Published:Updated:

"சுவாதி பயந்தே வாழ்ந்தார்!"

"சுவாதி பயந்தே வாழ்ந்தார்!"
பிரீமியம் ஸ்டோரி
"சுவாதி பயந்தே வாழ்ந்தார்!"

முகம்மது பிலால் சித்திக் சொல்லும் தகவல்

"சுவாதி பயந்தே வாழ்ந்தார்!"

முகம்மது பிலால் சித்திக் சொல்லும் தகவல்

Published:Updated:
"சுவாதி பயந்தே வாழ்ந்தார்!"
பிரீமியம் ஸ்டோரி
"சுவாதி பயந்தே வாழ்ந்தார்!"
"சுவாதி பயந்தே வாழ்ந்தார்!"

சுவாதி கொலை வழக்கில் முகம்மது பிலால் சித்திக்கிடம் கொலை நடந்த நாட்களில் இருந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ராம்குமார் என்பவரை தற்போது போலீஸார் கைதுசெய்துள்ளனர். போலீஸ் வளையத்தில் இருந்து, வெளிவந்துள்ள சித்திக்கிடம் பேசினோம்.

 ‘‘சுவாதி உங்களுக்கு எப்படி அறிமுகம்?’’

‘‘நாங்கள் இருவரும் ஒரே பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள். அந்த வகையில் எனக்கு அவர் தோழியாகக் கிடைத்தார். அன்பாகப் பழகக் கூடியவர். பாகுபாடு இல்லாமல் பழகும் அமைதியான பெண். எப்போதும் கலகலவென சிரித்துக்கொண்டே இருப்பார். எங்களுடைய நண்பர்கள் வட்டம் பெரியது. நண்பர்கள் வீட்டில் நிகழ்ச்சிகள் என்றால் சந்தித்துக் கொள்வோம். அவருடைய வீட்டுக்குப் போயிருக்கிறேன். ஆனால், அதிகமாக அவரின் பெற்றோரிடம் பேசியதில்லை. பெண் தோழிகள் பேசுவார்கள்... நாங்கள் பேசுவதில்லை.’’

‘‘தனது பிரச்னை தொடர்பாக உங்களிடம் சுவாதி ஏதாவது தெரிவித்தாரா?’’

‘‘ஒவ்வொரு முறை நண்பர்கள் எல்லோரும் சந்திக்கும்போது, ‘என்னை ஒருவன் பின் தொடர்ந்து வருகிறான்’ என்று சொன்னார். அப்போது அதனை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும், ‘பத்திரமாக இரு’ என்றோம். அதோடு வீட்டில் சொல்லுமாறு தெரிவித்தோம். அப்போதில் இருந்தே, சுவாதி பயத்துடன்தான் இருந்தார் என்பது இப்போதுதான் புரிகிறது. இந்த விஷயத்தை அவர் வீட்டில் தெரிவித்தாரா என்பது தெரியவில்லை. சுவாதி கொல்லப்பட்ட செய்தி அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். எனக்கு ஆறுதல் அளித்து கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவிடுமாறு எனது உறவினர்கள் ஆலோசனை வழங்கினார்கள். தற்போது ராம்குமார் என்பவரை காவல் துறையினர் பிடித்துள்ளனர். இதற்கு முன்பு நான் அவரைப் பார்த்ததில்லை. சுவாதியின் தோழி மது, மிகவும் வருந்துகிறார். அவரைப் பார்க்கவே மிகவும் கவலையாக இருக்கிறது. இருவரும் ஒரே ரயிலில்தான் செல்வார்கள். இப்போது அவர் இல்லாமல் மது தனியாகப் பயணம் செய்வது வேதனையாக  உள்ளதாம். இதில் இருந்து எப்படி மீள்வது  என்று தெரியவில்லை.’’

‘‘காவல் துறை விசாரணை குறித்து?’’

‘‘முழு ஒத்துழைப்பு அளித்தேன். என்னுடைய குடும்பத்தாரையும் விசாரித்தார்கள். எங்களுக்கு என்ன தெரிந்ததோ, அதனை அவர்களிடம் தெரிவித்தோம். சுவாதியின் நண்பர்கள் அனைவருமே இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்கள். என் மீது குற்றம் சுமத்தினார்கள். அவை உண்மையில்லை. கதை கட்டுபவர்கள் கதை கட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். மதங்களைப் பற்றியோ, சாதியைப் பற்றியோ நான் பேச மாட்டேன். அதைப் பற்றியெல்லாம் தெரியாது.’’

‘‘சுவாதியின் பெற்றோரைச் சந்தித்தீர்களா?’’

‘‘காவல் துறை விசாரணைக்குள் இருந்ததால் அவர்களைச் சந்திக்கவில்லை. பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ராம்குமார் கைதுசெய்யப்பட்டவுடன்தான், காவல் துறை அலுவலகத்தில் இருந்து சுவாதியின் வீட்டுக்கு வந்தேன். ஆனால், அவர்கள் ரங்கம் சென்றுவிட்டதாகக் கூறினார்கள். கண்டிப்பாகப் பார்த்துப் பேச வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. சுவாதியின்  இழப்பு அவர்களுக்குப் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும்.  யாருடைய ஆறுதலும் அந்த இழப்பை ஈடுகட்ட முடியாது. காலம்தான் அந்தக் காயத்தை ஆற்றும்.’’

‘‘இன்றையச் சூழலில் பெற்றோர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?’’

‘‘தயவுசெய்து உங்கள் கருத்துக்களைக் குழந்தைகள் மீது திணிக்காதீர்கள். பெண் பிள்ளைகள் ஏதாவது பேச வந்தால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் பிரச்னைகளைக் காது கொடுத்து கேட்டு, களைவதற்கு நடவடிக்கை எடுங்கள். அதைவிட்டுவிட்டுக் கல்லூரிக்குச் செல்வதால்தானே பிரச்னை வருகிறது... இனிமேல் நீ போக வேண்டாம் என்று பழமை பேசி அவர்களுடைய கல்வியைப் பறிக்காதீர்கள்.’’

என்றார் சித்திக்கின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம். ‘‘இந்த வழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளன. அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முதலில் சித்திக்கை குற்றவாளியா என்ற கோணத்தில்தான் விசாரித்தார்கள்.  ‘உங்களுக்கு என்ன தெரியுமோ, அந்த உண்மையைச்  சொல்லுங்கள்’ என்று ஆலோசனை வழங்கினேன். அதுமட்டுமல்லாமல், அந்தப் பெண் செல்லும் வழியை முதலில் சித்திக்தான் கூறினார். அவர் வழங்கிய தகவல் அடிப்படையில்தான்  ராம்குமாரை நெருங்க முடிந்தது. ராம்குமார் கழுத்தை அறுத்ததாகக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முழுமையான விசாரணை முடிந்தால்தான் முடிவுக்கு வர முடியும். இந்த வழக்கில் சில அவிழ்க்க முடியாத விஷயங்கள் உள்ளன. அதனைக்  காவல் துறை  தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.

- கே.புவனேஸ்வரி, படம்: மீ.நிவேதன்