Published:Updated:

பால் மலர் கொலையில் 'அன்பகம்' கலை?

பால் மலர் கொலையில் 'அன்பகம்' கலை?

பால் மலர் கொலையில் 'அன்பகம்' கலை?

பால் மலர் கொலையில் 'அன்பகம்' கலை?

Published:Updated:
பால் மலர் கொலையில் 'அன்பகம்' கலை?

சென்னை கே.கே.நகர் தி.மு.க. பிரமுகர் பால்மலர் கொலை வழக்கு, க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டப்போவதுதான் காக்கிகள் வட்டாரத்தின் லேட்டஸ்ட் ஹாட்! குற்றவாளிகளை நெருங்கிவிட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ், விரைவில் தி.மு.க. முக்கியப் புள்ளிகள் சிலரை அடுத்தடுத்து வளைக்கும் என்று பரபரப்பாகப் பேசப்படுகிறது! 

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை கே.கே.நகர் பகுதியில் தி.மு.க. மகளிர் அணிச் செயலாளராக இருந்த பால்மலரை, கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி மர்ம நபர்கள் சிலர் கொடூரமாகக் கொன்று, மணிமங்கலம் கால்வாயில் வீசினர். பால்மலர், கட்சிப் பிரபலங்கள் பலருக்கும் நன்கு அறிமுகமானவர் என்பதால், இந்தக் கொலை அரசியல் வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தி.மு.க. ஆட்சி முழுவதும் இந்தக் கொலை வழக்கு விசாரணை வேகம் எடுக்காமல் முடங்கிக்கிடந்தது. அடுத்து அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் பால்மலரின் கணவர் குமரவேல், 'தி.மு.க. முக்கியஸ்தர்கள்தான் என் மனைவியின் மரணத் துக்குக் காரணம்’ என்று களம் இறங்க... இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

இதுகுறித்த செய்தியைக் கடந்த 29.5.11-ம் தேதி ஜூ.வி இதழில் விரிவாக எழுதி இருந்தோம்.

பால் மலர் கொலையில் 'அன்பகம்' கலை?

பால்மலரின் கணவர் குமரவேல் பின்வாங்கி விட்ட தாகவும்கூட சர்ச்சைகள். ஆனால், இப்போது கொலைக் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற செய்திகள் கசிய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, குமரவேலை சந்தித்தோம்.

''என் மனைவியின் சாவுக்குக் காரணமானவர்கள், நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும். தங்கள் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒரு நிர்வாகியின் கொலையைக்கூட முறையாக விசாரிக்காமல்விட்ட தி.மு.க-வுக்குப் பாடம் புகட்ட வேண்டும். என் மனைவி இறந்த அன்று கடைசியாக, நந்தனம் லோட்டஸ் காலனியில் இருக்கும் அன்பகம் கலை வீட்டுக்குச் சென்றார். அதன் பிறகுதான் அவளது செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆனது. தி.மு.க. ஆட்சியில் இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி, 'இதில் மேல்மட்டத் தொடர்பு இருக்கு. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது!’ என்று என்னிடம் சொன்னார். கட்சியில் இருக்கும் என் நண்பர்களும், 'தி.மு.க. முக்கியஸ்தர்களும்தான் இதற்குக் காரணம்’ என்று சொன்னார்கள்.

அப்போது நடந்த போலீஸ் விசாரணை யில், 'பால்மலர் எங்க வீட்டுக்கு வந்தது உண்மைதான். அன்னிக்குக் கலைஞர் பிறந்த நாள்ங்கிறதால கொஞ்சம் பிஸியா இருந்தேன். அதனால், அவங்க எப்பப் போனாங்கன்னு எனக்குத் தெரியலை’ என்று அன்பகம் கலை சொன்னார். எனவே, அன்பகம் கலைக்குத் தெரியாமல் இந்தக் கொலை நடந்து இருக்க வாய்ப்பே இல்லை. அவர் கண் அசைவின்றி அவர் வீட்டில் எதுவுமே நடக்காது. கொலை செய்யச் சொல்லிக் கட்டளை இட்டது யார் என்பதுதான் இப்போதைய கேள்வி. அன்பகம் கலையைக் கைது செய்து தீவிரமாக விசாரித்தால், குற்றவாளியைப் பிடித்துவிடலாம். சமீபத்தில் என்னிடம் பேசிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், 'உங்கள் மனைவி கொலைக்குக் காரணமான குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். விரைவில் கைது செய்வோம் என்று மட்டும் சொன்னார். யார் அதைச் செய்தது என்று சொல்லவில்லை. கைதுக்காக நானும் காத்திருக்கிறேன். பணம் வாங்கிக்கொண்டு நான் பின்வாங்கியதாகச் சிலர் பேசுகிறார்கள். எனக்கு சொந்தமாக நான்கு வீடுகள் உள்ளன. டிராவல்ஸ் தொழில் நடத்தி, நன்றாகவே சம்பாதிக்கிறேன். நான் யாருக்கும் விலைபோக வேண்டிய அவசியம் இல்லை.

பால் மலர் கொலையில் 'அன்பகம்' கலை?

தி.மு.க-வில் உள்ள என் நண்பர்களின் அரசியல் நலனுக்காகக் கொஞ்சம் அமைதி காத்தேன் என்பது மட்டும் உண்மை. புகார் கொடுத்த நாளில் இருந்து பல்வேறு மட்டங்களில் இருந்தும் எனக்கு மறைமுக அச்சுறுத்தல்கள் வந்தபடி உள்ளன. விரைவில் முதல்வர் அம்மா அவர்களை சந்தித்து, எனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க-வில் இணையப் போகிறேன். என் குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டு, தி.மு.க-வின் முகமூடியைக் கிழிக்க முழு பலத்துடன் போராடுவேன்!'' என்றார் வேகமாக.

இதுகுறித்து விளக்கம் கேட்க, அன்பகம் கலையைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். அவரது செல்ஃபோன் அணைத்துவைக்கப்பட்டு இருக்கவே... லோட்டஸ் காலனியில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சென்றோம். பூட்டி இருந்தது. அருகில் விசாரித்தபோது, ''சொந்த ஊருக்குப் போய் இருக்கிறார்...'' என்றார்கள். தென் சென்னை தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரித்தபோது, ''அன்பகம் கலை கடந்த இரண்டு மாதங்களாக இங்கு வருவதே இல்லை. எங்கு இருக்கிறார் என்றும் எங்களுக்குத் தெரியாது!'' என்றனர். அன்பகம் கலையின் வழக்கறிஞர் சரவணனைத் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டோம். ''அண்ணனையே உங்களிடம் பேச வைக்கிறேன்'' என்று சொல்லி விட்டு அரைமணிநேரத்தில் கூப்பிடச் சொன்னார். மறுபடி அழைத்தபோதும், அதே பதிலைச் சொன்னார். அடுத்த நமது அழைப்புகளை அவர் எடுக்க வில்லை.இந்த விஷயத்தில் கலை விளக்கம் கொடுத்தால், பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம். இதனிடையே, 'அன்பகம் கலை தலைமறைவாக இருக்கிறார். வெளிநாட்டுக்குப் போய்விட்டார்’ என்றும் தி.மு.க. கட்சி வட்டாரத்தில் கிசுகிசுப்பு கிளம்பியுள்ளது.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ''தென் சென்னை மாவட்டத் தி.மு.க இளைஞர் அணிப் பிரமுகர் ஒருவரையும், கே.கே.நகர் பகுதியில் கட்சிப் பொறுப்பில் உள்ள நபர் ஒருவரையும் சமீபத் தில் தீவிரமாக விசாரித்தோம். அவர்கள் இருவரும் அன்பகம் கலைக்கு நெருக்கமானவர்கள். அவர்கள் கூறிய சில தகவல்கள், எங்களுக்கு உபயோகமாக இருந்தன. மிக விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்வோம். இதற்கு மேல் இப்போதைக்கு விரிவாக எதுவும் கூற இயலாது!'' என்று பொடி வைத்துப் பேசினர்.

கொலைக் குற்றவாளிகள் கைதானால்தான், காவல் துறையின் மரியாதை காப்பாற்றப்படும்.

- தி.கோபி விஜய்

படம்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism