Published:Updated:

தலையை வெட்டி தலைவனுக்கு அஞ்சலி!

Vikatan Correspondent

தூத்துக்குடி ரிவெஞ்ச்

தலையை வெட்டி தலைவனுக்கு அஞ்சலி!
தலையை வெட்டி தலைவனுக்கு அஞ்சலி!

தூத்துக்குடி மாவட்டம் பழைய காயலைச் சேர்ந்தவர் சுபாஷ் பண்ணையார். இவரது தோட்டத்தில் கடந்த மார்ச் 8-ம் தேதி பலர் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் தோட்டத்துக்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசியது. அதில், இரண்டு பேர் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடினர். அவர்கள் இருவரையும் அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டிக்கொன்றது. கொல்லப்பட்ட இருவரும் காயலைச் சேர்ந்த ஆறுமுகச்சாமி, கண்ணன் என்பது பின்னர் தெரியவந்தது. இந்தச் சம்பவத்தால் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் நிலவியது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவரும் மோதலின் தொடர்ச்சிதான், தற்போது நிகழ்ந்துள்ள இந்த இரட்டைக்கொலை சம்பவம். இந்த மோதலின் பின்னணி குறித்து விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம்.

“தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரை என்ற ஊரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணிய நாடார். இவருக்கு பழைய காயல், புல்லாவெளி பகுதிகளில் நெல், வாழை, தென்னைப் பயிர்கள் கொண்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் உப்பளங்களும் உள்ளன. அதனால், அவரது குடும்பத்தினரை அந்தப் பகுதி மக்கள், ‘பண்ணையார்’ என்று அழைத்தனர்.

தலையை வெட்டி தலைவனுக்கு அஞ்சலி!

புல்லாவெளி என்கிற புல்வாவெளி என்ற ஊருக்கு அருகில் பண்ணையாருக்குச் சொந்தமான விளைநிலங்கள் உள்ளன. பண்ணையார் நிலத்துக்கு அருகில் ஆடிட்டர் ராஜகோபால் என்பவருக்கும் நிலம் இருந்தது. தண்ணீர் பாய்ச்சுவதில் பண்ணையாருக்கும் ராஜகோபாலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரத்தை, இரண்டு கொலை வழக்குகளில் சிக்கிய பசுபதி பாண்டியனிடம் ராஜகோபால் கொண்டு சென்றார். பசுபதிபாண்டியனின் பஞ்சாயத்து, பண்ணையாரிடம் எடுபடவில்லை. அவர்களுக்குள் பகை உருவானது. 1993-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி சிவசுப்பிரமணி நாடாரின் மகனும் சுபாஷ்பண்ணை யாரின் அப்பாவுமான பசுபதி பண்ணையார் கொலை செய்யப்பட்டார்.

அதையடுத்து, சுபாஷ்பண்ணையாரும், அவரது பெரியப்பா மகன் வெங்கடேச பண்ணையாரும் களத்துக்கு வந்தனர். 1993-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி தூத்துக்குடியில் எஸ்.டி.டி பூத் ஒன்றில் இருந்த பசுபதிபாண்டியன் மீது தாக்குதல் நடந்தது. அதில், அவர் உயிர் தப்பினார். ஆனால், அவருடன் இருந்த பொன்இசக்கி என்பவர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பசுபதிபாண்டியனின் ஆட்கள் சிவசுப்பிரமணிய நாடாரை கொலை செய்தனர். ஆடிட்டர் ராஜகோபால் மற்றும் பசுபதி பாண்டியனுக்கு வலதுகரமாக செயல்பட்ட பொட்டல்காடு கர்ணன், பீர்முகமது ஆகியோரை பண்ணையார் தரப்பு காவு வாங்கியது.

தலையை வெட்டி தலைவனுக்கு அஞ்சலி!

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் என்று வலம் வந்துகொண்டிருந்த பசுபதிபாண்டியன், திண்டுக்கல்லில் குடியேறினார். அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவையின் நிறுவனர் என்று வலம் வந்த வெங்கடேஷ் பண்ணையார் சென்னையில் இருந்துகொண்டு சமுதாய ரீதியான பஞ்சாயத்துகளில் ஈடுபட்டார். 2003-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி என்கவுன்டரில் வெங்கடேஷ் பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு,  நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைமைப் பொறுப்புக்கு சுபாஷ் பண்ணையார் வந்தார்.

2006-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி தனது மனைவி ஜெசிந்தாபாண்டியனுடன் திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் வந்துகொண்டிருந்த பசுபதிபாண்டியன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஜெசிந்தா பாண்டியன் கொல்லப்பட்டார். 2012-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி திண்டுக்கல் வீட்டில் பசுபதிபாண்டியன் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். பழிக்குப் பழியாக புறா மாடசாமி, நடராஜன், முத்துப்பாண்டி ஆகியோரை பசுபதிபாண்டியனின் ஆட்கள் கொலை செய்தனர்” என்று பழைய சம்பவங்களை அவர்கள் விவரித்தனர்.

தலையை வெட்டி தலைவனுக்கு அஞ்சலி!

கடந்த 8-ம் தேதி சுபாஷ் பண்ணையார் தோட்டத்தில் வைத்துக்​ கொல்லப் பட்டவர்களில் ஒருவர் ஆறுமுகச்சாமி. இவர், சுபாஷ் பண்ணையாரின் கார் ஓட்டுநர். மேலும், பசுபதிபாண்டியனின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி. ஆறுமுகச்சாமியின் தலையை அறுத்து, சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள தெய்வச்செயல்புரத்துக்குக் கொண்டு சென்று, மெயின் ரோட்டில் உள்ள பசுபதிபாண்டியன் பெயர் பலகைக்குக் கீழே வைத்து சமர்ப்பணம் செய்து, கோஷங்களை எழுப்பிவிட்டுச் சென்றுள்ளனர்.

வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் தொடங்கிய தகராறு, இரண்டு தரப்பிலும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவங்களால் சாதியப் பதற்றமும், சமூக ஒற்றுமைக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டு வருவது நல்லதல்ல என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

- எஸ்.சரவணப்பெருமாள்
படங்கள்: ஏ.சிதம்பரம்