Published:Updated:

விஷத்தை விதைக்கும் வில்லன்கள்!

விஷத்தை விதைக்கும் வில்லன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
விஷத்தை விதைக்கும் வில்லன்கள்!

சர்ச்சை

விஷத்தை விதைக்கும் வில்லன்கள்!

சர்ச்சை

Published:Updated:
விஷத்தை விதைக்கும் வில்லன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
விஷத்தை விதைக்கும் வில்லன்கள்!
விஷத்தை விதைக்கும் வில்லன்கள்!

“நம் கவலை எல்லாம், சுவாதி கொலையாளி விரைவில் பிடிபட வேண்டும் என்பதுதான்… ஆனால் சிலரது கவலையோ, அந்தக் கொலையாளி ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பதுதான்’’ – கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வலம் வந்த பதிவு இது.

விஷத்தை விதைக்கும் வில்லன்கள்!

சுவாதி கொலை வழக்கில், குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் போலீஸாரே திணறிய நேரத்தில்தான், கொலையாளி ஓர் இஸ்லாமியர் என்று முகநூலில் சிலர் விஷத்தை விதைத்தனர். ‘லவ் ஜிஹாத்’ என்றெல்லாம் கிளப்பிவிட்டனர். கொலையை ஒரு குற்றச்சம்பவமாகப் பார்க்காமல் அதற்கு சாதி, மத ரீதியான சாயம் பூசுகிற ஆபத்தான காரியத்தை முனைப்புடன் செய்தனர். இந்த வில்லத்தனத்தில், சினிமாவில் காமெடி நடிகர்களாக தோன்றியவர்களும் சேர்ந்துகொண்டதுதான் வேதனை.

உண்மையான குற்றவாளி பிடிபட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சமூக ஒற்றுமையைக் குலைக்கிற, சுவாதி கொலை வழக்கைத் திசைதிருப்பி உண்மையான குற்றவாளியை தப்பிக்க வழிவகுக்கிற வகையில்தான் அவர்களின் செயல்பாடுகள் வெளிப்பட்டன.

விஷத்தை விதைக்கும் வில்லன்கள்!

இன்றைக்குத் திடீரென வெகுண்டெழும் இவர்கள், இதற்கு முன்பு நிகழ்ந்த இதுபோன்ற ஏதாவது ஒரு கொலைக்காவது கண்டனம் தெரிவித்தார்களா? சாதிமறுப்புத் திருமணம் செய்த தர்மபுரி இளவரசன் ரயில் தண்டவாளத்தில் கொல்லப்பட்டுக் கிடந்தபோது, அந்தக் கொடூரத்தை இவர்கள் கண்டித்தார்களா? இல்லை. ஓமலூர் கோகுல்ராஜ் கழுத்தை அறுத்து ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டாரே, சாதிமறுப்புத் திருமணம் செய்த சங்கர் உடுமலையில் வெட்டிச்சாய்க்கப்பட்டாரே, அந்த அநியாயங்களைக் கண்டித்தாவது கொதித்து எழுந்தார்களா? இல்லை.

அவ்வளவு ஏன், இதே சென்னையில் மென்பொருள் பொறியாளர் உமாமகேஸ்வரியை, அவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கு அருகில் சில கயவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிப் புதருக்குள் பிணமாக வீசிவிட்டுச் சென்றனரே, அதையாவது இவர்கள் கண்டித்தார்களா? இப்போது, தனது புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் சேலத்தில் இளம்பெண் வினுப்ரியா தற்கொலை செய்துகொண்ட துயரம் பற்றியாவது இவர்கள் வாய் திறந்தார்களா? இல்லை.

விஷத்தை விதைக்கும் வில்லன்கள்!

எந்தவோர் அநீதியையும், சமூகக் கொடுமைகளையும் கண்டுகொள்ளாமல், ஒதுங்கிச் சென்ற இவர்கள்தான், சுவாதி கொலைக்காகத் தாம்தூமென்று குதிக்கிறார்கள். மேலும் அவர்கள், ‘‘சுவாதி பிராமணப் பெண் என்பதால் அவர் படுகொலையை யாரும் கண்டுகொள்ளவில்லை; இதுவே ஒரு தலித் பெண்ணாக இருந்தால் வரிந்து கட்டிக்கொண்டு வந்திருப்பார்கள்’’ என்றும் சாதிய வன்மத்தைக் கக்கினார்கள். இவர்கள், சில அரசியல் இயக்கங்களை இழிவான முறையில் விமர்சனமும் செய்தனர். திராவிடக் கட்சிகளை, “திராவிடப் பொறுக்கிகள்” என்றும், கம்யூனிஸ்ட்  இயக்கங்களை “காம ரேட்டுக் கயவர்கள்” என்றும் தரம் தாழ்ந்து தாக்கினர். ஆனால், அனைத்து அரசியல் கட்சிகளும் சுவாதி கொலைக்குக் கண்டனம் தெரிவித்தன. சம்பவம் நடந்த மறுதினமே தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுவாதியின் வீட்டுக்குச் சென்றார். சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், வி.சி.க தலைவர் திருமாவளவன் ஆகியோரும் சுவாதியின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொன்னார்கள். உ.வாசுகி உள்ளிட்ட ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் நேரில் சென்றதுடன், மாதர் சங்கத்தின் சார்பாக மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஆனால், யாருமே கண்டிக்கவில்லை எனக் குற்றம் சாட்டும் இவர்களின் நோக்கம் என்ன?

இப்போது கொலையாளி என்ற சந்தேகத்துக்குரியவர் பிடிபட்டுள்ளார். இவர்கள் எதிர்பார்த்ததுபோல எதுவும் நடக்கவில்லை. பிடிபட்டவர் இஸ்லாமியர் இல்லை என்பதை அறிந்தவுடன் என்ன செய்தார்கள் தெரியுமா? அவரது சாதி என்ன என்று ஆராய்ச்சி செய்து, அதற்கேற்ப விஷத்தைக்  கக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சாதிச் சாக்கடையை, மத மயக்கத்தைப் பயன்படுத்த கேடுகெட்ட எத்தனையோ இடம் உங்களுக்கு இருக்கிறது. குற்றச் சம்பவங்களில் அதைச் சேர்த்து பெருங்குற்றங்களுக்கு அடித்தளம் இட வேண்டாம்!

- ஆ.பழனியப்பன்