Published:Updated:

தெலங்கானா சம்பவத்திற்குப் பிறகு நடந்த 17 பாலியல் வன்முறைகள்! என்னதான் தீர்வு?

தெலங்கானா போலீஸார்
தெலங்கானா போலீஸார்

குற்றம்சாட்டப்பட்டவர்களை என்கவுன்டரில் சுடுவதால் மட்டும் பாலியல் வன்புணர்வுக் குற்றங்களுக்குத் தீர்வு கிடைத்துவிடப்போவதில்லை என்பதற்கு அதன் பிறகு நிகழ்ந்த இத்தனை குற்றங்களே சாட்சி.

தெலங்கானா மருத்துவர் பாலியல் வன்புணர்வு மரணத்துக்குப் பிறகான 10 நாள்களில் மட்டும் இந்திய அளவில் 17 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்து பதற்றத்தை உருவாக்கியுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களை என்கவுன்டரில் சுடுவதால் மட்டும் பாலியல் வன்புணர்வுக் குற்றங்களுக்குத் தீர்வு கிடைத்துவிடப்போவதில்லை என்பதற்கு அதன் பிறகு நிகழ்ந்த இத்தனை குற்றங்கள் சாட்சி. எட்டு வயதுச் சிறுமி, பெண் மருத்துவர், 20 வயது கல்லூரி மாணவி, 70 வயது மூதாட்டி என வயது வித்தியாசமின்றி வன்கொடுமை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. இவை அத்தனையும் வழக்குப் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள்
`எங்கள் பெயரால் அதைச் செய்யாதீர்கள்!’ - தெலங்கானா என்கவுன்டரைக் கண்டிக்கும் பெண் வழக்கறிஞர்கள்

2012-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கைத் தொடர்ந்து, 2013-ல் நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது. நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டதற்குப் பிறகு 2013 - 2015 காலகட்டத்தில் டெல்லியில் மட்டுமே 40 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வரிசையில் தெலங்கானா பெண் மருத்துவரின் மரணத்தைத் தொடர்ந்து இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் கடந்த பத்து நாள்களில் 12 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 7 பேர் 18 வயதுக்கும் குறைவான சிறுமிகள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை.

பாலியல் வன்முறை
பாலியல் வன்முறை

இத்தனை சம்பவங்களுக்கிடையே தெலுங்கு திரைப்பட இயக்குநரான டேனியல் ஷ்ரவன் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், "பெண்கள் ஆண்களின் ஆசையை நிறைவேற்றிவிட்டால் கொலைகள் தடுக்கப்படும். பெண்கள் எப்போதும் தங்களுடன் காண்டம் வைத்திருக்க வேண்டும். பாலியல் வன்புணர்வுக்குப் பிறகு நிகழும் இதுபோன்ற மரணங்களைத் தடுக்க அரசும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.

தெலங்கானா டிஜிபி
தெலங்கானா டிஜிபி

தெலங்கானா மருத்துவரின் கொலையை அடுத்து ஐதராபாத் நகர காவல்துறை ஆணையர், பெண்கள் தங்களைப் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான 14 வழிமுறைகளை வெளியிட்டிருந்தார். பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் வன்கொடுமைகள் தொடர்ந்துகொண்டிருக்க பாதிக்கப்படுபவர்களுக்கே அறிவுரைகள் வழங்குவது அபத்தமானது. 'ஆண்கள் எப்படியிருந்தாலும் நாம்தான் பொறுத்துப் போகவேண்டும்' என்கிற ஆணாதிக்க மனோபாவ அறிவுரைகளை காவல்துறையே வழங்குவது கொடுமையானது.

தெலங்கானா மருத்துவர் மரணத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரையும் அந்த மாநிலக் காவல்துறை சுட்டுக்கொன்றபோது பெரும்பாலானவர்கள் வரவேற்றனர். ஆனால், அதே தினத்தில் உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் 3 வயதுக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த வழக்கில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கள் ஒலிக்கின்றன. வலுவான சட்டங்கள் இருக்கின்றன. இருந்தும் குற்றங்கள் தொடர்ந்துகொண்டிருப்பது ஏன்? இதுகுறித்துச் சமூகச் செயற்பாட்டாளர் ஓவியாவிடம் பேசினோம்.

ஓவியா
ஓவியா
`நீதி என்பது எங்களுக்கு வெறும் கனவாகவே உள்ளது..!’ - உன்னாவ் பெண்ணின் தந்தை கதறல்

"இதுபோன்ற குற்றங்களில் அதிகபட்ச தண்டனை அளிப்பதாலும், என்கவுன்டர் செய்வதாலும் தீர்வு கண்டுவிடமுடியாது. பாதிக்கப்படும் நபர்களையும் குற்றம் சொல்வது அப்பட்டமான தவறு. அவர்களின் வாழ்க்கையே முடிந்துவிட்டது போல சமூகம் அவர்களை அணுகக்கூடாது. நகரத்தில் வாழும் பெண்கள் ஆண்களைவிடப் பலவகையில் முன்னிலையில் உள்ளனர். அதனால் அவர்களை அடக்கிவிட வேண்டும் என்கிற மனோபாவமே இதுபோன்ற வன்கொடுமைக் குற்றங்களுக்குக் காரணமாகிறது. சமூகத்தின் மனநிலை மாறினால் மட்டுமே பாலியல் குற்றங்களைத் தடுக்கமுடியும். முக்கியமாக பள்ளிகளில் பாலியல் கல்வியைப் பாடத்திட்டத்தில் கொண்டுவருவது இதுபோன்ற குற்றங்களைக் குறைக்கும் பெரும் வாய்ப்பாக அமையும்" என்றார் அவர்.

பாலியல் குற்றங்களுக்கான நீதி என்பது பாலியல் கல்வியை வழங்குவதிலும், பாலியல் குற்ற வழக்குகளை காலம் தாழ்த்தாமல் விரைந்து முடிப்பதிலும்தான் இருக்கமுடியும். தவிர குற்றவாளிகளைத் துப்பாக்கியால் சுடுவது தீர்வு இல்லை.

அடுத்த கட்டுரைக்கு