Published:Updated:

`அவர்களை சும்மா விடாதீர்கள்' - போலீஸிடம் கதறிய பெண் இன்ஜினீயர் 

நமது நிருபர்
`அவர்களை சும்மா விடாதீர்கள்' - போலீஸிடம் கதறிய பெண் இன்ஜினீயர் 
`அவர்களை சும்மா விடாதீர்கள்' - போலீஸிடம் கதறிய பெண் இன்ஜினீயர் 

நள்ளிரவில், ஐ.டி பெண் இன்ஜினீயரைத் தாக்கியவர்களை போலீஸார் பிடிக்கச் சென்றபோது, அவர்கள் மாடியிலிருந்து குதித்து தப்பி ஓட முயன்றுள்ளனர். அவர்களை, சினிமாவில் வருவதைப் போல விரட்டிச்சென்று பிடித்துள்ளனர். பிடிபட்டவர்களை, 'சும்மா விடாதீர்கள்' என்று பாதிக்கப்பட்ட பெண் இன்ஜினீயர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 

சென்னை, நாவலூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணியாற்றிவருபவர், லாவண்யா.  இவர், சில தினங்களுக்கு முன்பு,  நள்ளிரவில் தனியாக டூவிலரில் தாழம்பூர் சாலை அரசன்கழனி அருகே வந்துக் கொண்டிருந்தார். அப்போது, லாவண்யாவை வழிமறித்த மர்மக் கும்பல், அவரை கடுமையாகத் தாக்கியதோடு, செல்போன், நகை,  டூவிலர், இரண்டு லேப் டாப், பிரேஸ்லேட், பர்ஸ் மற்றும் செயின் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியது. சாலை ஓரத்தில் மயங்கிக்கிடந்த லாவண்யாவை, பள்ளிக்கரணை ரோந்து போலீஸார் மீட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது முகத்தில் கொடூரமான வெட்டுக்காயங்கள் இருந்தன. தற்போது, அவர் நலமாக இருக்கிறார். 

லாவண்யாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தன்னிடம் தகராறு செய்தவர் ஒருவர் என்றும் இருட்டில் அவரது முகம் சரிவர தெரியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், சம்பவம் நடந்த இடம் இருட்டாக இருந்ததால், சி.சி.டி.வி கேமரா மூலம் இந்த வழக்கில் எந்தவிதத் தடயமும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், லாவண்யாவின் டூவிலர், செம்மஞ்சேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் முன்பு அநாதையாக நிற்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. அதை மீட்ட போலீஸார், டூவிலரில் உள்ள கைரேகை மூலம் வழக்கில் துப்பு துலக்கினர். 


 இதற்கிடையில், தனியாகச் செல்லும் பெண்களிடம் வழிப்பறிசெய்யும் பழைய குற்றவாளிகள்குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர். ஐ.டி பெண் இன்ஜினீயர் கொடூரமாகத் தாக்கப்பட்ட வழக்கை விரைந்து முடிக்க போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில், பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர்  சிவக்குமார் தலைமையிலான போலீஸார், லாவண்யாவைத் தாக்கியவர்களைப் பல இடங்களுக்குச் சென்று தேடினர். இந்தச் சமயத்தில், நாவலூர் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் லாவண்யாவைத் தாக்கியவர்கள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.  அதையடுத்து, அந்த வீட்டை போலீஸார் சுற்றிவளைத்தனர்.

போலீஸாரைப் பார்த்ததும் மூன்று பேர் மாடியிலிருந்து குதித்து தப்பி ஓடினர். அவர்களை போலீஸார் விரட்டினர்.  அதில் ஒருவர், அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்ததில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு ஓடமுடியாமல் தவித்தார். அவரை பிடித்த போலீஸார், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். மற்ற இரண்டு பேரையும் சினிமாவில் வரும் காட்சிகளைப் போல விரட்டிப்பிடித்தனர். அடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னையைச் சேர்ந்த விநாயமூர்த்தி, நாராயணமூர்த்தி, லோகேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதில், விநாயகமூர்த்தி மீது தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. மற்ற இரண்டு பேர்குறித்து தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. போலீஸார் விரட்டியதில் காயமடைந்தவரின் பெயர் நாராயணமூர்த்தி. 

இதையடுத்து, அவர்களிடமிருந்து செல்போன், அரிவாள், கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் துரிதமாகச் செயல்பட்ட போலீஸாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். லாவண்யாவுக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் 'அவர்களைச் சும்மா விடாதீர்கள்' என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 

 இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 'சம்பவத்தன்று லாவண்யாவை, விநாயகமூர்த்திதான் வழிமறித்துள்ளார். மற்ற இருவரும் இருட்டுப்பகுதியில் நின்றுள்ளனர். அதை அவர் கவனிக்கவில்லை. லாவண்யாவிடம் அரிவாளைக் காட்டி விநாயகமூர்த்தி, மிரட்டியுள்ளார். ஆனால், லாவண்யா அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது,  விநாயகமூர்த்தியுடன் கடுமையாகப் போராடியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விநாயகமூர்த்தி, லாவண்யாவின் முகத்தில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்த லாவண்யா மயக்கமடைந்துவிட்டார். அதன்பிறகே செல்போன், நகை, பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்' என்றனர்.

இதுகுறித்து கூடுதல் கமிஷனர் சாரங்கன் கூறுகையில், "லாவண்யாவைத் தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி, வழிப்பறி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்தால் கூடுதல் தகவல் கிடைக்கும்" என்றார்.