Published:Updated:

பட்டாக்கத்தி, அரிவாளுடன் மாணவர்கள் மோதல்! பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் அலறி ஓடிய பயணிகள்

சகாயராஜ் மு
பட்டாக்கத்தி, அரிவாளுடன் மாணவர்கள் மோதல்! பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் அலறி ஓடிய பயணிகள்
பட்டாக்கத்தி, அரிவாளுடன் மாணவர்கள் மோதல்! பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் அலறி ஓடிய பயணிகள்

சென்னை பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் அரிவாள், கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்த பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

சென்னை சென்ட்ரலிலிருந்து திருவள்ளூர் நோக்கி புறநகர் ரயில் ஒன்று பிற்பகலில் சென்றுகொண்டிருந்தது. ரயிலில் பொதுமக்கள், மாணவர்கள் எனக் கூட்டம் நிரம்பி இருந்தது. பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது கையில் பட்டாக்கத்தி, அரிவாளுடன் மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதில் மூன்று மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த பயணிகள் அலறி ஓட்டம் பிடித்தனர். அவர்கள் மீது மாணவர்கள் கற்களைக் கொண்டு தாக்கினர். பட்டப்பகலில் மாணவர்கள் அரிவாளுடன் மோதிக்கொண்ட சம்பவத்தால் பட்டரவாக்கம் ரயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது. தகவல் அறிந்து ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தப்பியோடிய மாணவர்களை அவர்கள் தேடி வருகின்றனர். 

இந்தச் சம்பவம் குறித்து பயணி ஒருவர் கூறுகையில், "புறநகர் ரயில்களில் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயணிக்கிறார்கள். இந்த மாணவர்கள் இடையே, அடிக்கடி மோதல் நடக்கிறது. தற்போது, அரிவாளுடன் மாணவர்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் இரண்டு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கத்தி, அரிவாளுடன் மோதிக்கொண்டனர். இதன் பிறகு, சில நாள்கள் மட்டுமே அங்கு பாதுகாப்புக்கு காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அதுவும் கிடையாது.

சென்னை - திருவள்ளூர் - அரக்கோணம் மார்க்க ரயில் நிலையங்கள் பெயரளவுக்குத்தான் இருக்கின்றன. முக்கிய மூன்று ரயில் நிலையங்களில் மட்டுமே கேமராக்கள் உள்ளன. மற்ற எந்த ரயில் நிலையங்களிலும் கேமராக்கள் கிடையாது. இதனால் பல ரயில் நிலையங்களில் அசம்பாவித சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. மோதல் நடக்கும் நேரத்தில் மட்டும் காவலர்கள் அங்கு வருகிறார்கள். மற்ற நேரங்களில் ரயில் நிலையங்கள் பாதுகாப்பின்றி இருக்கின்றன. பட்டரவாக்கம் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும். இங்கு ஏராளமான எக்ஸ்போர்ட் நிறுவனங்கள் இருக்கின்றன. காலையும் மாலையும் வேலைக்குச் சென்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். ரயில்வேதுறை இப்படிப்பட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் போட வேண்டும். பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதிக்கொள்ளும் நிகழ்வுக்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று வேதனையுடன் கூறினார்.