Published:Updated:

காதலர்களைத் தெறிக்கவிட்ட போலி சப்-இன்ஸ்பெக்டர்! - இது சென்னை 'அட்ராசிட்டி'

காதலர்களைத் தெறிக்கவிட்ட போலி சப்-இன்ஸ்பெக்டர்!  - இது சென்னை 'அட்ராசிட்டி'
காதலர்களைத் தெறிக்கவிட்ட போலி சப்-இன்ஸ்பெக்டர்! - இது சென்னை 'அட்ராசிட்டி'

காதலர்களைத் தெறிக்கவிட்ட போலி சப்-இன்ஸ்பெக்டர்! - இது சென்னை 'அட்ராசிட்டி'

காதலர்களைத் தெறிக்கவிட்ட போலி சப்-இன்ஸ்பெக்டர்!  - இது சென்னை 'அட்ராசிட்டி'

சென்னையில் கடந்த இரண்டரை மாதங்களாக சப்-இன்ஸ்பெக்டர் போல நடித்து கடைகளில் மாமூல், கடற்கரையில் காதல் ஜோடிகளிடம் பணம் பறித்த கோவை இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அந்த இளைஞர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

போலீஸ் ஹேர் கட்டிங், அதற்கெற்ற உடற்கட்டு, கம்பீரமான நடை என போலீஸாருக்கு உரித்த அனைத்துத் தகுதியுடன் சென்னையில் சப்-இன்ஸ்பெக்டராக இளைஞர் ஒருவர் கடந்த இரண்டரை மாதங்களாக நடித்துள்ளார். அதை நம்பி அவருக்கு பலர் மாமூல் கொடுத்துள்ளனர். மாலை நேரங்களில் மெரீனா, எலியட் கடற்கரையில் கரையொதுங்கும் காதல் ஜோடிகளிடம் கண்டிப்புக் காட்டினார். அவர், திருவல்லிக்கேணியில் உள்ள மேன்சனில் அறை எண் 205ல் தங்கியிருந்தார். மேன்சனில்கூட மாத வாடகையைக்கூட சரிவரக் கொடுப்பதில்லை. போலீஸ் என்பதால் அவரிடம் யாரும் எதையும் கேட்கவில்லை.

 மேலும், பைக்கில் போலீஸ் என்ற ஸ்டிக்கருடன் வலம் வந்த அந்த இளைஞரின் நடவடிக்கையில் யாருக்கும் சந்தேகம்வரவில்லை. அதற்குப்பதிலாக சல்யூட் அடித்து அந்த இளைஞருக்கு மரியாதை கொடுத்தனர். அவர் எந்த ஸ்டேஷனில் வேலைப்பார்க்கிறார் என்ற விவரம் தெரியாமல், பலர் மாமூல் கொடுத்தனர். காதல்ஜோடிகளை மிரட்டியபோது பலர் பணத்தைக் கொடுத்துவிட்டு தலைதெறிக்க ஓடியுள்ளனர். மேன்சனுக்குள் அவர் நுழையும் போது அவரது பூட்ஸ் சத்தமே அவருக்குத் தனிஅடையாளமாக இருந்துள்ளது. 

 இந்தச் சமயத்தில்தான் அந்த மேன்சனில் ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் அறை எடுத்துத்தங்கினர். அவர்களுக்கும் ஆரம்பத்தில் அந்த இளைஞரின் நடவடிக்கைகளில் சந்தேகம்வரவில்லை. மேன்சனுக்கு எதிரில் உள்ள டிபன் கடையில் சப்-இன்ஸ்பெக்டர் இளைஞர், சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். அதன்பிறகு அந்தக்கடைக்கு ஆயுதப்படை காவலர்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்துள்ளனர். அப்போது டிபன் கடைக்காரர் சப்-இன்ஸ்பெக்டர் பணம் கொடுக்காத விவரத்தைச் சொல்லியுள்ளார். அதன்பிறகு ஒருநாள், ஆயுதப்படை காவலர்கள், சப்-இன்ஸ்பெக்டரிடம் நீங்கள் எந்த போலீஸ் நிலையத்தில் வேலைப்பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தை சொல்லியிருக்கிறார். அங்குள்ளவர்கள் குறித்த விவரத்தை கேட்டபோது முன்னுக்குப்பின் முரணான தகவலை சப்-இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். இதனால், ஆயுதப்படை காவலர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் மீது சந்தேகம் வந்துள்ளது. உடனடியாக இந்தத் தகவல் போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. 

 இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டராக வலம்வந்தவரை போலீஸார் பொறிவைத்துப்பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது சப்-இன்ஸ்பெக்டராக நடித்தவர் கோவை, மேட்டுப்பாளையம், என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் அசோக் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார், அவரிடம் விசாரித்தபோது, எதற்காக அவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்தார், யாரிடமெல்லாம் மாமூல் வாங்கினார் போன்ற விவரங்கள் தெரிந்தன. 

காதலர்களைத் தெறிக்கவிட்ட போலி சப்-இன்ஸ்பெக்டர்!  - இது சென்னை 'அட்ராசிட்டி'

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "கோவையைச் சேர்ந்த அசோக், பத்தாம் வகுப்புவரை படித்துள்ளார். கடந்த 15.1.2018ம் தேதி முதல் மேயர் சிட்டிபாபு தெருவில் உள்ள ஒரு கெஸ்ட்அவுஸில் அறை எண் 205ல் தங்கியிருந்துள்ளார். பெரியமேட்டில் சப்-இன்ஸ்பெக்டருக்குரிய யூனிபார்மை வாங்கிய அசோக், அதை அணிந்துள்ளார். அப்போது போலீஸ் சீருடைக்குக் கிடைத்த மரியாதையைப் பார்த்து அசந்துபோய்விட்டார். போலீஸ் போல முடியை கட் செய்த அசோக், ஒருகட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் போல வெளியில் ரோந்து  செல்ல தொடங்கினார். அதற்காக சூளைமேட்டில் உள்ள கடையில் 30 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை 6 ஆயிரம் ரூபாய் கொடுத்துவாங்கியுள்ளார். அந்தக் கடையிலும் போலீஸ் பவரைப் பயன்படுத்தியதால், மீதமுள்ள பணத்தை இதுவரை அவர் கொடுக்கவில்லை. அந்த பைக்கில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சென்னையில் பல இடங்களில் வலம்வந்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் யூனிபார்முடன் பைக்கில் சென்ற அசோக்கைப் பார்த்து பலர் சல்யூட் அடித்துள்ளனர். இதனால், சப்-இன்ஸ்பெக்டர் என்றுகூறி கடற்கரைக்கு வந்த காதலர்களிடமும் கடைகளிலும் பணம் கேட்டுப் பறித்துள்ளார். ஆனால், யாரும் அசோக் மீது புகார் கொடுக்கவில்லை.

இந்தச் சமயத்தில்தான் அதே கெஸ்ட் அவுஸில் அறை எண் 207ல் ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் தங்கியுள்ளனர். போலீஸ் என்பதால் அறிமுகமாகியுள்ளனர். அப்போதுதான், அசோக் மீது ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கொடுத்த தகவலின்படி அசோக்கை தொடர்ந்து கண்காணித்து, அவரைக் கைதுசெய்துள்ளோம். அவரிடமிருந்து போலீஸ் யூனிபார்ம், பெல்ட், ஷூ, 2 ஸ்டார் பட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். அசோக்கின் பெற்றோருக்கும் அவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தத் தொடர்பும் இல்லை. வீட்டை விட்டு வெளியேறிய அசோக், போலீஸாக முயற்சி செய்துள்ளார். ரஜினியின் அலெக்ஸ்பாண்டியன் கேரக்டராக ஒருகட்டத்தில் மாறியிருக்கிறார். இவர், அசோக் பாண்டியன் என்றுகூறிதான் பலரை மிரட்டியும் உள்ளார். இதற்காகப் பிரபல ஹீரோக்கள் போலீஸாக நடித்த படங்களைப்பார்த்து அதற்கேற்ப தன்னுடைய ஸ்டைலை மாற்றியிருக்கிறார்" என்றனர். 
 
 அசோக், போலீஸ் சீருடையில், கடந்த குடியரசு தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றதாக தகவல் வெளியானது. இது, சென்னை மாநகர போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி அவர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார், அவருக்குக் காவல்துறையில் யாராவது உதவினார்களா என்று ரகசியமாக விசாரணை நடந்துவருகிறது. ஆனால், பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் அசோக் பங்கேற்க வாய்ப்பில்லை என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டராக நடித்த அசோக்கை போலீஸார் கைதுசெய்துள்ளதால் உயரதிகாரிகள் நிம்மதியடைந்துள்ளனர். இதற்கிடையில் அசோக்கை காணவில்லை என்று அவரது தந்தை ராஜேந்திரன் கோவை போலீஸில் புகார்கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீஸார் அவரைத் தேடிவரும் நேரத்தில்தான் போலி சப்-இன்ஸ்பெக்டராக அசோக் நடித்து வசமாக போலீஸிடம சிக்கியுள்ளார். 
  

அடுத்த கட்டுரைக்கு