Published:Updated:

கொலைக்கு பழக்கப்படும் சிறுவர்கள்! - டெல்டா பயங்கரம்!

கொலைக்கு பழக்கப்படும் சிறுவர்கள்! - டெல்டா பயங்கரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொலைக்கு பழக்கப்படும் சிறுவர்கள்! - டெல்டா பயங்கரம்!

அலசல்

கொலைக்கு பழக்கப்படும் சிறுவர்கள்! - டெல்டா பயங்கரம்!

முறுக்கு மீசையும், ஆஜானுபாகு தோற்றமும் கொண்ட தாதாக்கள் வெடிகுண்டு, வீச்சரிவாளுடன் வலம் வந்த காலம் மாறிப்போய் இப்போது அரும்பு மீசைச் சிறுவர்கள் ஆயுதங்களுடன் உலா வரும் காட்சிகளைக் கண்டு டெல்டா பகுதி அச்சத்தில் உறைந்திருக்கிறது.

  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தி.மு.க நகரச் செயலாளர் தங்க மனோகரன் கடந்த 3-ம் தேதி கொடூரமான முறையில் பட்டப்பகலில் மக்கள் நடமாடும் பகுதியில் கொலை செய்யப்பட்டார். அவரை அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்த ஒரு கும்பல், பயங்கரக் கூச்சலை எழுப்பியவாறு மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் சென்றதாகச் சொல்கிறார்கள். வாகனச் சோதனையின்போது, போலீஸாரிடம் கொலையாளிகள் பிடிபட்டுள்ளனர். அவர்களைக் கண்டு போலீஸாரே அதிர்ந்து போயிருக்கிறார்கள். சிக்கிய 12 பேரில் ஒன்பது பேர் 18 வயதுக்குக் குறைந்தவர்கள். மூன்று பேர்தான் 21 வயதுடையவர்கள். 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் என்பதால், ஒன்பது பேரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.

இந்தச் சிறுவர்களின் பின்னணி குறித்து பட்டுக்கோட்டையில் சிலரிடம் விசாரித்தோம். “இந்தச் சிறுவர்கள் பட்டுக்கோட்டையில் பாக்யா நகர், இந்திரா நகர், தேரடி தெரு, பட்டுநூல்காரத் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள். போஸ்டர் ஒட்டுவது, ஃபிளக்ஸ் பேனர் கட்டுவது போன்ற வேலைகளைச் செய்பவர்கள். இவர்கள் மீது அடிதடி போன்ற வழக்குகள் உள்ளன” என்று சொன்னார்கள்.

வழக்கறிஞர் நல்லதுரை, “வறுமையில் உள்ள இளைஞர்களையும், சிறார்களையும் சுயநலவாதிகள் சிலர் தங்களுக்கான ஆயுதங்களாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள், ஆரம்பத்தில் சிறுசிறு திருட்டுச் சம்பவங்கள், அடிதடி போன்றவற்றில் ஈடுபட்டு போலீஸில் சிக்குவார்கள். இவர்களை ஜாமீனில் எடுத்து சென்டிமென்ட்டாகப் பேசி தினமும் செலவுக்குக் கொஞ்சம் பணம் கொடுப்பார்கள். மேலும், இவர்களைக் கஞ்சா போன்ற போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆக்குவார்கள். ஆகவே, அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய மனநிலைக்கு இந்தச் சிறுவர்கள் வந்துவிடுகிறார்கள். தங்க மனோகரன் கொலை வழக்கில் கைதாகி, சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்ட அனைவரும் தந்தையோ, தாயோ இல்லாதவர்கள். சரியான வழிகாட்டுதலும், ஆதரவும் இல்லாததால் வழிதவறியவர்கள்” என்றார்.

கொலைக்கு பழக்கப்படும் சிறுவர்கள்! - டெல்டா பயங்கரம்!

இந்த விவகாரம் குறித்து காவல் துறை வட்டாரத்தில் பேசியபோது, “கொலை எப்படிச் செய்யப்பட்டு உள்ளது என்பதைவைத்து அதை எந்த குரூப் செய்தது என்று பிரிப்போம். சில குரூப், தலையில் வெட்டும். சில குரூப், கழுத்தில் வெட்டும். புதிதாகக் கொலையில் ஈடுபடுவோருக்குச் சரியாக வெட்டத் தெரியாது. கொலை செய்யப்பட்ட தங்க மனோகரன் முகம் அப்படித்தான் சிதைக்கப்பட்டு இருந்தது. எனவே, புதிதாக யாரோ ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டுபிடித்தோம். வாகனச் சோதனையின்போது இந்தச் சிறுவர்கள் எங்களிடம் சிக்கினார்கள். அவர்களிடம் அரிவாள் இருந்தது. கஞ்சா போதையில் இருந்த அவர்கள், ‘நாங்கள்தான் தங்க மனோகரனைக் கொன்றோம்’ என்று சொன்னார்கள். அவர்களிடம், ‘எதற்காகக் கொலை செய்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘கொலையைச் செஞ்சோம். எதுக்காகச் செஞ்சோம் என்றெல்லாம் தெரியாது’ என்று சொன்னார்கள்” என்று சொல்லிப் பதறவைக்கிறார்கள். 

பட்டுக்கோட்டை நகரைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, “அரசியல்வாதிகளின் ஆசிபெற்ற சில ரவுடிகள்தான், சிறுவர்களையும் இளைஞர்களையும் டீமில் சேர்த்துக்கொண்டு அடிதடி, கொலையில் ஈடுபடுகிறார்கள். பட்டுக்கோட்டையின் மையப்பகுதியில் அழகிரி மார்க்கெட் உள்ளது. அந்தப் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் சிறுவர்களும், இளைஞர்களும் மது, கஞ்சா எனப் போதையில் பெரும் ரகளையில் ஈடுபடுகிறார்கள். அதுகுறித்து பல முறை போலீஸுக்கு புகார் கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை” என்றார்கள்.

தங்க மனோகரன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி என்று கருதப்படும் ராஜா தலைமறைவாக இருக்கிறார். இவரது தந்தை சீனி பன்னீர்செல்வம் தி.மு.க-வைச் சேர்ந்தவர். அவரை தங்க மனோகரன் உள்ளிட்ட சிலர் 1992-ல் உட்கட்சிப் பூசலால் கொலை செய்தனர் என்றும் இப்போது, தங்க மனோகரனை ராஜா கொலை செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

கொலைவாள், ரவுடிகள் கையில் இருந்து சிறுவர்கள் கைக்கும் கைமாறுவதைக் காட்டுகிறது டெல்டா சம்பவம். இது நாட்டுக்கு நல்லதல்ல!

- ஏ.ராம்
படங்கள்: கே.குணசீலன்