Published:Updated:

மூளைச்சலவையால் சந்நியாசி ஆக்கப்பட்டார்களா?

மூளைச்சலவையால் சந்நியாசி ஆக்கப்பட்டார்களா?
பிரீமியம் ஸ்டோரி
News
மூளைச்சலவையால் சந்நியாசி ஆக்கப்பட்டார்களா?

சிக்கலில் ஈஷா யோகா மையம்சர்ச்சை

மூளைச்சலவையால் சந்நியாசி ஆக்கப்பட்டார்களா?

ங்கள் மகள் கீதா எம்.டெக் முடிச்சுட்டு, லண்டனில் மிகப் பெரிய தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகச் சம்பளத்தில் வேலை பார்த்தாள். இளைய மகள் லதா பி.டெக் முடிச்சிருந்தாள். இவங்க ரெண்டு பேரையும் ஈஷா யோகா மையத்துல மூளைச்சலவை செய்து சந்நியாசி ஆக்கிட்டாங்க. எங்களோட சொத்துக்களையும் ஈஷா நிறுவனத்தினர் அபகரிக்கப் பார்க்குறாங்க” என்று பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பி இருக்கிறார்கள் கோவையைச் சேர்ந்த காமராஜ், சத்தியஜோதி தம்பதியர்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் காமராஜ். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர் தற்போது, தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரிடம் பேசினோம். “எங்கள் மகள்களை நாங்கதான் ஈஷா யோகா வகுப்புக்குக் கூட்டிட்டுப் போனோம். அடுத்து, தொடர்ச்சியாக ஈஷா வகுப்புக்குப் போனாங்க. அந்த நேரத்துல ஏதேதோ காரணங்கள் சொல்லி, ஈஷாவில் வேலை தர்றதாகச் சொல்லி எங்கள் மகள்களுக்கு முக்கியப் பொறுப்பு கொடுத்தாங்க. எங்களுக்கு யோகாவுல ஆர்வம் இருந்ததால நாங்களும் அனுமதிச்சோம். பொண்ணுங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வருவாங்க. நாங்களும் போய்ப் பாத்துட்டு வந்தோம். ஆனா, கடந்த ரெண்டு மாசமா போனும் பண்ணலை. வீட்டுக்கும் வரலை. நாங்க போனப்போ, எங்களோட வர மறுத்துட்டாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகலை. அவங்களை மொட்டை அடிச்சு சாமியாரா ஆக்கிட்டாங்க.

நாங்கள் தொண்டு நிறுவனத்தை நடத்திட்டு இருக்கோம். 5 ஆயிரம் குழுக்களுக்கு ரூ.20 கோடி வரை கடன் கொடுத்துள்ளோம். அதை அப்படியே ஈஷாவோட இணைக்கச் சொன்னாங்க. நாங்க மறுத்தோம். எங்களை மிரட்ட ஆரம்பிச்சாங்க. அப்போதான் இவங்க சொத்துக்காக எங்க பொண்ணுங்களை மூளைச்சலவை செஞ்சு அடைச்சு வெச்சது தெரியவந்துச்சு. உடனே கலெக்டர், எஸ்.பி-கிட்ட புகார் கொடுத்தோம்” என்றார்.

மூளைச்சலவையால் சந்நியாசி ஆக்கப்பட்டார்களா?

நம்மிடம் பேசிய சத்தியஜோதி, “அங்கேயே (ஈஷா) இருந்து அங்கேயே செத்தால்தான் மோட்சம் கிடைக்குமாம். இங்கே வந்தால் நரகமாயிடுமாம். இப்படி எல்லாம் சொல்லி என் பொண்ணுங்களை மூளைச்சலவை பண்ணியிருக்காங்க. ‘நீங்க மொட்டை அடித்தால்தான் கல்யாணம் பண்ணச் சொல்ல மாட்டாங்க’னு சொல்லி அவங்களை மொட்டை அடிக்கவும் வற்புறுத்தி இருக்காங்க. அவங்க கொடுக்கறதைத்தான் சாப்பிடணுமாம். அங்க பயன்படுத்துற ஊதுபத்தியை முகர்ந்து பார்த்தாலே மயக்கமா வருது. எல்லாத்துலயும் ஏதோ கெமிக்கல் பயன்படுத்துறாங்க. அமாவாசை, பெளர்ணமி, சிவராத்திரி போன்ற நாட்களில் கொண்டாட்டமாக இருக்கிறது. என் பெரிய பொண்ணுக்கு தமிழ், இங்கிலீஷ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் தெரியும். அதனால தான், ஈஷாவுல முக்கியப் பொறுப்புக் கொடுத்து இருக்காங்க. ரெண்டு பேரும் வெளியே வந்தால் ஈஷாவைப் பற்றி வெளியே தெரியும். அதனால, அவங்களை மிரட்டியும், மூளைச்சலவை செஞ்சும் வெச்சிருக்காங்க. இதை எல்லாம் செய்தியா வந்தா என் பொண்ணுங்களைக் கொன்னுடுவாங்களோனு பயமா இருக்கு. எங்க பொண்ணுங்களைக் காப்பாத்தணும். நாங்க போலீஸ்ல புகார் கொடுத்தப்போ, எங்க பொண்ணுங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாங்க. ஆனா, அவங்கக்கிட்ட எங்களைத் தனியாப் பேசக்கூட அனுமதிக்கலை. ஆட்கள் சுற்றி நின்னு தடுத்துட்டாங்க” என்று கண்கலங்கியவாறு பேசினார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர் கலையரசு, “ஈஷா நிர்வாகம் மீது இதுபோன்ற புகார் நீண்டகாலமாகவே உள்ளது. அது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை. சொத்துக்களுக்காக இளம்பெண்கள் மூளைச்சலவை செய்து சந்நியாசியாக ஆக்கப்படுகிறார்களா என்ற கோணத்தில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

மூளைச்சலவையால் சந்நியாசி ஆக்கப்பட்டார்களா?

ஈஷா நிர்வாகத்தைத் தொடர்புகொண்டோம். சுவாமி ஏகா என்பவர் கடிதம் மூலம் விளக்கம் அளித்தார். அதில், “மா மதி (கீதா), மா மாயு (லதா) ஆகியோரின் பெற்றோர் எம்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் இருவரும் சுய விருப்பத்தின் பேரிலேயே ஈஷா யோகா மையத்தில் தங்கி இருக்கிறார்கள். யாரும் அவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களது பெற்றோர் குற்றச்சாட்டில் இம்மியளவும் உண்மை இல்லை. ஈஷா அறக்கட்டளை பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டினை வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே கீதா, லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் இருந்து பேசும் வீடியோ காட்சி ஒன்றையும் ஈஷா நிர்வாகத்தினர் அனுப்பிவைத்தனர். அதில், “நாங்கள் இங்கே வந்து ஏழு வருடங்கள் ஆகின்றன. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு புகார் கூறியுள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது. கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கிறது. துறவறப் பாதையை நாங்கள் ஏன் தீர்மானித்தோம் என்பதைத் தெளிவாகப் பெற்றோரிடம் எடுத்துச் சொல்லித்தான், இந்தப் பாதையைத் தேர்வு செய்தோம். விவேகானந்தர், புத்தர், இயேசு எல்லாம் தன் அப்பா, தன் அம்மா எனப் பார்த்திருந்தால் இந்த மாதிரியான வாய்ப்புக் கிடைத்திருக்குமா? இறந்துபோன சந்நியாசிகளைத்தான் அங்கீகரிப்பீர்களா? துறவறம் என்பது எல்லா மதங்களிலும் இருக்கிறது. யோகாவில் இருப்பது பெரிய விஷயம் இல்லை. இங்கே நாங்கள் வந்தபோது, ‘நீங்கள் ஏன் வெளியே போய் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது?’ என்றுதான் கேட்டார்கள். துறவறம் என்பதை இவர்கள் ஊக்குவிக்கவில்லை. இதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதைப் பார்த்த பின்னர்தான் துறவறம் கொடுத்தார்கள்.

மூளைச்சலவையால் சந்நியாசி ஆக்கப்பட்டார்களா?

அதனால், இங்கே வருபவர்களுக்கு எல்லாம் இப்படிச் செய்துவிடுவார்கள் என யாரும் பயப்பட வேண்டாம்.  ஒரு நாள் யோகா செய்தாலே அத்தனை மாற்றம் நடக்கிறது. வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் இருக்க வேண்டும் என நினைப்பதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஈஷாவுக்கு எங்களை அறிமுகப்படுத்தியதே எங்கள் பெற்றோர்தான். இங்கு சேவையாற்றுவதும், சந்நியாசியாக ஈஷாவில் இருக்கிறேன் எனச் சொல்வதும் எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. இங்கு, மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் நாங்கள் இங்கே இல்லை. சுயவிருப்பத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ‘என் மகள்கள் துறவியாக இருக்கிறார்கள்’ என்பதில் என் பெற்றோர் பெருமையாக நினைக்கவில்லை. அதுதான் பிரச்னை. என்றைக்கு அவர்கள், தங்கள் பெண்கள் சரியான பாதையைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று உணர்கிறார்களோ, அன்றுதான் அவர்கள் பெருமைப்படுவார்கள். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று சொல்லி இருந்தனர்.

சர்ச்சைக்குள் சிக்காத சாமியார்கள்தான் இல்லையே!

- ச.ஜெ.ரவி