Published:Updated:

‘மன்மத’ புகாரில் மந்திரிகள்!

‘மன்மத’ புகாரில் மந்திரிகள்!
‘மன்மத’ புகாரில் மந்திரிகள்!

முதல்வர் சிறையில் இருந்த நேரத்திலும்...

'மன்மத புகாரில் மந்திரிகள்’ கட்டுரையின் மூன்றாவது எபிசோட் இது. இந்த இதழில் இடம்பெற்றிருப்பவர் ஏற்கெனவே ஜூ.வி. இதழில் எழுதப்பட்டவர். மே 2015 தேதியிட்ட ஜூ.வி. இதழில் ‘அவளைக் கொலை செய்வேன்... இவர் பதவியைப் பறிப்பேன்!’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், ‘அந்தப் பெண்ணை கொலை செய்வேன்... கணவரின் அமைச்சர் பதவியை பறிப்பேன்’ என மனைவி சீறியதை கட்டுரை ஆக்கியிருந்தோம். அந்த விவகாரம் இன்னும் ஓயவில்லை.

அப்போது பூதாகரமாகச் சொல்லப்பட்ட அந்த அமைச்சரின் அந்தரங்கம் இப்போது மீடியாவில் நாறடிக்கப்பட்டு வருகிறது. அவர் வேறு யாருமல்ல... மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால்தான். இதுபற்றி ஏரியாவில் பேசப்படும் செய்தி இதுதான். மகனுக்கு பாலிடெக்னிக் ஸீட் வேண்டி கோரிக்கை மனுவோடு அமைச்சரைச் சந்திக்க வந்தார் அந்தப் பெண். ‘பளிச்’ நிறத்தில் இருக்கும் அவரைப் பார்த்ததுமே மந்திரியின் மனம் மாறுகிறது. அந்தப் பெண் ஏற்கெனவே கணவரை இழந்தவர் என்பதால் வசதியாகிவிட... வலைவீசிப் பிடிக்கிறார். இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்படுகிறது. நாகப்பட்டினம் வரும்போது அந்தப் பெண்ணைத் தவறாமல் சந்திப்பார். சில நேரங்களில் அந்தப் பெண் சென்னைக்கும் வந்துவிடுவார். ரயில் பயணங்களில் கூபேவில் ஒன்றாகப் பயணிப்பார்கள். அடுத்த மாநிலத்தில் இருந்துதான் அந்த ரயில் புறப்பட்டு வரும். அதனால், அந்த மாநிலத்தில் இருந்தே  டிக்கெட் புக் பண்ணி விடுவார்கள். அந்த ரயில் தன்னுடைய மாவட்டத்துக்குள் நுழையும்போது அமைச்சர் சேர்ந்துகொள்வார். அந்தப் பெண்ணுடன் பேசுவதற்காகவே தனியாக செல்போன் ஒன்றை வைத்திருக்கிறார் அமைச்சர். இந்த விவகாரம் அமைச்சரின் மனைவிக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. இரவு முழுவதும் செல்போனில் கணவர் பேசிக்கொண்டிருந்த போதெல்லாம் கட்சிக்காரர்களிடம்தான் பேசிக்கொண்டு இருக்​கிறார் என நினைத்திருக்கிறார் மனைவி. ஒரு கட்டத்தில் சந்தேகம் வந்திருக்கிறது. கணவர் தனியாகப் பயன்படுத்தும் அந்த செல்போனை ரகசியமாக எடுத்து அந்த எண்ணுக்கு போன் போட்டிருக்கிறார் மனைவி. எதிர்முனையில் ‘‘என்னங்க தூக்கம் வரலையா... என்னைக் கட்டிப்புடிச்சுகிட்டு தூங்குற மாதிரி நினைச்சுக்குங்க’’ எனக் குரல் வந்ததைக் கேட்டு அதிர்ந்துபோனார் மனைவி. அதன் பிறகு மனைவியே ஜேம்ஸ் பாண்டாக மாறி சகல விஷயங்களையும் துப்பறிந்திருக்கிறார்.

‘மன்மத’ புகாரில் மந்திரிகள்!

விஷயம் எல்லாம் தெரிந்த பிறகு கணவரிடம் முறையிட்ட போது, ‘‘நீ கறுப்பா இருக்க... உன்னை எனக்குப் பிடிக்கலை’’ எனச் சொல்லியிருக்​கிறார் அமைச்சர். கோபத்தோடு வீட்டைவிட்டு வெளியேறினார் மனைவி.

இதன்பிறகு சமாதானப் படலம் நடந்திருக்கிறது. அமைச்சரின் மனைவி பிரிந்திருக்கும் செய்தி பரவ ஆரம்பித்தது. சமாதானம் பேச வந்த மந்திரியின் ஆட்கள், ‘‘போலீஸுக்குப் போனா நமக்குத்தான் அசிங்கம். நீங்க சமாதானமாப் போங்க..’’ எனப் பேசியிருக்கிறார்கள். ‘‘30 வருடங்களாக அவரோடு குடும்பம் நடத்தியிருக்கேன். இவ்வளவு வயசுக்குப் பிறகு அவர் ஒரு பெண்ணை வெச்சுகிட்டி ருக்கிறது அசிங்கமா தெரியல. நான் பிரிந்து வந்தது​தான் அவருக்கு அசிங்கமா தெரியுதா? அந்தப் பெண்ணுக்கு வீடு, சொத்து வாங்கிக் கொடுத்திருக்கிறார். மூணு வருடங்களாக எனக்குத் தெரியாமல் அவளோடு குடும்பம் நடத்தியிருக்கிறார். பொண்டாட்டிக்குத் துரோகம் செய்த பயம்கூட அவரிடம் இல்லை. அதிகாரம், பதவி, பவிசு எல்லாம் கண்ணை மறைக்குது’’ என அவர்களிடம் சீறியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தனக்கு வேண்டப்​பட்டவர்களிடம் ‘‘எல்லாத்தை​யும் அம்மாவிடம் (ஜெயலலிதா) சொல்லிப் பதவியை பறிச்சுடுவேன். அது முடியலனா வீடு புகுந்து அவளைக் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிடுவேன். மந்திரி மனைவி எதற்காக அந்தப் பெண்ணைக் கொலை செஞ்சாங்கனு கேள்வி வரும்ல. அப்ப எல்லா உண்மையும் ஊருக்குத் தெரியும். எல்லாத்தையும் அசிங்கப்படுத்​திடுவேன். புருஷனை அபகரிச்சவளைப் பழிவாங்கின நிம்மதியோடு ஜெயிலில் காலத்தைக் கடத்திடுவேன்’’ எனச் சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு மனைவியிடம் சமாதானம் பேசி அக்கரைப்பேட்டை ஏரியாவில் இருக்கிற வீட்டுக்கு மனைவியை அழைத்து வந்தார் அமைச்சர்.  மனைவி எங்கேயாவது புகார் சொல்லிவிடுவார் என்பதாலேயே அவரைத் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்​கிறார்களாம். ஆனாலும் அதையும் மீறி மனைவி தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் இப்போதும் புலம்பி வருகிறார். இதனால் விவகாரம் இப்போது மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது.

‘மன்மத’ புகாரில் மந்திரிகள்!

இந்த விவகாரத்தில் வாட்ஸ்அப் உரையாடல் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. அந்த உரையாடலில் செல்வம் என அறிமுகப்படுத்திக் கொண்டு அமைச்சரின் செல்போனுக்கு ஒரு கால் வருகிறது. அதில் பேசும் செல்வம், இன்னொரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் அமைச்சரிடம் கொச்சையாகப் பேசுகிறார். அந்த உரையாடலில் ‘பீப்’ வார்த்தைகள் உண்டு. ‘உன்னை எல்லாம் அம்மா சும்மாவிட மாட்டாங்கடா’’ என செல்வம் கர்ஜிக்கிறார். பதிலுக்கு அமைச்சரின் குரலும் சீறுகிறது. ‘‘இப்ப நீ யாருன்னு கண்டுபிடிச்சுட்டு வர்றேன்’’னு சீறுகிறது அமைச்சரின் குரல். இந்த வாட்ஸ்அப் உரையாடல் வேகமாகப் பரவி வருகிறது.

அந்தப் பெண்ணின் செல்போனுக்கு அமைச்சர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார் என்பதற்கான கால் ரெக்கார்டுகளை எல்லாம் தி.மு.க-வினர் சேகரித்து வைத்திருக்கிறார்கள். 6 மாதங்களில் 60 பக்கம் அளவுக்கு கால் டீடெய்ல்கள் அதில் இருக்கின்றனவாம். இது உளவுத்துறையின் கைகளுக்கும் போயிருக்கிறது. இந்த கால் ரெக்கார்டரில் அமைச்சரின் நம்பருக்கும் அந்தப் பெண்ணின் நம்பருக்கும் இடையே கால்கள், எஸ்.எம்.எஸ்-கள் பறிமாறப்பட்டது பதிவாகி இருக்கிறதாம். இதை உளவுத்துறை ஆராயந்தபோது ஓர் ஆச்சர்யத்தை​யும் அவர்கள் கண்டுபிடித்திருக்​கிறார்கள். குன்ஹா தீர்ப்புக்குப் பிறகு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்​பட்டிருந்த நாட்களில்கூட இருவருக்கும் இடையே உரையாடல்கள் நடைபெற்றிருக்கிறதாம்.

இந்த விவகாரம் பற்றி ஜெயபாலிடம் பேச முயன்றபோது அவர் பதில் சொல்லவில்லை. தொடர்ந்து முயன்றபோதும், எந்த ரியாக் ஷனும் அவர் காட்டவில்லை.

மந்திரிகளிடம் இருப்பது பயமல்ல... நடிப்புத்தான்!

- ஜூ.வி டீம்

பின் செல்ல