Election bannerElection banner
Published:Updated:

மதுரை சிக்கந்தர் சாவடி சம்பவம்.. பழிக்குப்பழி நடவடிக்கைகளுக்கு எதிராக என்கவுன்டரா?

மதுரை சிக்கந்தர் சாவடி சம்பவம்.. பழிக்குப்பழி நடவடிக்கைகளுக்கு எதிராக என்கவுன்டரா?
மதுரை சிக்கந்தர் சாவடி சம்பவம்.. பழிக்குப்பழி நடவடிக்கைகளுக்கு எதிராக என்கவுன்டரா?

மதுரை சிக்கந்தர் சாவடி சம்பவம்.. பழிக்குப்பழி நடவடிக்கைகளுக்கு எதிராக என்கவுன்டரா?

மதுரை சிக்கந்தர்சாவடியில் நேற்று நடத்தப்பட்ட காவல்துறை என்கவுன்டரில் ரவுடிகள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்லப்பட்ட இருவரின் உடல்களும் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகரில் நீண்ட காலத்திற்குப் பிறகு என்கவுன்டர் நடத்தப்பட்டுள்ளது. முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் என்ற அவர்கள் இருவர்மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், மதுரையில் முக்கியப் பிரமுகர்களைக் கடத்திச் சென்று பணம் பறிக்க சிக்கந்தர் சாவடியில் ஒரு வீட்டில் தங்கியிருந்து, அவர்கள் சதித்திட்டம் தீட்டியிருந்ததும் போலீஸாருக்குத் தெரியவந்தது. தகவல் அறிந்து அவர்கள் இருவரையும் காவல்துறையினரால் பிடிக்கச் சென்றபோது, ரவுடிகள் போலீஸாரைத் தாக்கியதாகவும், இதனால் தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலை உருவானதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அங்கிருந்த வேறு சிலர் தப்பியோடி விட்டதாகவும், அவர்கள் தாக்கியதில் இரண்டு காவலர்களுக்குக் காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் நடந்த பகுதிக்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில்சென்று விசாரணை நடத்தினார். ''கொல்லப்பட்ட இருவர்மீதும் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக்கை பிடித்து விசாரிக்க வேண்டியிருந்ததால், செல்லூர் காவல்நிலைய போலீஸார் சென்றபோது, காவலர்களை அவர்கள் தாக்கியுள்ளனர். துப்பாக்கியை எடுத்து சுட முயற்சி செய்துள்ளனர். இந்தநிலையில், தற்காப்புக்காகக் காவலர்கள், அவர்களைத் திருப்பிச் சுட்டதில் அவர்கள் குண்டு காயமடைந்தனர். பின்பு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, உயிரிழந்தனர். இது சம்பந்தமாக விசாரித்து வருகிறோம்'' என்றார்.

என்கவுன்டர் சம்பந்தமாக நாம் விசாரித்ததில், மதுரையில் கடந்த இருபது வருடங்களாக நடந்துவரும் பழிக்குப்பழி கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மதுரையில் தி.மு.க. முன்னாள் மண்டலக்குழுத் தலைவர் வி.கே.குருசாமிக்கும், அ.தி.மு.க. முன்னாள் மண்டலத்தலைவர் ராஜபாண்டி தரப்புக்கும் இடையே நடக்கும் பழிக்குப்பழி கொலைகள் அனைவரும் அறிந்ததே.

இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த இருபது வருடங்களாகப் பழிக்குப்பழியாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் இருவரும் உறவினர்கள். மதுரையில் வந்து செட்டிலான பின்னரும், இருவருக்குள்ளும் யார் பெரியவர் என்ற ஈகோவால் பலர் பலியாகியுள்ளனர். தி.மு.க-வில் குருசாமி, முக்கியப் பொறுப்பில் இருந்தால், ராஜபாண்டி அ.தி.மு.க-வில் முக்கியப் பொறுப்பில் இருப்பார். மாநகராட்சியில் குருசாமி மண்டலத்தலைவர் பதவி வகித்தார். அதற்கு அடுத்த வந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ராஜபாண்டி மண்டலத் தலைவரானார்.  இப்படி இரண்டு தரப்பும் மாறி, மாறி அரசியலில் போட்டி போட்டதோடு  மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரையும் போட்டுத்தள்ளினர். இதனாலேயே மதுரையில் முனிச்சாலை, காமராஜர்புரம், கீரைத்துறை, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்து பதற்றமாகவே இருக்கும்.

  ராஜபாண்டியின் மகன் கடந்த வருடம் கமுதியில் எரித்துக் கொல்லப்பட்டார். அதன் பின்னணியில் குருசாமியின் ஆட்களே காரணம் என்று சொல்லப்பட்டது. பதிலுக்குச் சமீபத்தில் குருசாமியின் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டார். இப்படியே கடந்த இருபது வருடங்களில் பத்துக்கும் மேற்பட்டோர்

இரண்டுதரப்பிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மதுரை மாநகரக் காவல்துறைக்கு இவர்கள் இருவரையும் கண்காணிப்பதே பெரும் தலைவலியாக இருந்தது. 

இந்த நிலையில்தான், இன்று முத்து இருளாண்டியும், சகுனி கார்த்திக்கும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை தரப்பில் தற்காப்புக்காகச் சுட்டதாகச் சொல்லப்பட்டாலும், இருவருமே ராஜபாண்டியின் ஆட்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் பழிக்குப்பழி கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கில் போலீஸார் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், அவர்களைப் பற்றி வாய் திறந்தால் மட்டுமே மேலும் பல உண்மைகள் தெரியவரும் எனச் சொல்லப்படுகிறது.

மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த என்கவுன்டர் சம்பவத்தால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு