Published:Updated:

'காமராஜை காப்பாற்றப்பார்க்கிறது போலீஸ்'- உஷா வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக் கோரி கணவர் வழக்கு

'காமராஜை காப்பாற்றப்பார்க்கிறது போலீஸ்'- உஷா வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக் கோரி கணவர் வழக்கு
'காமராஜை காப்பாற்றப்பார்க்கிறது போலீஸ்'- உஷா வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக் கோரி கணவர் வழக்கு

'காமராஜை காப்பாற்றப்பார்க்கிறது போலீஸ்'- உஷா வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக் கோரி கணவர் வழக்கு

திருச்சியில், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில், உஷா உயிரிழந்த வழக்கின் விசாரணையை போலீஸார் விசாரிக்கக் கூடாது என்று அவரது கணவர் ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்துள்ள சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, தனது மனைவி உஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்காகத் தனது பைக்கில் திருச்சிக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது, துவாக்குடி டோல் பிளாசா அருகே, வாகனச் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீஸார், ராஜா வந்த வாகனத்தை மறித்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜாவை இன்ஸ்பெக்டர் காமராஜ் ஸ்கூட்டரில் விரட்டிச் சென்று, திருவெறும்பூர் பெல் கணேசா ரவுண்டானா அருகே, எட்டி உதைத்ததாகக் கூறப்படும் நிலையில், பைக்கின் பின்புறம் உட்கார்ந்திருந்த ராஜாவின் மனைவி உஷாவும், ராஜாவும் கீழே விழுந்தனர். இதில் உஷா சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து, கர்ப்பிணியின் மரணத்துக்கு நீதிகேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இறுதியாக, போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது நடந்த கலவரத்தில், 27 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதேபோல, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் காமராஜ் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளார். கலவரத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அடுத்து, இன்ஸ்பெக்டர் முருகேசன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று வருகிறது. இப்படியான சூழலில், உஷாவின் கணவர் ராஜா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், உஷாவின் வழக்கை வேறு போலீஸார் விசாரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “நான் தனியார் வங்கியில் பணிபுரிந்துவருகிறேன். என் மனைவி உஷா. நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். நானும், மனைவியும் கடந்த 7-ம் தேதி மாலை 6.45 மணியளவில், தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றோம். துவாக்குடி சுங்கச்சாவடி அருகே, போக்குவரத்து போலீஸார் எங்களை நிறுத்தினர். நான் போலீஸார் நின்றிருந்த இடத்திலிருந்து சில அடி தொலைவில் பைக்கை நிறுத்தினேன். அப்போது, எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பைக்கிற்கு உரிய ஆவணங்களைக் காண்பித்துவிட்டு, நானும் எனது மனைவியும் அங்கிருந்து கிளம்பி வந்துகொண்டிருந்தபோது, போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் மோசமான வார்த்தைகளால் திட்டி பைக்கை பல முறை எட்டி உதைத்தார். இதில், பைக்கின் பின்னால் இருந்த என் 3 மாத கர்ப்பிணியான உஷா, கீழே விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவுசெய்து, ஆய்வாளர் காமராஜை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். போலீஸாரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, திருச்சியில் 3 ஆயிரம் பேர் சாலை மறியலில் போராட்டம் நடத்தினர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள்மீது போலீஸார் பொய் வழக்குப் பதிவுசெய்தனர்.

என் மனைவி உயிரிழந்தது தொடர்பான வழக்கு, பாய்லர் பிளான்ட் காவல் நிலையத்திலிருந்து குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு போலீஸாரும் திருச்சி மாநகர் காவல் பிரிவுக்கு உட்பட்டவர்கள்தான். திருச்சி போலீஸார், ஆய்வாளர் காமராஜை காப்பாற்றும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். மருத்துவர்களைப் பயன்படுத்தி என் மனைவி கர்ப்பிணி இல்லை என்றும், என்னைப் பற்றியும் தொடர்ந்து போலீஸாரே அவதூறான தகவல்களைப் பரப்பிவருகின்றனர். இந்த வழக்கை, போலீஸார் சரியாக விசாரிப்பார்கள் என்கிற நம்பிக்கை இல்லை. எனவே, என் மனைவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” எனக்  கூறியுள்ளார். இந்த மனு, சில தினங்களில் விசாரணைக்கு வருகிறது.              

அடுத்த கட்டுரைக்கு