Published:Updated:

தீர்ப்பின் நிமிடங்களும், கோர்ட்டில் ஹாசினியின் அப்பாவும்!

மு.பார்த்தசாரதி
தீர்ப்பின் நிமிடங்களும், கோர்ட்டில் ஹாசினியின் அப்பாவும்!
தீர்ப்பின் நிமிடங்களும், கோர்ட்டில் ஹாசினியின் அப்பாவும்!

ந்த நீதிமன்றம் இதற்கு முன்பு எத்தனையோ வழக்குகளைச் சந்தித்திருக்கும். அன்று சந்தித்த வழக்கையும் தீர்ப்பையும் என்றும் வரலாற்றின் சாட்சியாக வைத்திருக்கும். நாட்டையே உலுக்கிய போரூர் சிறுமி ஹாசினியின் வழக்குதான் அது. கடந்த வருடம் இதே பிப்ரவரி மாதம் 5-ம் தேதி, ஆறு வயது சிறுமி ஹாசினியைக் கடத்தி வன்புணர்வு செய்து எரித்துக்கொன்றான் தஷ்வந்த். அன்றிலிருந்தே தமிழகத்தின் தாய்மார்கள் அனைவரும் ஓர் அச்ச உணர்வுடனே தங்கள் குழந்தையின் ஒவ்வோர் அசைவிலும் கண் வைத்திருந்தார்கள். 

அக்கம்பக்கத்துக் குழந்தைகளோடு ஓடியாடி விளையாடி, இந்த உலகம் எவ்வளவு அழகானது; தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் எவ்வளவு அன்பானவர்கள் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள் சிறுமி ஹாசினி. ஆனால், அந்தக் கொடூர சம்பவத்தால், அத்தனையும் கருகிப்போனது. போரூர் மதனந்தபுரத்தின் மாதா நகர் 10-வது தெருவில் வசிக்கும் மக்கள், ஒவ்வொரு நாளும் தாங்கமுடியாத துயரத்தை சுமக்க ஆரம்பித்தார்கள். தங்கள் குழந்தைகளை இனி வீட்டைவிட்டு வெளியே விடவே கூடாது என்ற முடிவுக்குச் சென்றார்கள். பட்டாம்பூச்சியாகச் சிறகடிக்கவேண்டிய பிஞ்சுகள், கூண்டுக்குள் அடைபட்டன. ஒரு மாதத்துக்கு முன்புகூட அந்தப் பகுதிக்குச் சென்றபோது, “யார் நீங்க? ப்ளீஸ் இங்கிருந்து கௌம்புங்க. கையெடுத்துக் கும்பிடறோம். எதுவும் கேட்டு தொந்தரவு பண்ணாதீங்க'' என்றது மனிதர்கள் மீது நம்பிக்கை இழந்த ஒரு தாயின் குரல். 

ஹாசினி சம்பவத்துக்குப் பிறகு, பல பெற்றோர்களும் தங்கள் பகுதிக்கு யார் புதிதாக வந்தாலும், சந்தேகத்துடனே பார்த்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஹாசினியைக் காக்கும் பார்வை அது. இவை அனைத்துக்கும் ஆறுதலாக, காயத்துக்கு மருந்து தடவுவதாக அமைந்தது, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஒரு வருடம் கழித்து, ஹாசினியைத் தமிழகம் பறிகொடுத்த அதே பிப்ரவரியில் தீர்ப்பு அளித்துள்ளது. 

நேற்று காலை 10.30 மணிக்கு முன்பாகவே ஹாசினியின் தந்தை பாபு, நீதிமன்றதுக்கு வந்துவிட்டார். முதல் மாடியில் ஒரு  வழக்கறிஞரின் அறையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த வழக்கறிஞர்கள், தீர்ப்பு நமக்குச் சாதகமாகவே வரும் எனச் சொல்லிக்கொண்டே இருந்தாலும் அந்தத் தந்தையின் முகம் வாடியே இருந்தது. 11.20 மணிக்கு தஷ்வந்த் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டான். பாபு அமர்ந்திருந்த அறையைத் தாண்டி தஷ்வந்த் அழைத்துச் செல்லப்பட்டபோது, பாபுவின் முகம் கோபத்தில் சிவந்தது. தஷ்வந்த் நீதிபதியின் அறைக்குள் சென்றதும் கதவுகள் அடைக்கப்பட்டன. 

பாபு அடிக்கடி தன் மனைவி தேவியிடம் தொலைபேசியில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொண்டே இருந்தார். மதிய உணவு இடைவேளைக்கு நேரம் கொடுத்துவிட்டு 3 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வந்தது. பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள் அனைவரும் சாப்பிடச் சென்றனர். பாபுவை சாப்பிடச் சொல்லி பலரும் பலமுறை கெஞ்சியும் நகரவில்லை. “ப்ளீஸ்... என்னை விட்டுருங்க. எம்பொண்ணுக்கு நியாயம் கிடைக்கும் வரை என்னால் சாப்பிட முடியாது” என்றார். 

சில நிமிடங்களில் மனைவி தேவிக்கு போன் செய்து, “தேஜீ சாப்பிட்டானாம்மா? நீ சாப்பிட்டாதான் அவனும் சாப்பிடுவான். ரெண்டு பேரும் சாப்பிடுங்க. ஹாசினி அக்காவுக்கு நியாயம் கிடைச்சிடும்னு அவன்கிட்ட சொல்லும்மா”னு அழுகையுடன் சொல்ல, அறையிலிருந்த அனைவருக்கும் விழுங்க முடியாத வேதனை. மகளின் நீதிக்காக ஏங்கும் வேளையிலும் மகன், மனைவி பற்றிக் கவலைப்பட்ட உருக்கமான நிமிடங்கள்... 

மதியம் 3 மணியை நெருங்கியபோது நீதிமன்றம் பரபரப்பானது. அதுவரை ரகசியமாக நடத்தப்பட்ட விசாரணை, தீர்ப்பு வாசிப்பின்போது பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதித்தார்கள். நீதிபதிக்கு எதிரே தஷ்வந்த் நின்றிருந்தான். 3 மணி 2 நிமிடம்... தஷ்வந்தை குற்றவாளிக் கூண்டுக்குள் வரச்சொல்லிய நீதிபதி வேல்முருகன், 'குற்றம் நிரூபணம். தண்டனை குறித்த விவரங்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் தெரிவிக்கப்படும்' என்றார். 

நீதிபதி அங்கிருந்து கிளம்பியதும், தஷ்வந்த் அங்கே அமர்ந்திருந்த வழக்கறிஞர் ராஜ்குமாரிடம், ''Sir Please Give me a White Paper and pen'' என்று கேட்டான். “கொஞ்சம் பொறுமையாக இரு தஷ்வந்த். நீ அங்கே உட்காரு” என்றார் ராஜ்குமார். அடுத்த சில நிமிடங்களில் பத்திரிகையாளர்களைப் பார்த்து "Hello why are writing that please write what Judge says" என்றதும், அங்கே இருந்த ஒரு பத்திரிகையார் பதில் கொடுக்க, சட்டென பரபரப்பாகிவிட்டது நீதிமன்ற வளாகம். போலீஸ், தஷ்வந்தை அமைதியாக உட்காரச்சொல்லி அறிவுறுத்தினார்கள். 

ஒன்றரை மணி நேரம் கழித்து, இந்திய தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின்கீழ், சிறுமி ஹாசினியைக் கொலை செய்த குற்றத்துக்காக, தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதிப்பதாகக் கூறினார் நீதிபதி. அவர் தண்டனையை அறிவித்த அடுத்த கணமே, ''நீதியரசர் வேல்முருகன் வாழ்க... நீதியரசர் வேல்முருகன் வாழ்க” என வெளியே திரண்டிருந்த பொதுமக்கள் ஆரவாரமாக கோஷமிட்டனர். 

ஹாசினியின் தந்தை பாபு, வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார். மகளுக்கான நியாயத்தை வேண்டி ஒரு வருடமாக உண்ணாமல், உறங்காமல், குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்குமா என ஏங்கிக்கொண்டிருந்த அந்தக் கண்களில், கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது. தனது செல்ல மகளின் புகைப்படத்தை செல்போனில் பார்த்து, முத்தம் கொடுத்து கதறித் துடித்தார். அந்தக் காட்சி அங்கிருந்த அனைவரையும் உலுக்கிப்போட்டது. 

அவரின் நிம்மதி கண்ணீருக்கு வழிவிட்டு, அந்தத் தந்தையைத் தொந்தரவு செய்யாமல் ஒவ்வொருவராக வெளியேற ஆரம்பித்தனர். 

சில ஆறா வடுக்களுக்குக் காலங்களே மருந்து...