Published:Updated:

பத்துக்குப் பத்து எப்படி? எப்படி?

சசிகலாவை ஜெயிக்க வைத்த எம்.ஜி.ஆர்.!

பத்துக்குப் பத்து எப்படி? எப்படி?

சசிகலாவை ஜெயிக்க வைத்த எம்.ஜி.ஆர்.!

Published:Updated:

கூட்டணி பக்கவாத்தியங்களைத் தூக்கிக் கடாசிவிட்டு, தனித் தவிலாகக் களம் இறங்கி உள்ளாட்சிக் கச்சேரியில் பட்டையைக் கிளப்பிவிட்டது அ.தி.மு.க.. குறிப்பாக, 10 மாநகராட்​சிகளின் 'வணக்கத்துக்குரிய மேயர்’களைச் சுருட்டி இருக்கிறது அம்மாவின் கட்சி. அந்தப் புதியவர்களின் பரவச டேட்டா இதோ...

பத்துக்குப் பத்து எப்படி? எப்படி?
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை: 'சென்னை மாநகராட்சியின் முதல் அ.தி.மு.க. மேயர்’ என்ற குதூகல ஆரவாரத்தில் ஜெயித்த சைதை துரைசாமி, 5 லட்சத்து 19 ஆயிரத்து சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் மாஜி மேயர் மா.சுப்பிரமணியனைத் தோற்கடித்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மா.சு. செய்த நற்காரியங்கள், கட்சி அடையாளங்களைத் தாண்டி அவர் சிறப்பாகச் செயல்பட்டதை எல்லாம் பார்த்து ஆரம்பத்தில் ஆளும் கட்சியினர் வெலவெலத்து நின்றது உண்மைதான். ஆனால், மக்கள் மனதின் கணக்கோ வேறு என்பதை வாக்கு வித்தியாசங்கள் காட்டிவிட்டன. கட்சிக் கரையைத் தாண்டி 'சைதை துரைசாமி’ என்கிற தனி மனிதர் மேல் சென்னைவாசிகள் வைத்திருக்கும் நம்பிக்கையும் இதற்கு காரணம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மாணவர்களுக்காக  அகாடமி நடத்திக் கவனம் ஈர்க்கும் சைதையார், வரும் ஐந்து ஆண்டுகளில் அங்கி அணிந்த பொம்மையாக மாறி, வெறும் தீர்மானக் குவியல்களுக்குள் மூழ்கிவிடக் கூடாது என்பதுதான் சிங்காரச் சென்னை மக்களின் எதிர்பார்ப்பு.

பத்துக்குப் பத்து எப்படி? எப்படி?

கோவை: அ.தி.மு.க-வின் மாஜி அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, இப்போது மேயர். தேர்தலில் தனக்கு எதிராக நின்ற தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சியினரைவிட, சொந்தக் கட்சி எதிரிகளை நினைத்தே தவித்துக்​கொண்டு இருந்தார். அதனால்தான், 'எனக்கு எதிராக யாரெல்லாம் உள்வேலைகள் பார்க்கிறாங்கனு தெரியும். ஒண்ணு புரிஞ்சுக்கோங்க... அம்மா தலைமையிலான கழகத்துக்குத் துரோகம் செய்யுறவன் அழிஞ்சே போவான்!’ என்று மாவட்டக் கழகக் கூட்டத்தில் வெடித்தேவிட்டார். ஆனால், கட்சியின் மாபெரும் செல்வாக்கு அவரைத் தூக்கி நிறுத்திவிட்டது. கொசுறாக, கோவைக்குப் பிரசாரம் செய்ய வந்த தலைவியை வழியனுப்பச் சென்றபோது, விமான நிலையத்தில் அவர் கையை உடைத்துக்கொள்ள... கட்டுடன் எல்லா இடங்களுக்கும் பிரசாரத்துக்கு போனதும் ப்ளஸ்.

பத்துக்குப் பத்து எப்படி? எப்படி?

மதுரை: சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் பத்துக்கு பத்து தொகுதிகளையும் கைப்பற்றி 'ஃபர்ஸ்ட் கிளாஸ்’ வாங்கியது அ.தி.மு.க. கூட்டணி. மதுரை மாநகராட்சித் தேர்தலில் தனித்து நின்று 99-க்கு 76 வார்டுகளை (ஒரு வார்டுக்கு தேர்தல் நடைபெறவில்லை.) கைப்பற்றி தி.மு.க​-வுக்கும், முன்னாள் கூட்டணித் தோழர்களுக்கும் 'ஷாக்’ கொடுத்​திருக்கிறது அ.தி.மு.க. மேயர் தேர்தலில் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை ராஜன் செல்லப்​பாவுக்கு இருந்தாலும், இத்தனை வார்டுகளைக் கைப்பற்றுவோம் என்று கட்சிக்காரர்களே நினைக்க​வில்லை. நில அபகரிப்பு உள்ளிட்ட மோசடி வழக்குகளில் அதிகமாக சிறைக்குப் போனவர்களும், குண்டாஸில் அதிக எண்ணிக்கையில் உள்ளே இருப்பவர்களும் மதுரை தி.மு.க. புள்ளிகள்தான். அரசு எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையே எம்.ஜி.ஆர். காலத்தில் கைவிட்டுப்போன மதுரை மாநகராட்சியை மீண்டும் அ.தி.மு.க-வுக்கு மீட்டுக் கொடுத்திருக்​கிறது. ''வீடுகளுக்கான பாதாள சாக்​கடை வரியைப் பாதியாகக் குறைப்பதும் குடிநீர்ப் பிரச்னைகளைத் தீர்ப்பதும் எனது முதல் பணி'' என்று சொல்​லும் ராஜன் செல்லப்பா, ''விரைவில் மதுரை மாநகராட்சியின் சொத்துப் பட்டியல் வெளி​வரும். அடுத்ததாக, ஆக்கிர​மிப்பாளர்கள் பட்டிய​​​லையும் வெளியிட்டு மதுரையை மீட்பேன்'' என்று சொல்லி இருப்பதால் ஆடித்தான்கிடக்கிறது அஞ்சா நெஞ்சன் பேட்டை!

பத்துக்குப் பத்து எப்படி? எப்படி?

வேலூர்: கட்சிக்கு அறிமுகமே இல்லாத கார்த்தியாயினி, வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது அலறிய அ.தி.மு.க-வினர், இப்போது ஆனந்தத்தில் மிதக்கின்றனர். அதிலும், ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் மத்தியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் ஓவராக உணர்ச்சிவசப்பட்டு மேயருக்குத் தன் கையால் கேக் ஊட்டியதுதான்... அடடா! தோற்றுப்போன தி.மு.க. தரப்போ, துரைமுருகன் மீது அடக்க மாட்டாத ஆத்திரத்தில் இருக்கிறார்கள். பிரசாரம் உள்ளிட்ட எந்த விஷயத்தையும் இவர் கண்டுகொள்ளாமல் இருந்ததே தோல்விக்கான முக்கியக் காரணம் என்கிறார்கள்.

'மாநகராட்சியின் முதல் பெண் மேயர்’ என்ற பெருமையோடு அமர்ந்திருக்கும் கார்த்தியாயினியின் லிஸ்ட்டில்... குடிநீர்த் திண்டாட்டம், சாலைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் காத்துக்கொண்டு இருப்பதால், இனிமேல் தான் அவருக்கு சவால்!

பத்துக்குப் பத்து எப்படி? எப்படி?

தூத்துக்குடி: சசிகலா புஷ்பா மேயர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். 'இந்தத் தடவை நடந்த மாநகராட்சித் தேர்தலில் ம.தி.மு.க-வுக்கு விழும் ஓட்டுகள்தான் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும்’ என ஏற்கெனவே சொல்லப்பட்டது. காரணம், 'ஒட்டுமொத்த மீனவ சமுதாய மக்களும் ம.தி.மு.க​-வை ஆதரிப்பார்கள்’ என சொல்லப்​பட்டதுதான். ஆனால், பிர​சாரம் சூடானபோது நிலைமை தவறாகி​விட்டது. மீனவ சமுதாய மக்கள் ம.தி.மு.க-வை நோக்கி நகர்​கிறார்கள் என்று தெரிய ஆரம்பித்​ததும், மளமளவெனக் களம் இறங்கிய அ.தி.மு.க. வீடு வீடாகப் போய், 'எம்.ஜி.ஆரோட விசுவாசி மக்களே... அம்மாவுக்கு துரோகம் பண்ணிடாதிய’ என்று சென்டிமென்டாகத் தொட்டனர். அது பலித்துவிட்டது. 'பிரசாரத்தில் கடைசி நேரத்தில் மட்டுமே கையை முறுக்கிக்கொண்டு மாவட்டச் செயலாளர் பெரியசாமி களம் இறங்கியதுதான் தோல்விக்கு காரணம்’ என முணுமுணுக்கிறது தி.மு.க. தரப்பு.

பத்துக்குப் பத்து எப்படி? எப்படி?

நெல்லை: தி.மு.க. வசம் இருந்த நெல்லை மாநகராட்சியை அ.தி.மு.க கைப்பற்றி, விஜிலா சத்தியானந்த் மேயராகிவிட்டார்.

இந்த வெற்றி சாதாரணமாக வந்துவிடவில்லை. தொடக்கத்தில், நெல்லையில் அ.தி.மு.க-வினரின் பிரசார வேகத்தில் தொய்வு ஏற்பட்டதை அறிந்த ஜெயலலிதா, ஏழு பேர்கொண்ட குழுவை ஏற்படுத்தி பணிகளை வேகப்படுத்தினார். அத்துடன், தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவரது பிரசாரமும் கூடுதல் பலம் சேர்த்தது. தேர்தல் பணியில் கடைசி வரையிலும் தட்டுப்பாடு இல்லாமல் பணம் செலவு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பு இல்லாத தேர்தல் பிரசாரமே தி.மு.க-வின் தோல்விக்கு அடிப்படை என்கிறார்கள். தி.மு.க. நிர்வாகிகளில் முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ-வான மாலைராஜா ஆகியோரைத் தவிர வேறு முக்கியப் பிரமுகர்களை பிரசாரத்​தில் பார்க்கவே முடிய​வில்லை. அதோடு, மாநகராட்சி நிர்வாகத்தில் கடந்த முறை பொறுப்பில் இருந்த தி.மு.க-வினர் மீது ஏற்பட்டு மக்களிடம் இருந்த வெறுப்பும்  தோல்விக்குக் காரணமானது.

பத்துக்குப் பத்து எப்படி? எப்படி?

ஈரோடு: கோவைக்கு நிகராக இங்கேயும் கடுமையான உட்கட்சி உள்ளடி வேலைகளுக்கு ஆளானார் அ.தி.மு.க. வேட்பாளரான மல்லிகா பரமசிவம். இருந்தும், கட்சி செல்வாக்கில் கரை சேர்ந்துவிட்டார்.  அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தரப்பில் இரு பெண்கள் போட்டியிட்டாலும்கூட, மறைமுகமாக மோதிக்கொண்டது என்னவோ சிட்டிங் அமைச்சர் கே.வி.ராமலிங்கமும், தி.மு.க-வின் மாஜி அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவும்தான். இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க எவ்வளவோ பாடுபட்டும் வெற்றி கைநழுவிப்போனது தி.மு.க-க்கு. மேயரான சிலிர்ப்பில் 'சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்’ என்று மல்லிகா சொல்லிக்கொண்டு இருக்க, தங்கள் ஆதரவு கவுன்சிலர்கள் மூலம் நிர்வாகத்தில் அவருக்குக் குடைச்சலை கொடுக்க, இப்போதே ப்ளான் ரெடி செய்துவிட்டது ஒரு கோஷ்டி.

பத்துக்குப் பத்து எப்படி? எப்படி?

திருப்பூர்: பல ஏமாற்றங்களைத் தாங்கி நெடு நாட்களாக கட்சி விசுவாசியாக இருந்த பலனை அறுவடை செய்திருக்கிறார் விசாலாட்சி. தேர்தலில் தி.மு.க-வுக்கு நிகராக செம பலத்துடன் தே.மு.தி-க.வும் வளர்ந்து நின்றதால், அலறித்தான் போனது அ.தி.மு.க. இது போதாதென்று வேட்பாளர் விசாலாட்சி மீது பெர்சனல்ரீதியிலான பிரசார தாக்குதல்​களை சென்டிமென்டாகக் களம் இறக்கியது எதிர் அணி. இதில் சற்றே துவண்டாலும், பிறகு சுதாரித்துக் கிளம்​பிய விசாலாட்சி வெற்றி​யைத் தட்டியிருக்​கிறார். திருப்பூ​ரில் கம்யூனிஸ்ட்​டுகள் அதிகம். ஆகவே, தே.மு.தி.க. வேட்பாளருக்கு முழு உணர்வோடு வேலை பார்த்தார்கள் மார்க்சிஸ்ட்டுகள். ஆனால், பிரசாரத்தின் இறுதி வேளையில் இங்கே வந்த பிரேமலதா விஜயகாந்த், 'எங்கள் வேட்பாளரை ஜெயிக்கவைக்க வேண்​டியது உங்கள் கடமை’ என்று ஆரம்பித்து டீச்சர் தோரணையில் உதிர்த்த சில வாக்கியங்கள் கம்யூனிஸ்ட்களைக் கடுப்பாக்கி​விட்டன. இதுவும்கூட விசாலாட்சிக்கே சாதகமானது.

பத்துக்குப் பத்து எப்படி? எப்படி?

சேலம்: சவுண்டப்பனுக்குக் கிடைத்த வெற்றியை, அமைதிக்கும் அடக்கத்துக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறது சேலம் அ.தி.மு.க. சேலம் நாடக நடிகர்கள் சங்கச் செயலாளரான சவுண்டப்பன் துணை மேயராக இருந்தவர். லோக்கலில் எந்தக் கோஷ்டியையும் வளர்த்துக்கொள்ளாமல் எப்போதும் 'அம்மா’வின் கோஷ்டியிலேயே இருந்தார். சிட்டிங் அமைச்சர் பழனிசாமி, மாஜி அமைச்சர் பொன்னையன் என்று அ.தி.மு.க. வி.ஐ.பி-க்கள் சுழன்று வேலை பார்த்ததன் விளைவாக, அவருக்கு ஜெயம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, நில அபகரிப்பால் சிறைவாசம் என்று நொந்திருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு  உள்ளாட்சிச் சறுக்கல் மேலும் வலியை ஏற்படுத்தி இருக்கலாம்.

பத்துக்குப் பத்து எப்படி? எப்படி?

திருச்சி: 'நகராட்சியாக இருந்த காலத்தில் இருந்து திருச்சி மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது இல்லை’ என்ற அவப் பெயரைத் துடைத்தெறிந்து இருக்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயா. தி.மு.க-வின் விஜயா ஜெய​ராஜைவிட 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று வென்றிருக்கிறார். திருச்சி மேற்கு இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மாநகராட்சியும் கைவசம் ஆனதில், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு முகம்கொள்ளா மகிழ்ச்சி. திருச்சி மாநகரின் பிரதானப் பிரச்னைகளான போக்குவரத்து நெரிசலையும், மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளையும் தீர்த்துவைப்பதையே அனைத்து வேட்பாளர்களும் பிரசாரத்தில் எடுத்துவைத்தார்கள். 'குண்டும் குழியும் இல்லாத தார் சாலை, தடை இல்லாத குடிநீர் வசதி, பொழுதுபோக்குப் பூங்கா, வாக்கிங் செல்வதற்கான இடம்’ என்று மற்ற வேட்பாளர்களைப் போலவே வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஜெயா, ''மாநிலத்தில் அம்மாவின் ஆட்சி நடப்பதால், திருச்சியின் தேவைகளை எடுத்துச் சொல்லித் திட்டங்களை என்னால் உடனடியாக நிறைவேற்ற முடியும்!'' என்று பிரசாரம் செய்தது, மக்களை ஆளும் கட்சியான அ.தி.மு.க. பக்கம் திருப்பி இருக்கிறது.

- ஜூ.வி. டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism