Published:Updated:

கச்சத் தீவு தீர்மானம், செல்லவே செல்லாது!

நீதிமன்றத்தில் மீனவர் விவகாரம்...குள.சண்முகசுந்தரம்

கச்சத் தீவு தீர்மானம், செல்லவே செல்லாது!

நீதிமன்றத்தில் மீனவர் விவகாரம்...குள.சண்முகசுந்தரம்

Published:Updated:

மிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களுக்கு உண்மை யிலேயே முடிவுரை சொல்வதற்கான முன்னுரையை எழுதி இருக்கிறது மதுரை உயர் நீதிமன்றம்!

கச்சத் தீவு தீர்மானம், செல்லவே செல்லாது!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுப் பிரச்னைகளுக்காக நீதிமன்றப் படிகள் ஏறிப் போராடி வரும் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கோரி, கடந்த மார்ச் மாதம் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். மத்திய கேபினெட் செயலர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், இந்திய ராணுவச் செயலர், கடலோரக் காவல் படைத் துணை இயக்குநர், வெளியுறவுத் துறை அமைச்சகச் செயலர், தமிழகத் தலைமைச் செயலர் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது, அந்த மனு. நீதிபதிகள் பாஷா, வேணுகோபால் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் அக்டோபர் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், ''இந்திய மீனவர்கள் குறிப்பாக, தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும் அதைத் தாண்டிய சர்வதேச கடல் பிராந்தியத்திலும் அச்சமின்றிப் பாதுகாப்புடன் மீன் பிடிக்கக் கடலோர காவல் படையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்திய கப்பற்படை அதிகாரிகள் அதைக் கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும். மனுதாரரின் பிற கோரிக்கைகள் குறித்து, நவம்பர் 16-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும்!'' என்று  தீர்ப்பு வழங்கினார்கள். தனது மனுவில் ஸ்டாலின் கோரியிருக்கும் மற்ற விஷயங்களுக்கும் விடிவு கிடைத்தால்தான் தமிழக மீனவர்கள், நிம்மதியாகத் தொழில் பார்க்க முடியும்.

ஸ்டாலினை சந்தித்துப் பேசினோம். ''1882-ல் மன்னர் சேதுபதி காலத்தில் இலங்கையும் இந்தியாவின் ஓர் அங்கமாகத்தான் இருந்திருக்கு. அதற்கான ஆதாரங்கள் இருக்கு. பிற்பாடு இலங்கை தனி நாடாகப் பிரிந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையில் கடல் எல்லையை வரையறுக்கவில்லை. 1974-ல் இலங்கையுடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தப்படி கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதன் பிறகுதான் விடுதலைப் புலிகள் விஸ்வரூபம் எடுத்தார்கள். அதில் இருந்து இலங்கை ராணுவத்தினருக்கு தமிழன் என்றாலே கடுப்பு. அந்த ஆத்திரத்தில், 1974-ல் இருந்து இது வரை நூற்றுக்கணக்கான முறை தமிழக மீனவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதுவரை 547 மீனவர்கள் இறந்ததாக இந்திய அரசு சொல்கிறது. ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போனது கணக்கில் வரவில்லை!

கச்சத் தீவு தீர்மானம், செல்லவே செல்லாது!

மத்திய அரசு, தமிழக மீனவர்கள் பிரச்னை யில் ஓரவஞ்சனையாகவே நடக்கிறது. மார்ச் மாதம் வட மாநிலத்தைச் சேர்ந்த 13 பேர் சோமாலியா கடல் கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டபோது, கடற்படையை அனுப்பி மீட்டார்கள். 2008-ம் வருடம் வட இந்தியர்கள் சிலர் கடற்கொள்ளையர்களிடம் சிக்கியபோதும், இந்திய அரசு கப்பலை அனுப்பி மீட்டது. வட இந்தியர்கள் பாதிக்கப்பட்டால், பதறித் துடிக்கும் இந்திய அரசு, தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் மட்டும் கண்ணைக் கட்டிக்கொள்கிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றுதான் பொது நல வழக்குப் போட்டேன். இந்திய மற்றும் சர்வதேசக் கடல் பிராந்தியத்திலும் கச்சத் தீவு பகுதியிலும் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இந்தியக் கப்பற்படையும் விமானப் படையும் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கடலோரக் காவல் படையினரும் படகில் சென்று பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்திய - இலங்கை கடற்படையினர் இணைந்து கடலில் ரோந்து செல்ல வேண்டும். 1974-ல் இருந்து இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். இந்தக் கோரிக்கைகளோடு இன்னொரு முக்கியமான கோரிக்கையும் வைத்திருக்கிறோம்.

நாடாளுமன்றத்திலோ, தமிழக சட்டமன்றத் திலோ, தீர்மானம் நிறைவேற்றாமல்... கச்சத் தீவை தன்னிச்சையாக இலங்கைக்குத் தாரை வார்த்தது, மத்திய அரசு. இது செல்லவே செல்லாது. இந்த ஷரத்தைக் காரணம் காட்டி, அண்மையில் நதி நீர்ப் பிரச்னை ஒன்றில் வங்க தேசத்துக்கும் இந்திய அரசுக்கும் இடையில் போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அது போலவே கச்சத் தீவு ஒப்பந்தத் தையும் ரத்து செய்து, தீவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எங்களது முக்கியக் கோரிக்கை. எங்களது மனுவுக்குப் பதில் சொன்ன மத்திய அரசு வழக்கறிஞர், 'தமிழக மீனவர்களுக்கு இப்போது உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதாக’ச் சொன்னதில் முழுத் திருப்தி அடையாத நீதிபதிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். இது தொடக்கம்தான்... வழக்கின் இறுதி விசாரணைக்குப் பிறகு, எங்களின் நியாயமான மற்ற கோரிக்கைகளுக்கும் இதே போல் திருப்புமுனைத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும்!'' என்றார் நம்பிக்கையாக.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism