குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில், மத்தியப் பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தின் கிராமத்தைச் சேர்ந்த பங்கஜ் தாமோர் என்பவர் தன் குடும்பத்தாருடன், கடந்த ஆறு ஆண்டுகளாக வசித்துவருகிறார். பங்கஜ் தாமோர் விவசாயக் கூலியாகப் பணியாற்றிவருகிறார்.
இந்த நிலையில், பங்கஜ் தாமோர் பணியாற்றும் பண்ணைக்கு அருகில், இவருடைய 12 வயது மகனின் உடல் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாகக் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு காவல்துறை விரைந்து வந்தது. மேலும், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கும் அனுப்பிவைத்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில், ``12 வயது சிறுவன், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். ஆனால், வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், பெற்றோர் வேலை செய்யும் பண்ணை அருகில் சடலம் கிடப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தோம். அங்கு சிறுவனின் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அங்கு சிறுவனின் உடலில் இருந்த காயங்களைப் பார்க்கும்போது, கரும்பு வெட்டப் பயன்படுத்திய பில் கொக்கி கொலை ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ஆயுதத்தால் சிறுவனின் தலையைத் தாக்கியிருக்கின்றனர். மேலும் அவரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டிருந்தது.
பிரேத பரிசோதனைக்குப் பிறகே முழு விவரம் தெரியவரும். விசாரணையில் காவல்துறைக்கு உதவ தடயவியல் நிபுணர்கள்குழு வரவழைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டு, தனிப்பட்ட விரோதம் காரணமாக சிறுவன் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.