Published:Updated:

தொடரும் யானைக் கொலைகள்... குற்றவாளி யார்?

தொடரும் யானைக் கொலைகள்... குற்றவாளி யார்?
பிரீமியம் ஸ்டோரி
தொடரும் யானைக் கொலைகள்... குற்றவாளி யார்?

Special ஸ்டோரி!அலசல்

தொடரும் யானைக் கொலைகள்... குற்றவாளி யார்?

Special ஸ்டோரி!அலசல்

Published:Updated:
தொடரும் யானைக் கொலைகள்... குற்றவாளி யார்?
பிரீமியம் ஸ்டோரி
தொடரும் யானைக் கொலைகள்... குற்றவாளி யார்?
தொடரும் யானைக் கொலைகள்... குற்றவாளி யார்?

கொலை, கொள்ளைக்கு அடுத்தபடியாக யானைகள் மரணம் என்பது தமிழ்நாட்டில் முக்கியச் செய்திகளாக மாறியிருக்கின்றன. ரயில்கள் உள்ளிட்ட வாகனங்கள் மோதுவதால் மட்டுமின்றி, வனத்துறையினரின் அலட்சியத்தாலும் யானைகள் மரணம் அடைகின்றன. சமீபத்தில், கோவை வனப் பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள யானைகள் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. யானைகள் ஊருக்குள் வருகின்றன, விளைநிலங்களை நாசப்படுத்துகின்றன என்பது பெரும் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது.

வனம் விட்டு வனம்!

ஒரு யானையின் வசிப்பிடம், 500 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகம். உலகில் யானையைப்போல வேறு எந்த உயிரினமும் இவ்வளவு பெரிய வாழ்விடத்தைக் கொண்டதில்லை. 250 கிலோ உணவு, 150 லிட்டர் தண்ணீர் ஆகியவை ஒரு வளர்ந்த யானையின் குறைந்தபட்சத் தேவை. அதனால்தான், மற்ற உயிரினங்களைப்போல தங்களுக்கென தனி வாழிடங்களை யானைகள் வைத்துக்கொள்வதில்லை. அதிகபட்சமாக 25 நாட்கள்வரை மட்டுமே ஓரிடத்தில் தங்கும். பின்னர், உணவு தேடி வேறு இடத்துக்குச் சென்றுவிடும். எந்த மாதத்தில் எங்கு உணவு கிடைக்கும் என்ற விவரங்களை யானைகள் அறிந்திருக்கும். ஒரு வனத்தைவிட்டு இன்னொரு வனத்துக்கு யானைகள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்துதான் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. இவ்வாறு ஒரு வனத்துக்கும் இன்னொரு வனத்துக்கும் செல்லக்கூடிய பாதைகள்தான் ‘எலிபென்ட் காரிடார்’ என அழைக்கப்படும் யானை வலசைப் பாதைகள்.

ஆக்கிரமிப்பு அராஜகங்கள்!

“காடுகளை அழித்து நெடுஞ்சாலை அமைத்தல், காடுகளை விளைநிலமாக மாற்றுதல் என அரசின் சில திட்டங்களால் யானைகளின் வலசைப் பாதைகள் துண்டாடப்பட்டன. வனம் பெரிதாகப் பாதிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம், காடுகளில் உருவான கட்டடங்கள்தான். குறிப்பாக, கோவை வனப்பகுதியில் ஆன்மிகம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றின் பெயரால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வனத்தை வளைத்துள்ளன. தமிழகம், கேரளா வனப் பகுதிகளில் யானைகள் காலம் காலமாகப் பயன்படுத்திவந்த  பாதைகள் தேயிலைத் தோட்டங்களாக, காபி தோட்டங்களாக உருவெடுத்துள்ளன. சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையம், வனக் கல்லூரி என வனப் பகுதிகளை அரசும் ஆக்கிரமித்துள்ளது” என்று குற்றம்சாட்டுகிறார் பசுமை இயக்கத்தைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் மேக் மோகன்.

யானை - மனித மோதல்!

இந்தியாவில் 80-க்கும் அதிகமான யானை வழித்தடங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சராசரியாக அரை கிலோ மீட்டர் அகலம்கொண்டதாக இந்த யானைகளின் வழித்தடப் பாதைகள் இருக்கும். மற்ற காடுகளுடன் இணைக்கும் இந்தப் பாதைகள், யானைகள் தன் பிற குழுவினை சந்திக்கவும் பயன்படுத்திக் கொள்கின்றன. வன ஆக்கிரமிப்பு காரணமாக, யானைகள் செல்லும் பாதைகள் மறிக்கப்பட்டதால் யானைகள் திசை மாறுகின்றன. வனத்தை ஒட்டிய நிலங்களில் விளையும் வாழை, சோளம், கரும்பு போன்ற உணவுகளை உண்டு ருசி பார்த்துவிடுகின்றன. எனவே, அந்த விளைநிலங்களுக்குள் அடிக்கடி நுழைகின்றன. அதனால்தான், பாதிக்கப்படும் மக்களுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

தொடரும் யானைக் கொலைகள்... குற்றவாளி யார்?

ரயில் எமன்!

“2008 பிப்ரவரி 4-ம் தேதி அதிகாலையில், மதுக்கரை அருகே குரும்பப்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் யானைகள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தன. அப்போது, அந்த வழியாகச் சீறியபடி வந்த ரயில் ஒன்று யானைக் கூட்டத்தின் மீது மோதியது. அதில், இரு ஆண் யானைகளும், ஒரு பெண் யானையும் தூக்கி வீசப்பட்டன. அந்த இடத்தில் ரயில் மோதி யானைகள் இறப்பது அதுதான் முதல்முறை. ‘இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்’ என வன ஆர்வலர்கள் கண்டனக் குரல் எழுப்பினர். உடனே, யானைகள் நடமாடும் பகுதியில் ரயிலின் வேகத்தைக் குறைப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால், அது அறிவிப்போடு நின்றுபோனது. எனவேதான், ரயில் மோதி அடுத்தடுத்து யானைகள் மரணம் அடைகின்றன. யானைகள் நடமாடும் பகுதி எனச் சொல்லப்பட்டு எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்ட இடத்தில் ரயிலின் வேகம் மணிக்கு 30 கி.மீ என இருக்க வேண்டும். ஆனால், அந்த இடத்தில் 80 கி.மீ வேகத்தில்தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன” என்று குற்றம்சாட்டுகிறார் வன உயிரின ஆர்வலர் ஜலாலுதீன்.

ஆபத்தான மயக்க ஊசி!

இந்த நிலையில்தான், ஊருக்குள் புகுந்த மதுக்கரை மகராஜ் என்ற யானையை வனத் துறையினர் மயக்க ஊசி போட்டுப் பிடித்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து அந்த யானை இறந்துவிட்ட சோகமும் நிகழ்ந்தது. இதேபோல, கோவையில் 2011-ம் ஆண்டு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனத்தில் யானை ஒன்றுக்கு ரேடியோ காலர் கருவி பொறுத்த வனத்துறை முயன்றது. அதற்காக யானைக்கு மயக்க ஊசி போட்டனர். அப்போது, அந்த யானை திமிறிக் கீழே விழுந்து இறந்தது.
 
“யானையின் எடை நான்கு டன் இருக்கும் என நினைத்து சைலேஜின் என்ற 5 மில்லி அளவு மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தினோம். ஆனால் சிறிது நேரம் கழித்துத்தான் யானையின் எடை 3.5 டன் என்பது தெரிந்தது. மயக்க ஊசி செலுத்தியவுடன் ஓடிச் சென்ற அந்த யானை சறுக்கலான பள்ளத்தில் விழுந்தது. மாற்று மருந்து கொடுத்தும் பலனில்லை. யானைக்கு மூளைச்சாவு ஏற்பட்டது” என்றனர் அதிகாரிகள்.

கடந்த மாதம் வனத்துறையினரால் மயக்க மருந்து செலுத்திப் பிடித்துச் செல்லப்பட்ட மதுக்கரை மகராஜ் என்ற ஆண் யானை இறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “வனத்துறையின் அலட்சியமே யானை உயிரிழப்புக்குக் காரணம். அதிக அளவில் மயக்க மருந்து செலுத்தியும், கராலில் அடைத்து சித்ரவதை செய்ததுமே யானை உயிரிழக்கக் காரணம்” என குற்றம்சாட்டுகிறார்கள் வன உயிரின ஆர்வலர்கள்.

அறிவியல் அணுகுமுறை!

வனங்கள் ஆக்கிரமிப்பு, கேரளாவில் ரயில் தண்டவாளத்தை ஒட்டி வேலி அமைத்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் ஆரம்பித்த இந்தப் பிரச்னை, சமீபகாலமாக தீவிரமடைந்து வருகிறது. இதற்கு அறிவியல் ரீதியான அணுகுமுறைகள்தான் தீர்வு என்று சொல்லும் சூழலியலாளர்கள், “வனத்தை ஒட்டிய 500 மீட்டர் பகுதியை சூழல் சார்ந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும், குறுகலாக இருக்கும் ரயில் பாதையை 10 மீட்டருக்கு அகலப்படுத்தப் வேண்டும், யானைகள் கடக்கும் பகுதிகளில் 40 கி.மீ. வேகத்துக்குள் ரயில்கள் இயக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும், வனத்தையொட்டிய விளைநிலங்களில் யானைகளுக்குப் பிடித்தமான உணவுகள் விளைவிப்பதைத் தவிர்க்க வேண்டும், யானை வலசைப்பாதை என கண்டறியப்பட்டுள்ள கல்லாறு பகுதியில் யானைகள் எளிதில் சாலையைக் கடக்க வசதி செய்துதர வேண்டும், மின்சார வேலிகள் பயன்படுத்துவதை முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள் சூழலியலார்கள்.

இதையெல்லாம் அரசு செய்யுமா?

- ச.ஜெ.ரவி
படங்கள்:  தி.விஜய்

18 நாட்கள்... 8 யானைகள்!

*  ஜூன் 20 - கோவை மதுக்கரையில் ரயில் மோதி பெண் யானை ஒன்று இறந்தது.

*  ஜூன் 21 - கோவை மதுக்கரையில் வனத்துறையால் பிடிக்கப்பட்டு காரலில் அடைக்கப்பட்ட மகராஜ் என்ற ஆண் யானை இறந்தது.

*  ஜூன் 25 - காரமடை பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்தது

(யானை உடலில் புல்லட் காயம் இருந்ததாக கேரள வனத்துறையும், யானைகளுக்கு இடையே மோதலால் காயம் ஏற்பட்டதாக தமிழ்நாடு வனத்துறையும் சொல்கின்றன.)

*  ஜூன் - 30 மேட்டுப்பாளையத்தில் 50 அடி பள்ளத்தில் விழுந்து குட்டி யானை ஒன்று இறந்தது.

*  ஜூலை 3 - சிறுமுகையில் யானைகளுக்கு இடையே சண்டையால் காயமடைந்த ஆண் யானை  ஒன்று இறந்தது.

*  ஜூலை 5 - நரசிபுரத்தில் பெண் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்து இறந்தது.

*  ஜூலை 6 - ஓசூரில் பஸ் மோதி ஒரு யானை இறந்தது.

*  ஜூலை 9 - வாளையாறு பகுதியில் ரயிலில் அடிபட்டு ஒரு யானை இறந்தது.

எத்தனை யானைகள்?

இந்தியாவில் உள்ள யானைகளின் எண்ணிக்கையில் சரி பாதிக்கும் மேல் தென்னிந்தியாவில்தான் உள்ளன. குறிப்பாக, நம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில். தமிழகத்தில் சுமார் 5,000 யானைகள்வரை இருக்கலாம் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

மீடியா காரணமா?

வரிசையாக யானைகள் இறந்ததால் ஏற்பட்ட சர்ச்சைக்கு மீடியாவே காரணம் என்று வனத்துறை அதிகாரிகள் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை வன உயிரினப் பாதுகாவலர் வி.கே.மல்கானி, “மூன்று யானைகள் இறந்த செய்தியைப் பெரிதாக வெளியிடுகிறீர்கள். 2013-ம் ஆண்டு முதல் இப்போதுவரை எட்டு யானைகளைப் பிடித்துள்ளோம். அவற்றில், மகாராஜ் யானை மட்டுமே இறந்துள்ளது. யானையைப் பிடித்தவுடன் அதைக் கொண்டாடிய ஊடகங்கள், இப்போது யானை இறந்தவுடன் எங்களைக் கண்டிக்கின்றன” என்றார் எரிச்சலுடன். ஆனால், 2013-க்கு முன்னர் மயக்க ஊசியால் யானைகள் உயிரிழந்தது பற்றி அவர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

தொடரும் வேட்டை!


சந்தன வீரப்பன் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் யானைகள் வேட்டை குறைந்து இருப்பதாகச் சொல்லப்பட்டது. யானைகளை வேட்டையாடுவது தொடரவே செய்கிறது. “கடந்த ஆண்டு இறுதியில் கேரளா வனத்தில் வேட்டைக்காரர்கள் 5 பேரை கேரளா வனத் துறையினர் போலீஸார் கைதுசெய்தனர். அவர்கள், 33 யானைகளை வேட்டையாடியது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது. “80 யானைகள்வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஊட்டி, கல்லார், கோத்தகிரி, சத்தியமங்கலம் வனங்களில் மட்டும் குறைந்தபட்சம் 15 யானைகள் வேட்டையாடப்பட்டன என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கேரளா வனத்துறை கூறியது.

கும்கி ஆக்குவது எப்படி?


காட்டு யானைகளைப் பிடித்து கும்கியாகப் பழக்குவது பெரும் சித்ரவதை என்று குமுறுகிறார்கள் விலங்கின ஆர்வலர்கள். அசாத்திய வலிமையுடன் வனங்களில் வலம் வரும் யானைகளை அடிமைகளாக மாற்றுவது அவற்றின் இயல்பைக் குலைக்கும் முயற்சி. பிடிபட்ட யானையைச் சொல்பேச்சு கேட்க வைப்பதற்கு, கராலில் அடைத்து வைக்கிறார்கள். 10 நாட்களுக்கு உணவு கிடையாது. பின்னர் கரும்பு, வெல்லம் என இனிப்புகளாகக் கொடுத்து அதைப் பழக்கப்படுத்துவார்கள். பாகன் சொல்லும் ஒரு வேலையைச் செய்தால் ஒரு கரும்பு அல்லது ஒரு வெல்லம் என பிஸ்கெட்டை காட்டி நாயைப் பழக்குவதுபோலப் பழக்குவார்கள். சொல்வதைக் கேட்டால் கரும்பு, வெல்லம். இல்லையென்றால், சித்ரவதைதான். இப்படியே சுமார் 50 நாட்கள் கராலிலேயே (மரக்கூண்டு) இருந்து அடிமையாகப் பழக்கப்படுத்தப்படும்.

மதுபாட்டில்கள்!


கோவை, நீலகிரி, சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் ரிசார்ட்கள் எனும் தங்கும் விடுதிகள் உள்ளன. புத்தாண்டு, பிறந்தநாள், விடுமுறை தினம் எனப் பல கொண்டாட்டங்கள் அங்கு நடக்கின்றன. அப்போது, ஹை டெசிபலில் சத்தம் எழுப்பி அந்தப் பகுதியின் அமைதியைக் குலைக்கிறார்கள். மதுபாட்டில்களை வனத்துக்குள் வீசி எறிகிறார்கள். அந்த பாட்டில்களை மிதிப்பதால் யானையின் காலுக்குள் கண்ணாடித் துண்டுகள் பாய்ந்து, செப்டிக் ஆகி யானைகள் இறக்கின்றன.