Published:Updated:

“காலை உடைத்து... காயத்தில் மிளகாய்ப்பொடி தூவி”

“காலை உடைத்து... காயத்தில் மிளகாய்ப்பொடி தூவி”
பிரீமியம் ஸ்டோரி
“காலை உடைத்து... காயத்தில் மிளகாய்ப்பொடி தூவி”

அப்பாவிகளைச் சித்ரவதை செய்த போலீஸ்!பரிதாபம்

“காலை உடைத்து... காயத்தில் மிளகாய்ப்பொடி தூவி”

அப்பாவிகளைச் சித்ரவதை செய்த போலீஸ்!பரிதாபம்

Published:Updated:
“காலை உடைத்து... காயத்தில் மிளகாய்ப்பொடி தூவி”
பிரீமியம் ஸ்டோரி
“காலை உடைத்து... காயத்தில் மிளகாய்ப்பொடி தூவி”

‘விசாரணை’ திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு இரண்டு வயது குழந்தை, பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 நபர்களை 63 நாட்களாக போலீஸ் கஸ்டடியில் வைத்து வார்த்தைகளால் எழுதமுடியாத அளவுக்கு சித்ரவதை செய்த சம்பவம் காவல் துறையின் கொடூர முகத்தைக் காட்டியிருக்கிறது. மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள மொட்டைமலை பகுதியைச் சேர்ந்த ராஜன் என்கிற மொலையன், இவரது மனைவி வசந்தி. இவர்கள் ஊர் ஊராகச் சென்று பாசிகள் விற்பது, கத்தி, அரிவாள்மணைக்கு சாணை பிடிக்கும் தொழில் செய்துவருகிறார்கள். இவர்களின் மகள்கள், மருமகன்கள், பேரன்கள் ஆகியோரும் ஒன்றாக வசித்து வந்திருக்கிறார்கள்.

இவர்களை நாகர்கோவில் காவல் துறையினர் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி விசாரணை என்கிற பெயரில் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அள்ளிச்சென்று 63 நாட்களாகச் சித்ரவதைகள் செய்துவந்துள்ளனர்.

“காலை உடைத்து... காயத்தில் மிளகாய்ப்பொடி தூவி”

பாதிக்கப்பட்ட ராஜன் மகள் வள்ளியிடம் பேசினோம். “நாகர்கோவில் மண்டைக்காடு கிராமத்தில், அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவரின் அனுமதி வாங்கிக் கடற்கரை அருகில் இருந்த தென்னந்தோப்பில் உள்ள மண் திட்டில் தங்கினோம். 10 நாட்கள் வேலைசெய்த பிறகு பங்குனித் திருவிழாவுக்கு மதுரைக்கு வந்து ஒரு வாரம் தங்கி இருந்தோம். பிறகு மீண்டும் மண்டைக்காடு சென்றோம். அதன் பிறகு இரண்டு நாள் கழித்து மாலை ஐந்து மணிக்கு வெள்ளை நிறக் காரில் நான்கு பேர் வந்தார்கள். ‘உங்களை விசாரிக்கணும். வண்டியில் ஏறுங்க’ என்றார் ஒருவர். நான், ‘நீங்க யார்...  எதுக்கு எங்களை வண்டியில் ஏறச் சொல்றீங்க’ என்று கேட்டேன். ‘நாங்கள் போலீஸ்’ என்றவரிடம், நான் எனது சங்க அடையாள அட்டையைக் காட்டினேன். அதற்கு அவர் அசிங்கமாகத் திட்டி வண்டியில் ஏறச் சொன்னார். என்னுடன் எல்லோரையும் வண்டியில் ஏற்றிச் சென்று காவலர்கள் ஓய்வறையில் அடைத்தனர். எங்களிடம் இருந்த சாணை பிடிக்கும் வண்டி, நாங்கள் அணிந்திருந்த தங்கத் தோடு, தாலி, மூக்குத்தி, தாயத்து, மாட்டல், மூவாயிரம், பாதம் மரியாகிட்ட இருந்த இரண்டாயிரம், எங்கம்மாகிட்ட இருந்த மூவாயிரம், செல்போன் என எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர். 

நான்கு ஆம்பளைகளையும் ஜட்டியுடன் காலில் விலங்குபோட்டுத் தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்தார்கள். எங்கப்பாவுக்கு மூலம் இருந்தது. அந்த இடத்தில் அடித்தனர். கட்டி உடைந்து காயம் ஆனது. மிளகாய்ப் பொடி வாங்கி வந்து காயத்தில் தூவினர்.  என் அப்பா வலியால் துடித்தார்.  என் கணவரைக் காலை நீட்டச்சொல்லி பிளாஸ்டிக் பைப்பால் ஓங்கி அடித்தனர். காயத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவினார்கள்.

‘எங்கடா திருட்டு நகைகள்’ என்று கேட்டு அடித்தனர். திருடியதாக ஏற்றுக்கொள்ளும்படி சொல்லி அடித்தனர். என்னை, ‘உங்கப்பனுடன் படு’ என்று மிரட்டினர். என் சீலையை உருவி ஜாக்கெட்டுடன் நிற்கவைத்து என் கணவர், என் பிள்ளைகள் முன்னிலையில் என் மார்பகத்தை இரண்டு போலீஸார் அமுக்கினர். ஒரு மாத காலமாய் இதுதான் நடந்தது. வெளியே சொல்ல முடியாத அளவுக்குப் பாலியல் தொல்லைகள் நடந்தன.

எங்களுடன் இருந்த கோபால், ராஜன், எனது கணவர் செல்வராஜ், ராஜன் ஆகியோரை ஒரு டெம்போ வேனில் அழைத்துப் போய், மதுரை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், உடன்குடி, ராமநாதபுரம், கடலாடி, பரமக்குடி ஆகிய ஊர்களில் உள்ள அடகுக் கடைகளில் எங்க வீட்டு ஆம்பளைங்க திருட்டு நகைகளை விற்றதாகப் பொய் சொல்லச் சொல்லி அடகுக் கடைக்காரர்களிடம் இருந்து கிலோ கணக்கில் நகைகளை அள்ளிவந்தார்கள். அதில் பாதிக்கு மேல், வரும்போதே போலீஸார் பங்கு போட்டுக்கொண்டார்கள் என்று எனது கணவர் சொன்னார். பகலில் சின்னப் பசங்க தூங்கிவிழுவார்கள். அப்போது பக்கத்து டீக்கடையில் இருந்து சுடுதண்ணி வாங்கிவந்து அவர்கள் மீது ஊத்தினார்கள். என்னைத் தூங்கவிடாமல் பார்த்துக்கச் சொல்லி அசிங்கமாகத் திட்டினார்கள்” என்று கதறினார்.   
   
மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பி இருக்கிறது.

மக்கள் கண்காணிப்பகம் சார்பில் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தபோது, ராஜன் செல்வராஜ், கோபால் உள்பட நான்கு பேர் மீது திருட்டு வழக்குப் போட்டுவிட்டு, பெண்கள், சிறுவர்களை மட்டும் வெளியேவிட்டது போலீஸ்.

இதுகுறித்து பேசிய ஹென்றி திபேன், “இந்த விஷயத்தில் சார்பு ஆய்வாளர் விஜயன்தான் மூளையாகச் செயல்பட்டுள்ளார். சமையல்காரராகப் பணியில் சேர்ந்த விஜயன், வீரப்பன் வேட்டைக்குழுவில் இருந்ததால், டபுள் ப்ரமோஷன் ஆகி எஸ்.ஐ ஆனவர். இவர் மீது  சில வழக்குகள் உள்ளன. 2008-ல் மதுரையில்  நீதியரசர் சுரேஷ் கலந்துகொண்ட பொது விசாரணை நிகழ்ச்சியில் ஒருவரைக் கடத்த முயன்று, பிரச்னையாகி நீதிபதியிடம் மன்னிப்புக் கேட்டார். அப்பாவிகளைப் பிடிப்பது, அவர்களிடம் ‘இந்தக் கடையில்தான் கொடுத்தேன்’ என்று பொய் சொல்லச்சொல்லி, அடகுக் கடைக்காரர்களிடம் நகைகளைப் பறிப்பதைத் தொழிலாக வைத்திருக்கிறார். இதற்கு சில அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்” என்றார்.

நாகர்கோவில் சார்பு ஆய்வாளர் விஜயன், “அவர்கள் பொய் சொல்கிறார்கள். நீங்கள் இதுபற்றி எஸ்.பி-யிடம் கேளுங்கள்’’ என்று முடித்துக் கொண்டார்.

எஸ்.பி தர்மராஜ், “அவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 63 நாட்கள் அவர்களிடம் விசாரணை செய்யவில்லை. திருடியதால் அவர்களை விசாரித்து சிறையில் அடைத்தோம்” என்றார்.

சாமானியர்கள் சிக்கினால் எப்படி நடத்துவார்கள் என்பதற்கு உதாரணம் இது!

- சண்.சரவணக்குமார்
படங்கள்: ரா.ராம்குமார், ஈ.ஜெ.நந்தகுமார்