வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (12/01/2018)

கடைசி தொடர்பு:13:33 (12/01/2018)

சுற்றி நின்ற தனிப்படை போலீஸார்... சத்தம்போடாதத் துப்பாக்கிகள் ! கோல்டன் செகண்ட் ஆபரேஷன்.. வேட்டையாடு,  விளையாடு (தொடர் -(8) 

                                                    என். நவீன், கே.ஆர். விட்டல்ராமன்(ஓய்வு டி.எஸ்.பி, மற்றும் கூடுதல் எஸ்.பி.)

தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

போலீஸ் மொத்தமும் ஒரே இடத்தில் பார்வையைப் புதைத்தபடி இருக்க ...  மதுபாட்டிலை எடுக்க, உடம்பை வளைத்த முண்டேல்பாஜூ எங்களைக் கவனித்துவிட்டான்.  அந்த ஒருநொடிப் பதற்றத்தை இப்போது நினைத்தாலும் 'செம' த்ரில்லிங்தான். இரண்டு பக்கமும் இருப்பது 'கோல்டன் -செகண்ட்ஸ்' தான்  அறிவு, சாதுர்யம், பலம் எந்தப்பக்கம் அதிகம் இருக்கிறதோ அந்தப் பக்கமே வெற்றி.  நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் மைக்ரோ செகண்ட் டைமிங் போல ஒரே நேரத்தில் முண்டேல்பாஜூ மீது மொத்தமாகப் பாய்ந்தோம். பாய்ந்த வேகத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்கள் அழுத்தம் அவனை நிலைகுலைய வைத்துவிட்டது. அவன் பக்கத்திலிருந்து சின்ன எதிர்ப்புகூட வரவில்லை. இப்போது சீனியர் இன்ஸ்பெக்டராக இருக்கும் ராஜ்குமார் அப்போது எங்கள் டீமின் யங், சப்- இன்ஸ்பெக்டர். பாய்ந்த வேகத்தில் முண்டேல்பாஜூவின் கைகளை அப்படியே பின் பக்கமாக மடக்கி துணியால் கட்டியதும் அவர்தான். எங்கிருந்துதான் அந்தத் துணியை எடுத்து வந்தாரோ தெரியவில்லை, கச்சிதமாகப் பொருந்தியது, அந்த 'காடா' துணி.  அதே டைமிங்கில் டீம் போலீஸார்,  சத்தமே வெளியே வராதபடி, அவன் வாயையும் பக்குவமாக அடைத்தனர். அப்போதுதான் முண்டேல்பாஜூவைத் தீர்க்கமாகப் பார்த்தோம். ஆறடிக்கு மேல் உயரம். 80 கிலோவுக்கு மேல் இருப்பான். உரமேறிப் போயிருந்தது உடல்வாகு. அதிகபட்சம் 25 வயதுதான் இருக்கும். மீசை இப்போதுதான் கனமாகத் துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.

ஏ.ஜி.மௌர்யா (ஓய்வு ஐ.ஜி), போலீஸ்... முண்டேல் பாஜூ, சாதாரண உயரம்தான், மெலிந்த தேகமாய்த் தெரிகிறான் என்று  சொன்னது யார்? அவர்கள் சென்னைக்குப் போனதும், முதலில் போலீஸ் ஹாஸ்பிட்டலுக்குப் போய் 'லாங்- சைட்' செக்கப்பை முடித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான்  ஸ்பெஷல் டீமில் நீடிக்க முடியும். புரிகிறதா?... என்று அந்த நேரத்திலும்  இன்ஸ்பெக்டர் சீரியஸாகவே நினைவூட்டினார். ஏதோவொரு வேகத்தில்தான் அவனை அமுக்கி எஸ்.ஐ. ராஜ்குமார்  கையை மடக்கியதோடு கட்டியும் போட்டுவிட்டார். உண்மையில் அது மிகவும் சிரமம் என்பதை முண்டேல் பாஜூவைத் தொட்டுப் பார்த்தபோதுதான் எங்களுக்குத் தெரிந்தது. 'சரி, ஆளைப் பிடித்துவிட்டோம். பக்கத்து  'மில்'லில் இருக்கும் அவன் கூட்டாளிகள், மாரேடிபூடி நாகபூஷணம், தோட்டா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைப்  பிடிப்பது எப்படி? அவர்களிடம்  துப்பாக்கி அல்லது நாட்டு வெடிகுண்டுகள்  இருக்கிறதா என்பதை இவனை வைத்துதான் உறுதிப்படுத்த வேண்டும். இங்கேயே முண்டேல்பாஜூவை விசாரித்துவிடலாம், ஆனால், திடீரென்று சத்தம் போட்டு 'மில்'லில் இருப்பவர்களைத் தப்பிக்க வைத்துவிட்டால் என்ன செய்வது?' என்று எங்களிடம் ஆலோசனை நடத்தினார், நவீன் சார்.  பின்னர், முண்டேல்பாஜூவின் முகவாய்க் கட்டையைத் தூக்கி மேலே நிறுத்திவிட்டு, அவனிடம்  தெலுங்கில் பேசினார். 'உன்னிடம் இங்கேயே விசாரிக்கப் போகிறோம். கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் போதும், உன்னிடம் பதில் இல்லை என்றால், தலையை மட்டும் ஆட்டு. புத்திசாலித்தனமாக செய்வதாக நினைத்து நீ எதையாவது செய்தால் இங்கேயே உன்னைக் கொன்றுவிட, உங்கள் ஆந்திரப் போலீஸே எங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறது,  நீ வாழ்வதும், சாவதும் உன் கையில்தான் இருக்கிறது.' என்று சொல்லிவிட்டு 'பாய்ஸ், யார், யாரிடம் துப்பாக்கி இருக்கிறது?' என்று எங்களைப் பார்த்துக் கேட்டார். எங்களில் ஆறுபேர் அப்போது துப்பாக்கிகளைத் தூக்கிக் காட்டினோம். 'எல்லாமே சைலன்ட்ஸர் கன் தானே?' என்று இயல்பாக அடுத்த அழுத்தத்தைக் கொடுத்தார். இந்த மாதிரியான இடங்களில்  உளவியல் ரீதியான அணுகுமுறையே சரியான ரிசல்ட்டைக் கொடுக்கும். அதை சிறப்பாகக் கையாளத் தெரிந்தால் மட்டுமே வழக்குகளில் வெற்றிகாண முடியும். இன்ஸ்பெக்டர் நவீன் சார்,  அதை  சிறப்பாகச் செய்வார். அவர் எங்களிடம் பேசும்போதுகூட, முண்டேல்பாஜூவைக் கொஞ்சமும் கண்டுகொள்ள மாட்டார். அக்யூஸ்ட்  பயப்படுகிறானா, யோசிக்கிறானா, குழப்பத்தில் இருக்கிறானா என்பதை அவன் கண்களைப் பார்த்து நாங்கள் 'ரீட்' செய்து கொண்டிருந்தோம். எங்கள் கண்களை இன்ஸ்பெக்டர் 'ரீட்' செய்துகொண்டிருந்தார். இந்த சுழற்சி சரியாக அமையவேண்டும்.

ஜி.லோகநாதன் (ஓய்வு எஸ்.ஐ)அதிகாரிக்கும், அவருக்குக் கீழே வேலை பார்க்கிறவர்களுக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்க வேண்டும்.  இவை அத்தனையும் எங்கள் டீமில் இருந்தது. ஆனாலும், எங்கள் கண்களில் இருந்து இன்ஸ்பெக்டருக்கு எந்தத் தகவலும் 'ரீட்' ஆகவில்லை. முண்டேல்பாஜூவின் கண்கள் காட்டிய உணர்வு எந்த ரகம் என்றே எங்களுக்குப் புரியவில்லை. அதைத்தான் எங்கள் கண்களும் பிரதிபலித்தது. அந்த குழப்பமான சூழ்நிலையை இன்ஸ்பெக்டர் புரிந்துகொண்டார். 'ஓ.கே.பாய்ஸ், இது சரியாக வராது என்று நினைக்கிறேன். இவன் எவ்வளவு மிதிச்சாலும் தாங்குவான்,  எல்லோரும்  மொத்தமாக வந்து இவனை மிதிக்க ஆரம்பியுங்கள். ஆள் மயக்கமானதும், இங்கிருந்து கொண்டு போயிடலாம். 'மில்' லில்  பதுங்கிக் கொண்டிருக்கும் இவன் அசோசியேட்ஸை எப்படிப் பிடிக்கணும் என்று எனக்குத் தெரியும். நமக்குத் தேவையான அளவு என்கொயரி முடிந்ததும் இவனையும்...' என்று சொல்லி விட்டு,  ஒரு ஸ்டெப் பின்னால் வந்தார். அப்போது நாங்கள் பதினாறு பேரும் முண்டேல் பாஜூவை நோக்கி ஒரு அடி முன்னேறினோம். அவ்வளவுதான், முண்டேல்பாஜூவின் தலையும், உடலும் சேர்ந்து வேகமாக ஆடத் தொடங்கிவிட்டது. அந்த ஆட்டமே அவன் 'சரண்டர்' ஆகி விட்டதைச் சொன்னது. இன்ஸ்பெக்டர் கண்ணைக் காட்டியதும், அவன் வாயைக் கட்டியிருந்த துணியை ஒரு கான்ஸ்டபிள் போய் மெதுவாக அவிழ்த்தார்.  'கன்' னை பொசிஷனில் வைத்துக்கொண்டு நாங்கள் அவனைச்சுற்றி நின்றுகொண்டோம். முண்டேல்பாஜூ பேச ஆரம்பித்தான். அந்த 'மில்'லில் இருப்பது யார், யார் என்பதைதான் இன்ஸ்பெக்டர் முதலில் கேட்டார். சொன்னான்... வாக்குமூலம் என்ற பெயரில் அவன் சொன்ன முதல் வார்த்தை என்ன தெரியுமா ? 

(தொடரும்)


டிரெண்டிங் @ விகடன்