Published:Updated:

எம்.ஆர்.ஐ. இயந்திரத்தில் சிக்கி சேல்ஸ்மேன் பலி! - உயிரிழப்பு குறித்து தயாரிப்பு நிறுவனம் ஆய்வு

மலையரசு
எம்.ஆர்.ஐ. இயந்திரத்தில் சிக்கி சேல்ஸ்மேன் பலி! - உயிரிழப்பு குறித்து தயாரிப்பு நிறுவனம் ஆய்வு
எம்.ஆர்.ஐ. இயந்திரத்தில் சிக்கி சேல்ஸ்மேன் பலி! - உயிரிழப்பு குறித்து தயாரிப்பு நிறுவனம் ஆய்வு

மும்பை நாயர் மருத்துமனையில் ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற 32 வயது சேல்ஸ் மேன் ஒருவர் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தின் காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு, அந்த இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக எம்.ஆர்.ஐ.ஸ்கேனைத் தயாரித்த பிலிப்ஸ் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது. 

மும்பையைச் சேர்ந்தவர் ராஜேஷ் மாரு, அப்பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் சேல்ஸ் மேனாகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மும்பை நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது உறவினரைக் கடந்த சனிக்கிழமை பார்க்கச் சென்றிருந்தார். அவருக்கு சுவாசிக்க உதவும் வகையில் ஆக்சிஜன் சிலிண்டரையும் ராஜேஷ் உடன் எடுத்துச்சென்றுள்ளார். வயதான தனது உறவினருக்கு உதவுவதற்காக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் இருக்கும் அறைக்குள், ஆக்சிஜன் சிலிண்டருன் ராஜேஷ் மாருவும் சென்றார். அப்போது, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தின் சக்திவாய்ந்த காந்தப்புலத்தால் மிகவேகமாக அவர் ஈர்க்கப்பட்டார். பின்னர் ஸ்கேன் இயந்திரத்தின் மீது மோதியதாலும், சிலிண்டரில் இருந்த வாயு வெளியேறியதாலும், அந்த இடத்திலேயே ராஜேஷ் மாரு உயிரிழந்தார். 

மருத்துவமனையின் அலட்சியமே ராஜேஷின் உயிரிழப்புக்குக் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள போலீஸார் ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்த மருத்துவர், உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். 
இந்தநிலையில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை தயாரித்த பிலிப்ஸ் நிறுவனமானது, ராஜேஷ் மாருவின் உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்யவிருக்கிறது. பிலிப்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் குழு உயிரிழப்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார்கள் என அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ரமேஷ் பர்மால் என்பவர் தெரிவித்துள்ளார். இதேபோல் ராஜேஷ் மாருவின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த மும்பை மாநகராட்சியும் கமிட்டி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.