Published:Updated:

“ஆட்சியே எங்களோடதுதான்... மரியாதையா போயிடு!”

“ஆட்சியே எங்களோடதுதான்... மரியாதையா போயிடு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஆட்சியே எங்களோடதுதான்... மரியாதையா போயிடு!”

இன்ஸ்பெக்டரை மிரட்டினாரா ஆளும்கட்சி பிரமுகர்?அடாவடி

ளும் கட்சிப் பிரமுகர் ஒருவர், போலீஸ் இன்ஸ்பெக்டரைத் தாக்கியதாகச் சொல்லப் படுவதுதான் வேலூரின் தற்போதைய பரபரப்புச் செய்தி. தாக்குதலுக்கு உள்ளானவர் என்று சொல்லப்படுபவர் சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாண்டி. தாக்கியதாகச் சொல்லப்படுபவர் அ.தி.மு.க பிரமுகர் ஜி.ஜி.ரவி. இவரைக் கட்சியைவிட்டு நீக்கி இருக்கிறார் ஜெயலலிதா.

“ஆட்சியே எங்களோடதுதான்... மரியாதையா போயிடு!”

என்ன நடந்தது என்று இன்ஸ்பெக்டர் பாண்டியிடம் கேட்டோம். “கடந்த 16-ம் தேதி இரவு வேலூர் தாண்டி பெருமுகைங்கிற ஊர்ல ரோந்துப் பணியில இருந்தேன். அப்ப ஒரு லாரி எங்களைப் பார்த்ததும் வேகமா ரிவர்ஸ் எடுத்து ஜி.ஜி.ஆர் பொறியியல் கல்லூரிக்குள்ள நுழைஞ்சுது. நானும் டிரைவரும் பின் தொடர்ந்து போனபோது, எங்களை காலேஜுக்குள் அனுமதிக்கலை. வாட்ச்மேன்கிட்ட வாக்குவாதம் பண்ணி உள்ளே போனேன். ஈர மணலோட அந்த லாரி நின்னுச்சு. காலேஜ் ஓனரான ரவி, கத்திக்கிட்டே வந்து என் சட்டையைப் பிடிச்சார். ‘என் லாரியைப் மடக்க என் இடத்துக்கே வர்றியா? ஆட்சியே எங்களோடதுதான். மரியாதையா போய்டு’னு சொன்னார். ‘லாரியையும் டிரைவரையும் அனுப்புங்க’னு சொன்னேன். உடனே ரவி, என் சட்டையைப் புடிச்சு அடிக்கப் பாய்ந்தார். அவர்கூட நடந்த போராட்டத்துல என் நேம் பேட்ஜ் உடைஞ்சு கை, கழுத்துல சிராய்ப்பாய்டுச்சு. டி.எஸ்.பி தலைமையில வந்த போலீஸார் எங்களை மீட்டனர்” என்றார்.

“ஆட்சியே எங்களோடதுதான்... மரியாதையா போயிடு!”

ஆனால், இதனை முழுமையாக மறுக்கிறார் ஜி.ஜி.ரவியின் வழக்கறிஞர் ரமேஷ். “ரவி முறையாக அனுமதி வாங்கித்தான் மணல் அள்ளுகிறார். ரவியைக் கடந்த ஆண்டு கொலை செய்ய முயற்சி நடந்தது. அவருக்குக் கொலை மிரட்டல் இருப்பதால், மாவட்ட காவல் துறையிடம் பாதுகாப்புத் தர வேண்டும் என்று மனுப் போட்டோம். ஆனால், பாதுகாப்பு வழங்கவில்லை. அதனால், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். பாதுகாப்பு வழங்கச் சொல்லித் தீர்ப்பு வந்தது. தீர்ப்பு வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. ஆனால், பாதுகாப்புத் தராத போலீஸார்,  இப்படிப் பொய்யான வழக்குப் போட்டு அவரைச் சிறையில் அடைத்து உள்ளார்கள். 16-ஆம் தேதி இரவு இன்ஸ்பெக்டர் பாண்டி குடித்துவிட்டு காலேஜுக்குள் நுழைஞ்சு தகராறு பண்ணியிருக்கார். ‘ஏன் இப்படித் தகராறு பண்றீங்க’ன்னு கேட்டதுக்கு ரவி மேல கொலை முயற்சி உட்பட எட்டு பிரிவுகள்ல வழக்குப் போட்டிருக்காங்க. இதையே புகாராக அனுப்பி  அ.தி.மு.க-வுல இருந்தும் அவரை நீக்க வெச்சிட்டாங்க” என்றார்.

வழக்கறிஞர் குற்றச்சாட்டு பற்றி மீண்டும் இன்ஸ்பெக்டர் பாண்டியிடம் கேட்டோம். “அனுமதியோடுதான் மணல் அள்ளுகிறார்கள் என்றால், ஏன் எங்களைப் பார்த்து ஓடவேண்டும்? அப்படியே ரசீது போட்டு மணல் அள்ளி வந்தாலும் காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரைதான் மணல் அள்ள அனுமதி உண்டு. அவர்கள் கல்லூரிக்குப் பின்னால் பாலாற்றில் அனுமதி பெறாமல் மணல் குவாரி இயங்கி வருவதாகப் புகார் உள்ளது. விரைவில் சோதனை நடத்துவோம். அப்போது உண்மை தெரியும். இந்தப் பிரச்னையிலிருந்து அவர்கள் தப்பிப்பதற்காக நான் குடித்திருந்ததாகக் கூறுகிறார்கள். நான், கல்லூரியிலிருந்து சென்று மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்தேன். குடித்திருந்தால், நான் ஏன் மருத்துவமனைக்குச் செல்கிறேன்?” என்றார்.  

“ஆட்சியே எங்களோடதுதான்... மரியாதையா போயிடு!”

 ஜி.ஜி.ரவி பற்றி வேலூர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், “2006-ல்தான் ரவி அ.தி.மு.க-வில் இணைந்தார். பிறகு, கவுன்சிலர் ஆனார். 2011-ல் டாக்டர் விஜய் அமைச்சர் ஆனதும் அவர் பெயரைப் பயன்படுத்தி வசூல், கட்டப்பஞ்சாயத்து என ரவி ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது. அதனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பிறகு, மீண்டும் கட்சிக்குள் வந்தார். இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கட்சியைவிட்டு நீக்கப்பட்டு உள்ளார்” என்றார்கள்.

ஜி.ஜி.ரவி மீது கொலை முயற்சி உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. தற்போது அவர், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தது மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அமைந்துவிட்டது.

 - அ.அச்சணந்தி
படங்கள்: ச.வெங்கடேசன்