Published:Updated:

“எம்.டி சீட்டுக்காக என் மகனை கொலை செய்திருக்கிறார்கள்!”

“எம்.டி சீட்டுக்காக என் மகனை கொலை செய்திருக்கிறார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“எம்.டி சீட்டுக்காக என் மகனை கொலை செய்திருக்கிறார்கள்!”

சி.பி.ஐ. விசாரணை கேட்டு தந்தை கண்ணீர்...குற்றம்

“நிச்சயம் இது தற்கொலை அல்ல...

எம்.டி சீட்டுக்காக நடந்த கொலை. இதில், தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டு பிடித்துத் தண்டிக்க வேண்டும். இதுதொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கலங்கியபடி பேசினார், டெல்லியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த மருத்துவ மாணவர் சரவணனின் தந்தை கணேசன்.

“எம்.டி சீட்டுக்காக என் மகனை கொலை செய்திருக்கிறார்கள்!”

திருப்பூர் வெள்ளியங்காடு கோபால் நகரைச் சேர்ந்த பனியன் தொழிலாளியான கணேசனின் மகன் சரவணன். இவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.டி படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் சேர்ந்து 10 நாட்களில் கடந்த 10-ம் தேதி மர்மமான முறையில் அவரது அறையில் இறந்துகிடந்தார். அந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தினர் இடிந்துபோயினர். டெல்லி சென்று சரவணனின் உடலோடு திருப்பூர் திரும்பினர். பெரும் துயரத்தில் இருந்த கணேசனிடம் பேசினோம். “சரவணனுக்கு எய்ம்ஸ்ல ஜெனரல் மெடிசன்ல மேற்படிப்புப் படிக்கணும்னு ரொம்ப ஆசை. கடந்த வருஷம் ஜனவரி மாசம் எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு எழுதினான். சீட் கிடைச்சது. ஆனா, அவன் விரும்பின ஜெனரல் மெடிசன் கிடைக்கலை. பேத்தாலஜிதான் கிடைச்சது. 2 மாசம் படிச்சவன், தொடர்ந்து படிக்கலை. ஜெனரல் மெடிசன்தான் படிக்கணும்னு சொல்லி, திரும்பவும் இந்த வருஷம் நுழைவுத்தேர்வு எழுதி, 47-வது ரேங்க் வாங்கியதால் ஜெனரல் மெடிசன் கிடைச்சது. நல்லாப் படிச்சு மருத்துவத் துறையில சாதிக்கணுங்கறது அவன் ஆசை. அதுக்குள்ள இப்படிப் பண்ணீட்டாங்களே.

“எம்.டி சீட்டுக்காக என் மகனை கொலை செய்திருக்கிறார்கள்!”

இது நிச்சயம் தற்கொலை இல்லை. எம்.டி சீட்டுக்காக நடந்த கொலைன்ணு நாங்க சந்தேகப்படுறோம். என் பையன் கலந்தாய்வுக்குப் போனப்ப, அங்கு வந்திருந்த இன்னொரு பையன், ‘இந்த ஜெனரல் மெடிசன் சீட் எனக்குத்தான் கிடைக்கும். உனக்குக் கிடைக்காது. நீ வேற சீட் வாங்கிட்டுப் போயிடு’னு சொல்லியிருக்கான். சரவணனுக்கு முன்னாடியே எய்ம்ஸ் கோட்டால அந்தப் பையனைக் கூப்பிட்டிருக்காங்க. ஆனா விதிமுறைகளின்படி ஓ.பி.சி கோட்டாவில சரவணனுக்குதான் சீட் கிடைச்சது. சரவணன் ஒரு வேளை இந்தப் படிப்பை எடுக்கலைனா அவனுக்குத்தான் போயிருக்கும். இதனால அந்தப் பையனுக்கு சீட் கிடைக்கலை. அந்த சீட் தனக்குக் கிடைக்கணும்னு, என் பையனை இப்படிச் செஞ்சிருப்பாங்கனு சந்தேகப்படுறேன். சரவணனுக்கு நடந்தமாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது” என்றார் கண்ணீருடன்.

ஆரம்பத்தில் டாக்டர் சரவணன் தற்கொலை செய்துகொண்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக டெல்லி போலீஸார் சொல்லி வந்தனர். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சரவணன் மரணம் தற்கொலை அல்ல என்பது உறுதியாகி உள்ளது. இதனால் கொலை வழக்காக மாற்றி விசாரணையைத் தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

“எம்.டி சீட்டுக்காக என் மகனை கொலை செய்திருக்கிறார்கள்!”

‘‘சரவணனின் வலது கையில் விஷ ஊசி போடப்பட்டு உள்ளது. ஆனால் சரவணன், வலது கைப்பழக்கம் உள்ளவர். வலது கைப்பழக்கம் உள்ளவர்கள், இடது கையால் நரம்பு ஊசியைப் போட முடியாது. நரம்பு ஊசியைச் செலுத்த கையில் வென்பிலான் பொருத்தப்பட்டிருக்கிறது. தற்கொலை செய்துகொள்பவர் வென்பிலான் பொருத்த வேண்டிய அவசியம் இல்லை. சரவணன் இறந்த இடத்தில் ஊசியில் நிரப்பப்பட்ட மருந்து புட்டியோ, அதன் பாகங்களோ இல்லை. தற்கொலை செய்து கொள்பவர் உளவியல் ரீதியாக இவ்வளவு முன் தயாரிப்புடன் செல்வதற்கு வாய்ப்பில்லை. சரவணன் இறந்துகிடந்தபோது அவரது அறைக்கதவு திறந்திருந்தது. டெல்லி போன்ற அறிமுகமில்லாத இடத்தில் சரவணன், கதவைத் திறந்துவைத்துத் தூங்குவதற்கோ, தற்கொலைக்கு முயல்வதற்கோ வாய்ப்பு இல்லை. எய்ம்ஸ் மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் மூன்று கலந்தாய்வுகள் நடக்கும். இதில், 2 கலந்தாய்வுகள் முடிந்துவிட்டன. அடுத்த கலந்தாய்வு நடக்கவிருப்பது 24-ம் தேதி. அதுவரை காலியாகும் இடங்களுக்கு சேர்த்துக் கலந்தாய்வு நடக்கும். அதாவது, சரவணன் படிப்பை ஏற்காவிட்டால் அவரது இடம் இன்னொருவருக்குப் போகும். எனவே, இது சீட்டுக்கான போட்டியில் நடந்த கொலையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்” என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

எத்தகைய மனிதர்களிடம் மருத்துவத் தொழில் போகிறது பாருங்கள்!

- ச.ஜெ.ரவி