனிதர்களே இல்லாத பொட்டல் பகுதியின் மையத்தில், முளைத்திருந்த நான்கைந்து மரங்கள் மட்டுமே எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்ததால், இன்ஸ்பெக்டர் நவீன் சார் உத்தரவுக்காகக் காத்திருந்தோம். 'பாய்ஸ், இரண்டிரண்டு பேரா லெஃப்ட்ல போங்க, அதேபோல மில்லுக்கு ரைட்லயும் இரண்டிரண்டு பேரா போங்க. 'கன்' லோடில் இருக்கட்டும்.

 கொள்ளையன்   முண்டேல்பாஜூவை மடக்கிய  இன்ஸ்பெக்டர் நவீன், கமிஷனருடன்(பழைய பொறுப்பு)

இதற்கு மேலும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்க முடியாது. அக்யூஸ்ட்டோட லொக்கேஷனை ஃபிக்ஸ் பண்ணி விட்டோம் என்று  நைட்டே டி.சி.க்கும், ஜே.சி.க்கும் தகவல் போய் விட்டது. வந்த வேலையைச்  சீக்கிரம் முடிக்க வேண்டும், அக்யூஸ்ட் அடுத்த வேலையை ஆரம்பிக்க நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடாது. நேற்றிரவு நாம் திட்டமிட்டதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பேஜரை  'வைப்பர்' மோடில் வைத்துக் கொள்ளுங்கள். மெசேஜ் கொடுத்தால் உடனே ரிப்ளை கொடுங்கள். லேட் பண்ணக் கூடாது. ஆள் தப்பித்து ஓடினாலும் நேரடியாகப் பயர் செய்து விடாதீர்கள். ரவுண்ட் செய்த பிறகு மிச்சத்தைப் பேசுவோம்' என்று 'கமாண்டிங்' கொடுத்தபடி இன்ஸ்பெக்டரும் எங்களோடு நடக்க ஆரம்பித்தார். நடை என்றால், சாதாரண நடை அல்ல, ஓட்டமும், நடையுமாக...


ஏ.ஜி.மௌர்யா துணை கமிஷனர் (அன்றைய பதவி)எங்கள் வேகத்துக்கு ஈடுகொடுத்து இன்ஃபார்மரும் கூடவே வந்தனர். நடையை வேகப்படுத்திக் கொண்டே, ஆந்திரக் கொள்ளையர்களின் ஸ்டைல் குறித்து இன்ஃபார்மர்களிடம் பேசியபடியே வந்தோம். 'சார், இங்கிருக்கும் ராபரி அக்யூஸ்ட்டுகள், ஆபத்து என்றால், உடனே தலைப்பாகையில் மறைத்திருக்கும் விசிலை எடுத்து, ஊத ஆரம்பித்து விடுவார்கள். இந்த மாதிரியான இடத்தில் ஊதினால் விசில் சத்தம் அதிகமாகக் கேட்கும். கூட்டாளிகள் வெப்பனோடு (ஆயுதம்) உடனே வந்து விடுவார்கள், அல்லது தப்பித்து ஓடி விடுவார்கள். இரண்டுமே நடக்கலாம். காடுகளுக்குப் பக்கத்தில் தங்கும் அக்யூஸ்ட்டுகள் காட்டுக்குள் நுழைவதே ரெஸ்ட் எடுக்கத்தான். விசில் சத்தம் கூட்டாளிகளுக்குக் கேட்கும்  தூரத்தில்தான் தங்குவார்கள். எப்போதுமே கும்பலாகத் தங்க மாட்டார்கள். குடிப்பது, சாப்பிடுவது எல்லாமே தனித் தனியாகத்தான் இருக்கும். கொள்ளைக்குப் போகும் போது மட்டும்தான் ஒன்றாக இருப்பார்கள். பாதுகாப்பு கருதித்தான் தங்கும் இடத்தை அடிக்கடி மாற்றுவார்கள். பகலில் மிருகங்கள் நடமாட்டம் இருக்காது என்பதால், இங்கிருக்கும் மலைத் திட்டுக்குப்  போய் விடுவார்கள். நாம் வேகமாக நடக்க வேண்டியதே இல்லை சார். மெதுவாகவே போகலாம். அக்யூஸ்ட் சரக்கு அடித்து விட்டு, கொஞ்ச நேரத்திலேயே சாய்ந்து விடுவான். தலைப்பாகையும் விசிலும் அப்போது எங்கிருக்கிறது என்றே அவனுக்குத் தெரியாது' என்று இன்ஃபார்மர் சொல்லிக்கொண்டே போனார். அதைக் கேட்டதும், சைகையால் எங்கள் வேகத்தைக் குறைக்கச் சொன்னார் இன்ஸ்பெக்டர். இன்னொரு பக்கம் போயிருந்த டீம் ஆட்களுக்கு பேஜரில் மெசேஜைப் போட்டு உடனே எங்கள் பக்கம் வரச்சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் ஒரே ரூட்டில், எங்கள் டீம் மொத்தமும் நடக்க ஆரம்பித்தது. கால் வைக்கும் இடத்தில் சத்தம் கிளப்பும்  சருகுகள் இல்லாமல் பார்த்துக் கொண்டோம். மீண்டும் ஒரு ஸ்ஸ்ஸ் சத்தம். இந்தமுறை அலெர்ட் போட்டது இன்ஸ்பெக்டர் நவீன் சார்.'ஏன் நிறுத்தினீர்கள்' என்று கண்களால் நாங்கள் கேட்ட கேள்விக்கு, அவரும் கண்களாலேயே பதில் சொன்னார். அவர் கண்கள் காட்டிய இடத்தில், அதாவது நூற்றைம்பது மீட்டர் தூரத்தில் முண்டேல்பாஜூ உட்கார்ந்திருந்தான். பாதி மது பாட்டில் ஒரு பக்கம் இருக்க, அருகில் இருந்த பெரிய மூட்டையைப் பிரித்து வைத்து எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தான். 'குடித்துக் கொண்டே சாப்பிடுகிறானே என்னதான் இவன் டேஸ்ட்டோ' என்று தனக்கு மட்டும் கேட்கும் படி ஸ்பெஷல் டீமில் இருந்து அப்போது ஒரு கமென்ட் கேட்டது.  

 

ஜி.லோகநாதன் (ஓய்வு எஸ்.ஐ) அப்போது இன்ஸ்பெக்டர், 'இன்னும் பாதிதூரம் வரை அவன் கண்ணில் சிக்காமல் சைலன்ட்டாகவே போவோம். ஐம்பது மீட்டர் இடைவெளி இருக்கும் போது, அதிரடியாகப் பாய்ந்து விடுங்கள். அவன் விசிலும் எடுக்கக் கூடாது, அவனிடமிருந்து எந்தச் சத்தமும் வெளியே வரக் கூடாது. கன் பாய்ன்ட்டை  சரியாக வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், அவனுக்கு 'டவுன்-சைட்' ல மட்டும்  எய்ம் பண்ணுங்கள். தேவைப்பட்டால் மட்டுமே... புரிகிறதா?' என்றார். எங்களை முண்டேல்பாஜூவும் கவனித்து விடக் கூடாது, அவன் கூட்டாளிகளும் பார்த்து விடக் கூடாது. நடக்கும் சத்தமும் வெளியில் கேட்கக் கூடாது... இத்தனையும் ஒரே நேர்க் கோட்டில், கொஞ்சமும் பிசகாமல் நொடி, நொடியாக நகர்ந்தது. திட்டமிட்ட 50 மீட்டர் என்பது கடைசி நிமிடத்தில் மாறி 30 மீட்டர் சுற்றளவில் நெருங்கும்வரையில் அவன் கவனிக்கவில்லை. சரக்கும், மூட்டையில் இருந்த உணவுமே அவன் கவனத்தில் இருந்தது. பாயத்தயாரானோம். அப்போது... (தொடரும்)

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளைப் படிக்க
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4 

பகுதி 5

பகுதி 6

 


டிரெண்டிங் @ விகடன்