

புதுடெல்லி: பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் டெல்லி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து டெல்லியில் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை தடுக்க அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இம்மாணவி சிகிச்சை பெற்று வந்தபோது, அவருக்கு ஆதரவாக பலர் போராட்டத்தில் குதித்தனர்.
பலாத்கார சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் டெல்லியில் இந்தியா கேட் முதல் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள ரெய்சினா ஹில்ஸ் வரை தீவிர போராட்டங்கள் நடந்தன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ, மாணவிகள் முற்றுகையிட்டதால் தலைநகர் திக்குமுக்காடியது. போராட்டத்தின் தீவிரத்தை குறைக்க சாலைகள் சீல் வைக்கப்பட்டன. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.
இந்த போராட்டத்தில் காயமடைந்த போலீஸ்காரர் ஒருவர், கடந்த 25ம் தேதி இறந்தையடுத்து போராட்டத்தின் தீவிரம் குறைந்தது.
இந்நிலையில், மாணவி இறந்துவிட்டதாக கிடைத்த செய்தி, போராட்டம் நடத்தியவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அவர்கள் மீண்டும் டெல்லியை முற்றுகையிடலாம் என்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா கேட், ரெய்சினா ஹில்சை இணைக்கும் ராஜ பாதையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய டெல்லியில் உள்ள 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.