வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (06/02/2018)

கடைசி தொடர்பு:20:59 (06/02/2018)

கஞ்சா வீட்டில் அதிரடியாகப் புகுந்த போலீஸ்! தப்பி ஓடிய அதிமுக எம்.எல்.ஏ சகோதரர்

கஞ்சாவை வீட்டில் பதுக்கிவைத்துக்கொண்டிருந்தபோது ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வின் சகோதரர் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓடினார். இதில் கூட்டாளி சிக்கினார். 

உசிலம்பட்டி தாெகுதி ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வான நீதிபதியின் சகோதரர் செல்வம் கஞ்சா வியாபாரம் செய்வதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது. ஏற்கெனவே செல்வம் மற்றும் அவரின் தந்தை பாண்டிமீது கஞ்சா வழக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது அதிக அளவு கஞ்சாவை வாங்கி மதுரை மற்றும் சுற்றுப்பகுதியில் விற்பனை செய்வதாகச் செல்வம்மீது புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த ஒருவாரமாகச் செல்வத்தை சிறப்புக் காவல்படையினர் நோட்டமிட்டு வந்தனர். 

அப்போது செல்வம் கஞ்சா விற்பது தெரியவந்தது. இதையடுத்து, செல்வத்தின் வீட்டுக்குள் புகுந்து போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் 4.75 கிலோ கஞ்சாவை செல்வம் பதுக்கிவைத்தபோது காவல்துறையினர் அவரைப் பிடிக்க முயன்றனர். அவர் அங்கிருந்து தப்பிச்சென்றார். கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரின் கூட்டாளி ரமேஷ் என்பவரைப் பிடித்தனர். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியாேடிய செல்வத்தை சிறப்புக் காவல்துறை சார்பு ஆய்வாளர் தீபன் தலைமையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.