Published:Updated:

''சுயேச்சைகளுக்கு கிடைச்சது எங்களுக்கு கிடைக்கலையே!''

பரிதாபத்தில் பா.ம.க., காங்கிரஸ்!

''சுயேச்சைகளுக்கு கிடைச்சது எங்களுக்கு கிடைக்கலையே!''

பரிதாபத்தில் பா.ம.க., காங்கிரஸ்!

Published:Updated:

மிழகத்தில் உள்ள 125 நகராட்​சிகளில் 89-ஐ ஆளும் கட்சி அள்ளிக்கொள்ள, 23 நகராட்​சிகளை தி.மு.க. கைப்​பற்றி இருக்கிறது. தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் மற்றும் பி.ஜே.பி-யினர் தலா இரண்டில் வெற்றி பெற... ம.தி.மு.க., 'ஒன்றாவது கிடைத்ததே’ என்று ஆறுதல்பட்டுக்கொண்டது. சுயேச்​சைகள்கூட ஐந்து நகராட்சிகளைக் கைப்பற்றி இருக்கும் நிலையில்... காங்கிரஸும் பா.ம.க-வும் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடிய​வில்லை. (கூட்டிப் பார்த்தால் ஒன்று இடிக்கிறதா... வேட்பாளர் ஒருவர் இறந்துபோனதன் காரணமாக வெள்​ளக்கோவில் நகராட்சியில் தேர்தல் நடைபெறவில்லை!)

'அந்தந்தக் கட்சிகளின் உண்மையான பலத்தை இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு தெளிவாகக் காட்டுகிறது’ என்பது ஒரு தரப்பினரின் கருத்து!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்னொரு தரப்பினரோ, ''தி.மு.க. மீதான கோபம் இன்னமும் மக்களுக்குக் குறையவில்லை என்பதைத்தான் இந்த முடிவு காட்டுகிறது. உள்ளாட்சி நிர்வாகத்தில் எந்தெந்தப் பிரமுகர்கள் மீதெல்லாம் மக்கள் கடும் கோபத்தில் இருந்தார்களோ... அவர்களுக்கே மீண்டும் ஸீட் கொடுத்தது தி.மு.க. அதுவே அந்தக் கட்சிக்குப் பெருத்த சரிவை ஏற்படுத்தியது. நில அபகரிப்பு வழக்குகளில் தி.மு.க-வினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதும், அவர்களைப்பற்றி மீடியாக்களில் வந்த தகவல்களும் மக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தின. மாவட்டத்தில் இருக்கும்

''சுயேச்சைகளுக்கு கிடைச்சது எங்களுக்கு கிடைக்கலையே!''

முக்கியப் பிரமுகர்கள் பலரும் சிறையில் இருக்க... கட்சி ஆட்களை ஒருங்கிணைத்து வேலை செய்ய ஆட்கள் இல்லை. மாலுமி இல்லாத கப்பலாகத் தடுமாறியதால், ஏற்கெனவே கைவசம் வைத்திருந்த பல இடங்களை தி.மு.க. கோட்டைவிட்டது. அதே சமயம் அ.தி.மு.க. தரப்பில் புது முகங்கள் பலர் களத்தில் இறக்கிவிடப்பட்டனர். அதனால் எவ்விதக் குற்றச்​சாட்​டும் இல்லாதவர்களை மக்கள் நம்பிக்கைவைத்துத் தேர்ந்​தெடுத்​தனர்!'' என்கிறார்கள்.

எந்தக் கட்சியையும் சாராத சிலர், ''கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.முக-வின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று... ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் என்றெல்லாம் ஜெயலலிதா அறிவித்த இலவசத் திட்டங்கள். 'இதெல்லாம் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா..? எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம் செய்தார்கள். 'உங்கள் பகுதிக்கு அரசுத் திட்டங்களை மாநில அரசிடம் பேசி எங்களால்தான் எளிதில் கொண்டுவர முடியும். தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட்டால், உங்கள் ஏரியா சவலைப்பிள்ளை ஆகிவிடும்’ என்றெல்லாம் செய்த பிரசாரங்கள், ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை மக்களை எடுக்கவைத்தது...'' என்கிறார்கள்.

அதையும் மீறி 23 நகராட்சிகளை தி.மு.க. வென்றது எப்படி? அதற்குக் காரணம் அ.தி.மு.க-வின் உட்கட்சி பாலிடிக்ஸ்தான் என்று அடித்துச் சொல்கிறார்கள். வேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், பேரணாம்பட்டு, அரக்கோணம் நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றி இருக்கிறது. 22 வார்டுகளைக்கொண்ட பேரணாம்பட்டு நகராட்சியில், மூன்று வார்டுகளில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. இந்த தோல்விக்குக் காரணம் அ.தி.மு.க. நகரச் செயலாளர் சீனிவாசன் தான் என்று குறைபட்டுக்கொள்கின்றனர். கட்சி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்​காமல், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததே தோல்விக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். உட்கட்சிப் பூசல் மற்றும் உள்ளடி வேலைகள் காரணமாகவே திருப்பத்தூர் மற்றும் அரக்கோணம் நகராட்சித் தலைவர் பதவிகளை இழந்தது அ.தி.மு.க.

அதே போல், அருப்புக்கோட்டையில் நகராட்சித் தலைவர் பதவியை அ.தி.மு.க. கோட்டைவிட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்கு சொந்தக் கட்சியினர்தான் காரணம் என்பதை அ.தி.மு.க-வினரே ஏற்றுக்கொள்கின்றனர். 'இலவசப் பொருட்கள் இன்னமும் வந்து சேரவில்லை. மேலும் வேட்பாளர் தேர்வில் நடந்த உள்குத்து போன்றவைதான் தோல்விக்குக் காரணம்’ என்கிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்​மையாக இருக்கும் கடையநல்லூர் நகராட்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் உள்ளூர்க் கூட்டணியை ஏற்படுத்தியே தி.மு.க. வெற்றி பெற முடிந்திருக்கிறது. வால்பாறை நகராட்சியை தி.மு.க. கைப்பற்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தி.மு.க-வினருக்கு மறைமுக ஆதரவு கொடுத்ததாகத் தகவல்!

''சுயேச்சைகளுக்கு கிடைச்சது எங்களுக்கு கிடைக்கலையே!''

நாகர்கோவில் வெற்றியைவிட மேட்டுப்பாளையம் நகராட்சியை பி.ஜே.பி. கைப்பற்றியதுதான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மேட்டுப்பாளையம் நகராட்சியில் எப்படி இந்த வெற்றி சாத்தியமாயிற்று? ''பி.ஜே.பி-யைத் தவிர மற்ற அத்தனை பெரிய கட்சிகளும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளராக்கி இருந்​தனர். இதனால் இஸ்லாமியர்களின் வாக்குகள் சிதறிப்போகவே, நடுநிலை வாக்கு​களைப் பெற்று பி.ஜே.பி-யின் சதீஷ்குமார் வென்றார்!'' என்கிறார்கள்.

பல்லடம் நகராட்சியை தே.மு.தி.க. கைப்பற்றியது அடுத்த ஆச்சர்யம். காரணம்? 'இயல்பாகவே இங்கே கேப்டனுக்கு தனி செல்வாக்கு உண்டு. தவிர, வேட்பாளர் சேகர் மக்களை 'நல்லாவே’ கவனிச்சார்’ என்று அழுத்திச் சொல்கிறார்கள் பல்லடம் தே.மு.தி.க-வினர்.

ஆக மொத்தத்தில், சட்டசபைத் தேர்தலில் ஏற்றப்பட்ட அ.தி.மு.க-வின் கொடி, இன்னமும் பட்டொளி வீசிப் பறக்கிறது என்பதையே காட்டுகிறது உள்​ளாட்சித் தேர்தல் முடிவுகள்!

- ஜூ.வி. டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism